மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு: கேரளா, கர்நாடகத்தில் முதல்வர்கள் அறிவிப்பு

 

seetha

 

 

கேரள மாநில அரசும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகம், மேகாலயா, மிசோராம் மாநில அரசுகளும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாட்டு இறைச்சி தடையை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர்கள் அறிவித்துள்ளனர்,.ஆனால் தமிழகத்தில் மக்கள் எதிர்ப்பு இருந்தாலும் எடப்பாடி அரசு பாஜக வுக்கு ஆதரவாக இருப்பதால் வாய் மூடி மௌனமாக இருக்கிறது.

 

பசு, எருமை, அதன் கன்றுக் குட்டிகள், ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கவோ வாங்கவோ கூடாது என மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும், இறைச்சி பிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரம்ஜான் தொடங்கும் இந்த நேரத்தில் இந்த தடை உத்தரவு அறிவித்து இருப்பதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் தடை உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நேற்று நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தது. பா.ஜனதா அலுவலகம் முன்பு காங்கிரசார் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிடும் போராட்டம் நடத்தினார்கள்.

கம்யூனிஸ்டு ஆட்சி நடக்கும் கேரள மாநில அரசும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகம், மேகாலயா, மிசோராம் மாநில அரசுகளும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்-மந்திரிகள் அறிவித்துள்ளனர்.

கேரளாவில் மத்திய அரசின் சட்டத்துக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்கு ஆளும் கட்சியான கம்யூனிஸ்டு கட்சியினரும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 210 இடங்களில் மாட்டுக்கறி திருவிழா நடத்தி பொதுமக்களுக்கு விருந்து அளித்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்தும் இன்றும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

எதிர்ப்பு வலுத்து வருவதால் மத்திய அரசின் தடை உத்தரவை கேரளாவில் அமல்படுத்தப் போவதில்லை என அம்மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அந்த சட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது எப்படி? என்பது பற்றி அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இது தொடர்பாக முதல்-மந்திரி பினராய் விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

 

piranayan

கேரள மக்களில் பெரும் பாலானோர் விவசாயிகள். இவர்கள் காளைகள், கன்றுகளை நம்பியே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். தாங்கள் வளர்க்கும் மாடுகள் வயது முதிர்ந்து விட்டால் அவற்றை கடைகளில் விற்பனை செய்து தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில் காளைகளை விற்க கூடாது என்று சட்டம் வரும்போது அந்த மாடுகளை விவசாயிகள் கொன்று புதைக்கத் தான் வேண்டும். அப்படி ஒரு நிலை வரும்போது ஏழை விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும்.

தற்போது ரமலான் நோன்பு சமயத்தில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது ஆகும். மத்திய அரசு தன்னிச்சையாக ஒரு முடிவு எடுத்து அறிவித்து இருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

கால்நடை வர்த்தகம் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது நாட்டின் மதசார் பற்ற பண்புகளையும், பல லட்சம் மக்களின் வாழ் வாதாரத்தையும் பாதித்து விடும். அவசர கோலத்தில் இப்படிப்பட்ட சட்டம் கொண்டு வரப்படுவது நாட்டின் பன்முகத் தன்மையை நிலைநாட்டுவதற்கு சவாலாக அமைந்து விடும்.

இதுபோன்ற தீவிர நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு மாநிலங்களின் ஆதரவை பெற்று இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அவ்வாறு செயல்படாதது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி ஜனநாயகத்துக்கு தீங்கிழைத்து விடும். இந்த சட்டம் மாநில அரசுகளின் உரிமையில் குறுக்கிடும் வகையில் உள்ளதால் இந்த விவகாரத்தில் புதிதாக பிறக்கப்பட்டுள்ள விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி கூறுகையில் இந்த தடை சட்டம் கேடு விளைவிக்கும். கேரள மக்களை பெரிதும் பாதிக்கும். ஏராளமான தொழில்களும் நலிவடையும். பால் தொழிலை நம்பியே பல குடும்பங்கள் உள்ளன. இதுபோன்ற சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் பசு வளர்ப்பதையே மக்கள் விரும்ப மாட்டார்கள். இந்த சட்டத்தை எதிர்க்க மாநில அரசுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவோம். அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி கூறும்போது இந்த சட்டத்தை கிழித்து குப்பையில் தான் போட வேண்டும். எந்த வகையிலும் பொருத்தமில்லாத இந்த சட்டம் ஆதிகால தொழிலான மாடு வளர்ப்பை தடை செய்யும் விதத்தில் உள்ளது. கேரள மக்கள் ஒருபோதும் இந்த சட்டத்தை ஏற்க மாட்டார்கள் என்றார்.

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் அவர் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் உத்தரவில் கர்நாடக அரசுக்கு உடன்பாடு இல்லை. மாட்டு இறைச்சிக்கு தடைவிதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. மாநில அதிகார வரம்புக்கு உட்பட்டது, எனவே நாங்கள் தடையை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளார்.

மேகாலயா மாநில மந்திரி ஜெனித்சங்மா கூறுகையில், மத்திய அரசு சர்வாதிகார போக்குடன் மாநில அரசுகளை வழி நடத்திச் செல்ல நினைக்கிறது. மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்க தடைவிதித்து இருப்பதால் மத்திய-மாநில அரசுகளின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

இதேபோல் மிசோராம் மாநில அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதா ஆட்சி நடைபெறும் அசாம், உத்தரபிரதேசம், மராட்டியம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், கோவா, மணிப்பூர், மாநில அரசுகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மாநில அரசு இந்த உத்தரவுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனமாக இருக்கிறது.

அமைச்சர்களிடம் இது பற்றி கேட்டபோது, அவர்கள் பதில் தெரிவிக்க மறுத்து விட்டனர்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top