இந்த நூற்றாண்டின் இறுதியில் மாற்று சினிமா வந்து விடும்: வைரமுத்து

sathuranga vettai audio launchநடிகர்-டைரக்டர் மனோபாலா தயாரிப்பில், வினோத் டைரக்டு செய்துள்ள ‘சதுரங்க வேட்டை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. படத்தின் பாடல்களை எழுதிய கவிஞர் வைரமுத்து விழாவில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

‘‘மனோபாலாவை சுமார் 35 ஆண்டுகளுக்கு முன், பாரதிராஜா அலுவலகத்தில் சந்தித்தேன். இப்போதும் அவரது தோற்றத்தில் மாற்றம் இல்லை. அவரது குணமும், எடையும் இன்று வரைக்கும் மாறவில்லை. 3 தலைமுறை கலைஞர்களை ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கிற சாதனையை தன் படத்தின் மூலம் செய்திருக்கிறார்.

இதை எல்லோரும் செய்துவிட முடியாது. இந்த படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது இருந்த நெகிழ்ச்சியை விட, காட்சிகளைப் பார்த்து அடைந்த நெகிழ்ச்சி அதிகம். ஒரு படத்தின் முன்னோட்டம் பார்த்து, பாடல் காட்சிகளைப் பார்த்து, ஒட்டுமொத்த படத்தை எடை போட முடியாது.

மொழி, நடிப்பு, அழகு, ஒலி, ஒளி, என காட்சி ஒவ்வொன்றும் தனித்தனியே அழகாக தெரியலாம். ஆனால் ஒட்டு மொத்த அழகே முக்கியம். ஒரு படத்தை முழுவதுமாக பார்த்து எடை போடும் தகுதி கட்டணம் கொடுத்துப் பார்க்கும் ரசிகனுக்கு மட்டுமே உண்டு. அவன்தான் கருத்து சொல்லும் கடைசி நீதிபதி.

மனோபாலா 40 படங்கள் இயக்கி இருக்கிறார். 175 படங்கள் நடித்து இருக்கிறார். அவர் என் சக கலைஞன். பாடல் எழுத சம்பளம் எவ்வளவு? என்று என்னிடம் கேட்டபோது, ‘‘கொடுப்பதைக் கொடு’’ என்று வாங்கிக்கொண்டேன். நான், சினிமாவை நேசிக்கிறேன்.

ஒரு காலத்தில் தயாரிப்பாளர்கள் கதாநாயகர்களாக இருந்தார்கள். இன்று காலம் மாறிவிட்டது. தேவையான பணமும், தேவைக்கு அதிகமான பணிவும் உள்ளவர்களே இன்று தயாரிப்பாளர்களாக இருக்க முடியும். இங்கே மாற்று சினிமா பற்றி ஞானி பேசினார். அந்த மாற்று சினிமா எப்போது வரும்? இந்த நூற்றாண்டின் இறுதியில் வரக்கூடும்.

அப்போது சினிமா திரையரங்குகள் தாண்டி வரும். வினியோகஸ்தர்களின் தேவை தீர்ந்து விடும். சிறிய முதலீட்டில் படங்கள் வரும். வீட்டுக்கு வீடு செய்தித்தாள் போடப்படுவது போல் புதுப்பட சி.டி.க்கள் வீசி எறியப்படும். அப்போது தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும். காலம் மாறும். கலை இன்னும் மேம்படும்.’’

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

விழாவில் பட அதிபர்கள் கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், கே.முரளிதரன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், டைரக்டர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், சசி, ஸ்டான்லி, பாலாஜி மோகன், நடிகர் விவேக், நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ்,

அம்பிகா, ரேகா, ரோகிணி, அருணா, படத்தின் கதாநாயகன் நட்ராஜ், கதாநாயகி இஷாரா நாயர், இசையமைப்பாளர் ஷான் ரால்டன் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். மனோபாலா வரவேற்று பேசினார். நடிகை சுஹாசினி, படவா கோபி, ரம்யா ஆகிய மூவரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top