ஆதார் அட்டை விவகாரம்; மே 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை

 

Aadhar-

 

அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் 17-ம் தேதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் சாந்தா சின்ஹாவும் ஆதார் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் முத்தலாக் விவகாரம் தொடர்பான மனுக்கள் நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சாந்தா சின்ஹா சார்பில் நீதிபதிகள் முன் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், ஆதார் விவகாரமும் மிக முக்கியமானது. எனவே இதை அவசர வழக்காக கருதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் அவர், ‘‘ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மீறி, மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களுக்கான பலன்களை பெற ஆதாரை கட்டாயமாக்கி, அதற்கான அறிவிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு, கல்வி உதவித் தொகை ஆகியவற்றுக்கும் ஆதார் அட்டை கட்டயாமாக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், ‘‘ஏற்கெனவே 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் ஆதார் விவகாரத்தில் பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த சூழலில் ஆதார் சார்ந்த மனுக்களை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும்படி முறையிடுவது ஏற்புடையதாக இருக்காது’’ என்றார். இதைத் தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதி எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன் ஆதார் தொடர்பான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டது. மக்கள் விருப்பத்தின் பேரில் வங்கி கணக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், முதியோர் ஓய்வூதிய திட்டம், வருங்கால வைப்பு நிதி, பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டம் ஆகிய சில சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்தலாம் என்றும் அனுமதியளித்தது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top