மூன் ஜயே-இன் தென்கொரிய அதிபராக பதவியேற்றார்;

 

_South-Koreas-

தென் கொரியாவில் முதன்முதலாக ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரிய பெண் அதிபர் பார்க் கியுன் ஹை, தனது நெருங்கிய தோழி சோய் சூன் சில்லுடனான ஊழலில் சிக்கினார். இதன் காரணமாக அவரது பதவியை அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 10–ந் தேதி பறித்து உத்தரவிட்டது. இதையடுத்து 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. மே மாதம் 9–ந் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

இந்த தேர்தலில் 13 பேர் போட்டியிட்டனர் அவர்களில் 3 பேர் மட்டுமே முக்கிய வேட்பாளர்களாவர். அவர்கள் தாராளவாத ஜனநாயக கட்சி வேட்பாளர் மூன் ஜே இன், பழமைவாத லிபர்டி கொரியா கட்சி வேட்பாளர் ஹாங் ஜுன் பியோ, மையவாத இடதுசாரி மக்கள் கட்சி வேட்பாளர் ஆன் சோல் சூ ஆவர். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

 

வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.தொடக்கத்தில் இருந்தே ஜனநாயக கட்சி வேட்பாளர் மூன் ஜயே-இன் முன்னணியில் இருந்தார். முடிவில் அவர் அபார வெற்றி பெற்றார். அவர் 41.1 சதவீத வாக்குகள் பெற்றார்.

 

கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஹாங்ஜோன் பையோ 2-வது இடம் பிடித்தார். அவருக்கு 24.03 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. மிதவாதியான அகின் சியோல்-சூ 3-வது இடம் பிடித்தார். அவர் 21.4 சத வீதம் ஓட்டுகள் பெற்றார். மூன் ஜயே-இன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சியோல் நகரமே விழாக்கோலம் பூண்டது. அவரது ஆதரவாளர்களும், கட்சி தொண்டர்களும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஆரவாரம் செய்தனர்.

 

தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பு ஏற்க இருக்கும் மூன் ஜயே-இன்னுக்கு 64 வயது ஆகிறது. இவர் மனித உரிமைகள் கமி‌ஷனின் முன்னாள் வக்கீல் ஆவார். தேர்தலில் வென்றுள்ள மூன் ஜயே-இன் தென்கொரியாவின் 19-வது அதிபராவார். வடகொரியா ஆதரவாளரான இவர் சரியான சூழ்நிலை அமையும் போது அங்கு செல்ல விரும்புவதாக கூறினார்.புதிய அதிபராகும் மூன் ஜயே- இன்னுக்கு தென் கொரியாவின் நட்பு நாடான அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. .அண்டை நாடான ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மூன் ஜயே- இன், அதிபராக பதவியேற்றுக்கொண்டார். தனது நாடாளுமன்ற உரை நிகழ்த்திய மூன் ஜயே இன் வடகொரியாவுடனான உறவில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் பொருளாதார சிக்கலுக்கும் தீர்வு காணப்படும் என தெரிவித்தார். மேலும், சரியான சூழல் இருந்தால் வடகொரியா செல்ல தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top