கவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்

 

 

apthul

 

 

 

சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் அப்துல் ரகுமான், மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். சென்னை பயூர் வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது.

தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர். இவரது முதல் கவிதை தொகுப்பு ‛பால்வீதி’ 1974ம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார்.

வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்துறை தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற இவர், 1999ல் ‘ஆலாபனை’ கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வென்றார். கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர்  அப்துல் ரகுமானுக்கு வயது 79. கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், உடல்நலம் தேறியதால் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பினர். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென மூச்சுத்திண்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்துல்ரகுமான், சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார்.

அப்துல் ரகுமானுக்கு மெஹபூப் பேகம் என்ற மனைவியும், சையது அஷ்ரஃப், வஹிதா என்ற பிள்ளைகளும் உள்ளனர். அப்துல் ரகுமானின் உடல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கவிஞர் அப்துல் ரகுமான், திமுக ஆட்சியில் வக்ஃபு வாரிய தலைவர் பதவியை வகித்தார்.

கவிஞர் அப்துல் ரகுமானின் மகன் அமெரிக்காவில் இருந்து வரவேண்டியது இருப்பதால், இறுதி சடங்கு நாளை மறுநாள் (ஜுன் 4ம்தேதி) நடக்கவிருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top