பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஐகோர்ட்டு உத்தரவு

 

 

palil kalappadam

 

 

பாலில் கலப்படம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பால் நிறுவனங்கள், பால் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருக்க ‘ஹைட்ரஜன் பெராக்சைட்’, ‘குளோரின்’ போன்ற வேதிப்பொருட்களை கலப்பதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
இவரது குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சூர்யபிரகாசம் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் அதில் கூறி இருப்பதாவது:-

‘குழந்தைகள் முதல் முதியோர் வரை உட்கொள்ளும் பாலில் உடலுக்கு கேட்டை ஏற்படுத்தும் வேதிப் பொருட்கள் கலக்கப்படுவதாக அமைச்சரே குற்றம் சாட்டியுள்ளார்.

அதேநேரம், இதுபோன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைச்சரே இந்த குற்றச்சாட்டை கூறியிருந்தும், அந்த பால் நிறுவனங்கள் மீது தமிழக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர்.

மேலும், தனியார் பால் நிறுவனங்கள் எல்லாம் தமிழகத்துக்கு வெளியில், அண்மை மாநிலங்களில் அமைந்துள்ளதால், கலப்படம் செய்யும் அந்த நிறுவனங்கள் மீது தமிழக போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
எனவே, இந்த கலப்படம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும். பாலில் கலப்படம் செய்யபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தில், திருத்தம் கொண்டு வர வேண்டும்’.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘பாலில் வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது.

இதுகுறித்து தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று கருத்து தெரிவித்தனர்.

அப்போது அரசு பிளீடர் குறுக்கிட்டு, ‘வேதிப்பொருட்கள் கலப்படம் செய்யப்படும் தனியார் பால் நிறுவனத்தின் பாலை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு விரைவில் கிடைத்து விடும்’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘ஒருவேளை வேதிப்பொருட்கள் பாலில் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கருத்து கூறினார்கள்.

இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top