திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டம்:பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

மே 17′ இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி  தமிழர் விடியல் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் டைசன்  உட்பட 4 பேர் மீது  இனப்படுகொலைக்கு  நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டம்  போடபட்டுள்ளதை பூவுலகின் நண்பர்கள்    கண்டித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

ஈழத் தமிழர் நினைவேந்தல் நிகழ்வை மெரினா கடற்கரையில் வைத்து நடத்த முயற்சித்தபோது கைது செய்யப்பட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் இதர தோழர்களை சென்னை காவல்துறை குண்டர் சட்டத்தின் கீழ் இன்று கைதுசெய்திருக்கிறது.

மெரீனா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முயற்சித்ததற்காகக் கைதுசெய்யப்பட்ட திருமுருகன் உள்ளிட்டோரை, கொடுங்குற்றங்களைத் தொடர்ச்சியாக இழைப்பவர்களைக் கைதுசெய்வதற்கான குண்டர் சட்டத்தின் கைதுசெய்வது ஏற்க முடியாதது.
மே 17 இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள், கூடங்குளம் அணுவுலை, நியூட்ரினோ, நெடுவாசல் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் தம்மை இணைத்துக்கொண்டு செயல்பட்டவர்கள். தொடர்ந்து அரசின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அரங்கங்களில் இந்தியாவில் நடந்துவரும் மனித உரிமைகள் மீதான அத்துமீறல்கள் குறித்து திருமுருகன் காந்தி ஆதாரங்களுடன் பேசினார். ஜல்லிக்கட்டு தொடர்பான வன்முறை குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்தில், அந்த வன்முறையை காவல்துறை திட்டமிட்டு நடத்தியதாக உரிய ஆதாரங்களைச் சமர்ப்பித்திருந்தார். இந்த நிலையில்தான், திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

இது ஜனநாயக விழுமியங்களுக்கும் அரசியல் சாசனம் உறுதியளிக்கும் சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்கும் எதிரான செயல்பாடு. இது போன்ற கைது நடவடிக்கைகளின் மூலம் போராடும் மக்களின் குரலை நசுக்கலாம் என்று தமிழக அரசு நினைப்பது ஜனநாயக அடிப்படைகளுக்கு எதிரான ஒரு செயல் என்பதை பதிவு செய்ய பூவுலகின் நண்பர்கள் விரும்புகிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் கோருகிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top