ஹாஜி மஸ்தான் கதையல்ல: ‘ரஜினி – ரஞ்சித்’ படக்குழு மறுப்பு

rajini

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல என்று படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

‘2.0’ படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்துள்ளார் ரஜினி. இதனை தனுஷ் தயாரிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

மே 28ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் கதை என்று தகவல்கள் வெளியானது. இது குறித்து ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா ரஜினிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “எனது தந்தையை நிழல் உலகதாதா மற்றும் கடத்தல்காரர் போன்று சித்தரித்துப் படம் எடுக்கக்கூடாது. அவரை எந்தவொரு நீதிமன்றமும் குற்றவாளி என்று கூறவில்லை. அவரைப் பற்றிய படமொன்றால் என்னிடம் வாருங்கள். அவருடைய முழுக்கதையையும் உங்களுக்குச் சொல்கிறேன்.

அவரது வாழ்க்கையை எனக்கும் சினிமாவாக எடுக்க ஆசையுள்ளது. ஆகையால், அவரை நீங்கள் தவறாக சித்தரித்துப் படம் எடுத்தால், தங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வுண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தை பற்றியும் அதன் கதையை பற்றியும் பத்திரிகைகளில் பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்றாக ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றின் பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்று ஒரு செய்தியும் பத்திரிகைகளில் வெளியானது.

அந்த செய்தியின் அடிப்படையை கொண்டு ஹாஜி மஸ்தான் அவர்களின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா அவர்கள் இது சம்பந்தமாக ரஜினிகாந்த் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் தொடர்பாக இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நாங்கள் தயாரித்து வரும் இப்படம் மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே. இப்படத்தின் கதை, யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது.

குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல.

இது சம்பந்தமாக படத்தின் இயக்குநர் ரஞ்சித் தன்னை தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்களிடம் இது “ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதையல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ‘ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதை’ என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்களின் இதர விளக்க அறிக்கையை அளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top