மதுபானக் கடைக்கு எதிராக போராடிய 21 பேர் மீதான வழக்கு ரத்து

 

high court

 

திருமுல்லைவாயிலில் மதுபானக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 21 பேர் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடுத்துள்ள திருமுல்லைவாயிலில், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 21 பேரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு இளைஞர்களில் ஒருவரான பிரசன்னா என்பவரின் தாயார் இறந்து விட்டதாகவும், இறுதி சடங்கில் கலந்துகொள்ள அவருக்கு ‘பரோல்’ வழங்கவேண்டும் என்று சிறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதற்கு அதிகாரியிடம் இருந்து எந்த பதிலும் வராததால், சென்னை ஐகோர்ட்டில் பிரசன்னா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவர்களுடன் கைது செய்யப்பட்டவர்களும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுக்களை எல்லாம் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக கூறிய நீதிபதிகள், பிரசன்னாவுக்கும் மட்டும் ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டனர். அவரை (நேற்று) மாலை 6 மணிக்குள் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘இந்த ஐகோர்ட்டு நேற்று மாலை 6 மணிக்குள் பிரசன்னாவை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டும், அவரை சிறை அதிகாரிகள் விடுவிக்கவில்லை. அதனால், அவரது தாயார் உடல் இறுதி சடங்கு செய்யப்படாமல் உள்ளது’ என்று கூறினார்.

இதை கேட்ட நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘இந்த ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தால், போலீசார் அதை மதிப்பதே இல்லை. மாலை 6 மணிக்குள் பிரசன்னாவை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டோம்.

சென்னை புழல் சிறை கண்காணிப்பாளர் அவரை விடுதலை செய்யவில்லை. ஐகோர்ட்டையும், அரசு வக்கீல்களையும் மதிக்காமல் அவர் செயல்படுகிறாரா? ஐகோர்ட்டு உத்தரவை மதிக்காத சிறை கண்காணிப்பாளர், அப்பதவியை வகிக்க தகுதியில்லாதவர்.

இன்று காலை 11.30 மணிக்குள் பிரசன்னா சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவ்வாறு விடுவிக்கவில்லை என்றால், புழல் சிறை கண்காணிப்பாளர் இந்த ஐகோர்ட்டில் பிற்பகலில் நேரில் ஆஜராக வேண்டும். அவரும் நேரில் ஆஜராகவில்லை என்றால், தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் (டி.ஜி.பி.) ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியது வரும்’ என்று நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர்.

பின்னர் பிரசன்னா உள்ளிட்ட 21 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்வதாகவும் அறிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top