அரசு பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது; பேச்சுவார்த்தையில் உடன்பாடு:

 

 

buses

 

அமைச்சர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் 2-வது நாளாக அரசுப் பேருந்துகள் நேற்றும் இயங்காததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று முன்தினம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். சில இடங்களில் 14-ம் தேதி மாலையே வேலைநிறுத்தம் தொடங்கியது.

ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் இயக்கம் முற்றிலும் முடங்கியது. பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்களை வைத்து குறைந்த அளவிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகளும் பயணிகளுக்காக பயன்படுத்தப்பட்டன. முதல்வர் உத்தரவின்பேரில் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் மேற்பார்வையில் பேருந்து போக்குவரத்து கண்காணிக்கப்பட்டது.

ஊழியர்களின் வேலைநிறுத்தம், 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததாலும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததாலும் மக்கள் கடும் அவதிப்பட்டனர். ஆட்டோ, டாக்ஸி, வேன்கள் என கிடைத்த வாகனத்தில் எல்லாம் மக்கள் பயணிக்கத் தொடங்கினர்.எதைப்பற்றுயும் கவலை படாமல் தமிழக அரசு இயங்கியது

தனியார் நிறுவனங்களின் ஊழியர்களை அழைத்துவர பயன்படுத்தும் சொகுசு பேருந்துகள், பொறியியல் கல்லூரிகளின் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள் என ஒவ்வொரு இடங்களில் இருந்தும் சுமார் 170 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த பேருந்துகளில் ரூ.5, ரூ.10, ரூ.15 என கட்டணம் வசூலிக்கப்பட்டன. சில பேருந்துகளில் ஒரே கட்டணம் ரூ.10 என்று கூறி வசூலித்தனர். வழித்தடங்கள் தெரியாததால் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர். அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய வில்லை.

பேருந்து இயக்கம் குறைவாக இருந்த பகுதிகளில் பொதுமக்கள் பெரும்பாலும் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வேன் போன்றவற்றை நம்பியே பயணித்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் தங்கள் இஷ்டம்போல கட்டணத்தை வசூலித்தனர்.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும், கடந்த 2 நாட்களாக ஓலா, உபேர் போன்ற கால்டாக்ஸிகளுக்கும் வருமானம் அதிகரித்துள்ளது. ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை – அரக்கோணம், சென்னை – கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதற்கிடையே, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை எதிர்த்து மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் குமரய்யா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், என்.சேஷசாயி ஆகியோரைக் கொண்ட அமர்வு, ‘‘போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். அப்படித் திரும்பாவிட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கலாம். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று மாலை 5 மணிக்கு அமைச்சர்களுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு 7 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது.

அதன்பின், அமைச்சர்கள் குழுவினர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவித்தனர். முதல்வர் அளித்த ஆலோசனையின்பேரில் தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. இரவு 9.30 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது.ரூ 1250 கோடி தொழிலாளர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.என்றும் முதல் கட்டமாக ரூ 750 கோடி வரவு வைக்கப்பட இருக்கிறது என்றும்  ,13 வது ஊதிய குழு ஒப்பந்தம் பற்றி அடுத்தக்கட்டமாக பேசுவோம் முதலில் போராட்டத்தை வாபஸ் வாங்குங்கள் என்று பேசப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவதாக அரசு அளித்த உறுதியின் பேரில் தொழிற்சங்கங்கள் இந்த முடிவை அறிவித்துள்ளன.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top