பைனலுக்கு வருவது யார்? கொல்கத்தா, மும்பை இன்று மோதல்

 

 

kalkatda

 

 

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சி உள்ளன. ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்ட நிலையில், மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் கள இறங்குகின்றது.

இரண்டு முறை சாம்பியனான மும்பை அணி முதலாவது தகுதி சுற்றில் 20 ரன்கள் வித்தியாசத்தில் புனேயிடம் தோற்றது. இருப்பினும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததால் இன்னொரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

நடப்பு தொடரில் லீக் சுற்றில் கொல்கத்தாவை சந்தித்த இரண்டு ஆட்டங்களிலும் மும்பை அணியே (9 ரன் மற்றும் 4 விக்கெட் வித்தியாசங்களில்) வெற்றி பெற்றிருந்தது. இதில் கொல்கத்தாவுக்கு எதிராக வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் 24 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்பட்ட போது ஹர்திக் பாண்ட்யாவின் (11 பந்தில் 29 ரன்) மாயாஜால பேட்டிங்கால் மும்பை அணி ஒரு பந்து மீதம் வைத்து வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிப்பது போல் சென்றது. ஆனால் கடைசி 5 லீக்கில் 4-ல் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டுவதே கடினமாகி விட்டது.

மழையால் பாதிக்கப்பட்ட வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்த கொல்கத்தா அணி, 3-வது முறையாக இறுதி சுற்றை எட்டும் முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது.

ஐ.பி.எல். வரலாற்றில் கொல்கத்தா அணி, ஒரு அணிக்கு எதிராக அதிகமான தோல்விகளை சந்தித்து இருக்கிறது என்றால் அது மும்பைக்கு எதிராகத்தான். அந்த அணிக்கு எதிராக இதுவரை 20 ஆட்டங்களில் விளையாடி அதில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 15 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது.

முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க கொல்கத்தா அணிக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதை பயன் படுத்திக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து கவனிப்போம்.

பொதுவாக பெங்களூரு மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவார்கள். ஆனால் இந்த சீசனில் ஆடுகளத்தன்மை மெதுவாக இருப்பதால் பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கிறது. 161 ரன்களே இங்கு இந்த முறை எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இன்றைய ஆட்டத்திலும் பந்து வீச்சின் தாக்கம் கணிசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலையை பொறுத்தமட்டில் வானம் கொஞ்சம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்வதற்கு 20 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top