ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை சந்திக்கும் பஞ்சாப் அணி

 

ipil

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே உறுதிசெய்து விட்டது. 2 முறை சாம்பியனான மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் தோல்வி கண்டது.

அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தவிர வேறு யாரும் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. மும்பை அணியின் பந்து வீச்சும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த ஆட்டத்தில் அமையவில்லை. அந்த தோல்வியில் இருந்து மீள மும்பை அணி முயற்சிக்கும். வான்கடே மைதானத்தில் மும்பை அணி இந்த சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே (புனே அணிக்கு எதிராக) தோல்வி கண்டது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 ஆட்டத்தில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. தனது எஞ்சிய 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டும் தான் அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து நினைத்து கூட பார்க்க முடியும் என்ற நெருக்கடியான நிலையில் பஞ்சாப் அணி இருக்கிறது. எனவே இன்றைய ஆட்டம் பஞ்சாப் அணிக்கு வாழ்வா-சாவா? போட்டியாகும்.

குஜராத் அணியிடம் வீழ்ந்ததால் அடுத்த சுற்று வாய்ப்பில் தொய்வை சந்தித்த பஞ்சாப் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் கேப்டன் மேக்ஸ்வெல் (44 ரன்), விருத்திமான் சஹா (38 ரன்கள்) ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டது. பந்து வீச்சில் மொகித் ஷர்மா, ராகுல் திவேதியா, மேட் ஹென்றி ஆகியோர் நேர்த்தியாக செயல்பட்டனர். அத்துடன் அபாரமான பீல்டிங்கும் எதிரணியின் ரன்குவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டது.

இந்தூரில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி கண்டு இருந்தது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க எல்லா வகையிலும் பஞ்சாப் அணி போராடும். புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தொடர மும்பை அணி தனது முழு பலத்தையும் காட்டும். இரு அணியிலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தக்கூடிய வீரர்கள் அதிகம் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top