செயல் திட்டங்கள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு- சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 

 

tamizaka

 

 

விவசாயிகள் தற்கொலையை தடுப்பதற்கான செயல் திட்டங்கள் பற்றி 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தமிழ்நாடு பொதுநல வழக்கு மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்த பொதுநல வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஏப்ரல் 13-ந் தேதி நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்கும் வகையிலும், அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையிலும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை 2 வாரங்களுக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர் இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவுபவராக மூத்த வக்கீல் கோபால் சங்கர் நாராயண் (அமிகஸ் கியூரி) நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏப்ரல் 28-ந் தேதி தமிழக அரசின் சார்பில் 70 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், மனுதாரர் குறிப்பிட்டு உள்ளது போல் தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், இதுவரை 82 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளதாக தமிழக அரசிடம் தகவல் உள்ளது என்றும், அவர்கள் அனைவரும் பல்வேறு காரணங்களால் மரணம் அடைந்து இருக்கின்றனர் என்றும் கூறப்பட்டு இருந்தது.தமிழக அரசின் இந்த அறிக்கைக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்

இந்தநிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்டு உள்ள மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் வாதாடினார்.அவர் தனது வாதத்தின் போது கூறியதாவது:-

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு ஏற்கனவே விவசாயிகளுக்கான நிலத்திட்டங்கள் குறித்து 5 அறிக்கைகளை மத்திய அரசிடம் தாக்கல் செய்து உள்ளது. அந்த அறிக்கைகளில் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பரிந்துரைகள் வழங்கி இருக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில்தான் விவசாயிகளுக்கு, விவசாய விளைபொருட்களுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை குறித்து விழிப்புணர்வு குறைந்த அளவே உள்ளது.

சந்தையில் உள்ள கொள்முதல் விலை மற்றும் அரசாங்கம் நிர்ணயிக்கும் விலை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. அவை குறித்த தகவல்களும் அவர்களுக்கு சென்று சேரவில்லை. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் மாநில அரசு செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா வாதாடுகையில் கூறியதாவது:-

விவசாயிகளின் தற்கொலை பிரச்சினை பற்றி மட்டுமே நாம் தனியாக பிரித்து பார்க்க முடியாது. ஒட்டுமொத்த விவசாயத்துறை தொடர்பான நலன்களும், அது சார்ந்த திட்டங்களும் செயல்படுத்தப்படும் விதம்  குறித்தும் கருத்தில் கொள்ளவேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க மாநில அரசு பல்வேறு நல திட்டங்களை வகுத்து உள்ளது. அவை செயல்பாட்டுக்கும் வந்து உள்ளன. ஒட்டுமொத்தமாக விவசாய முறைகளை மேம்படுத்தினால் மட்டுமே இந்த தற்கொலைகளை தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்

அப்போது, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜாராமன் குறுக்கிட்டு; “தமிழகத்தில் மிக அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அதை மாநில அரசு மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. எனவே அது விசாரிக்கும் வகையில் தனி குழு அமைக்கப்பட வேண்டும். விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள்; தற்போது விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்களா? என்று கேட்டனர். அத்துடன் போராட்டத்தை வாபஸ் பெற்றதற்கு தங்கள் வரவேற்பை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா வாதாடுகையில்; இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் பல ஆண்டுகளாக விவசாயிகள் தற்கொலை நடைபெறுவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில்தான் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்; விவசாயிகளுக்கு ஏதேனும் பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த வழக்கை நாங்கள் விசாரிப்பதாகவும், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மெத்தன போக்கை கடைப்பிடிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், தற்போது அடிப்படையாக மூன்று முக்கியமான பிரச்சினைகள் நமக்கு முன்பு உள்ளன என்றும் கூறினார்கள்.

அதன்படி, குறைந்தபட்ச ஆதார விலை குறித்து விழிப்புணர்வு முகாம்களை நடத்தி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், இதுபற்றி அரசு தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும், விவசாயிகள் எளிதில் அணுகும் வகையில் விவசாய பொருட்களின் கொள்முதல் நிலையங்களை அரசு திறக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா குறுக்கிட்டு; தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 200-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருவதாக கூறினார்.

அதற்கு நீதிபதிகள்; இதனை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கோர்ட்டு இதை அறிவுரையாக கூறுவதாகவும், இதை ஏன் மத்திய அரசும் மாநில அரசும் செயல்படுத்தக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

அத்துடன் இந்த செயல்திட்டங்களை அமல்படுத்தும் வகையில் 3 நாட்களுக்குள் (சனிக்கிழமை) தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top