தமிழகம் முழுவதும் போக்குவரத்து வேலைநிறுத்தம்: பொதுமக்களைப் பற்றி கவலை படாத அரசு

 

perunthukal

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,700 கோடி நிலுவை தொகை, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் நடந்த 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து போக்குவரத்து வேலைநிறுத்தம் தொடங்கியது. அறிவிக்கப்பட்டதற்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே வேலைநிறுத்தம் தொடங்கியது.

சென்னையில் 20-ல் இருந்து 30% பேருந்துகள் மட்டுமே இயக்கம்:

இன்று (திங்கள்கிழமை) காலை தலைநகர் சென்னையில் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை தாம்பரத்தில் 2 பணிமனைகள் உள்ளன. ஒன்று மாநகரப் போக்குவரத்துப் பணிமனை. இங்கிருந்து ஒவ்வொரு நாளும் 152 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இன்று காலை வெறும் 30% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல் அரசுப் போக்குவரத்து பணிமனையில் இருந்து புறப்பட வேண்டிய 51 பேருந்துகளிலும் 20% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றது.

குரோம்பேட்டையில் இருந்து இயக்கப்பட வேண்டியவை 159 பேருந்துகள், ஆலந்தூரில் இருந்து இயக்கப்பட வேண்டியவை 136 பேருந்துகள், ஆதம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட வேண்டியவை 55 பேருந்துகள், செங்கல்பட்டில் இருந்து இயக்கப்பட வேண்டியவை 53 பேருந்துகள். ஆனால், ஒட்டுமொத்தமாகவே 20% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றது.

குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் போன்ற பகுதிகளில் மின்சார ரயில் சேவை மக்கள் பயன்படுத்துவதால் ஓரளவு பாதிப்பு குறைவு எனக் கூறலாம். இருப்பினும் வேளச்சேரி – பள்ளிக்கரணை, கிழக்கு தாம்பரம் – கேம்ப் ரோடு இடையே பேருந்து சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி மக்கள் அருகில் இருக்கும் ரயில் நிலையங்களுக்குக்கூட செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் கோயம்பேடு பணிமனை, சைதாப்பேட்டை பணிமனைகளில் இருந்தும் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.

பேருந்து கண்ணாடி உடைப்பு:

இதற்கிடையில், சென்னை குரோம்பேட்டை பணிமனை அருகே பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 431 அரசு பேருந்துகளில் 223 பேருந்துகள் ஒடவில்லை. கிட்டத்தட்ட 50% பேருந்துகள் இயக்கப்படவில்லை. அண்ணா தொழிறசங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவில்லை. அவர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாலும் மினி பேருந்துகள் இயக்கப்படுவதாலும் விருதுநகரில் பெரும் அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. விருதுநகர் பழைய பேருந்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கியது.

புதுச்சேரியில் கடும் பாதிப்பு:

புதுச்சேரியில் தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னை, சிதம்பரம், திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம், கும்பகோணம், அரக்கோணம், வேலூர் போன்ற இடங்களுக்குச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பேருந்து கழக தொழிற்சங்கத்தினர் பணிமனை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இருப்பினும் புதுச்சேரி அரசுப் பேருந்துகள் 45 மட்டுமே என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் உப்பளம் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூரில் மக்கள் அவதி:

திருப்பூர் பேருந்து பணிமனையில் இருந்து தினமும் 200 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இன்று காலை வெறும் 30 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றது.

இதனால், காலை நேரத்தில் பின்னலாடை நிறுவனங்கள், தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

கோவையில் 40% பேருந்துகள் இயக்கம்:

கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் முழுவீச்சில் இயங்குகின்றன. அரசுப் பேருந்துகள் 40% மட்டும் இயங்குகின்றன. அண்ணா தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் பங்கேற்காததால் 40% பேருந்துகள் அவர்களைக் கொண்டு இயக்கப்படுகின்றது.

மதுரையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை:

மதுரையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை. மதுரை மண்டலத்தில் மொத்தம் 1200 பேருந்துகள் உள்ளன. இவற்றில் 90% பேருந்துகள் இயக்கப்படவில்லை. 5% ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

ராமநாதபுரத்தில் பாதிப்பில்லை:

ஆனால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. இதேபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றது.

தனியார் பேருந்துகள், மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் பெருமளவில் இயங்காவிட்டாலும் குறைந்த அளவிலாவது இயங்குவதுபோல் காட்டிக் கொள்ளும் வகையில் பேருந்து டெப்போகளில் இருந்த பேருந்துகள் சில பேருந்து நிறுத்தங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

7 அம்ச முக்கிய கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் நடந்த 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது பற்றியும் தமிழக பொதுமக்களை பற்றியும் கவலைபடாமல் முதல் அமைச்சர் இருப்பது நல்ல அரசுக்கு அழகு அல்ல என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top