மத்திய அரசால் ஏற்பட்ட தமிழகத்தின் பிரச்சினைகளை மாநில அரசு தீர்க்க வேண்டும்: வேல்முருகன்

velmurugan34-18-1492495412

 

மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது என்று கூறும் தமிழக முதல்வர், மத்திய அரசால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்று முறையாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆண்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒன்றரை மாதமாகிறது. ஆனால் அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைக்கான சட்டப்பேரவை கூட்டம் இதுவரை கூட்டப்படவில்லை. அந்தக் கூட்டத்திற்கான தேதியை இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எதிர்பார்த்த நிலையில் அதுவும் அறிவிக்கப்படவில்லை.

அதேசமயம் இந்தக் கூட்டத்தின் வாயிலாக, அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியிருக்கும் முக்கியமான செய்தி ஒன்றுதான் ஊடகத்திற்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அது, அமைச்சர்கள் யாரும் மத்திய அரசை எக்காரணத்தைக் கொண்டும் விமர்சிக்கக் கூடாது என்பதுதான். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையே இணக்கமான சூழல் நிலவுகிறது; அதைக் கெடுக்கும் விதத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் காரியத்தில் தமிழக அமைச்சர்கள் யாரும் ஈடுபட வேண்டாம் என்று முதல்வர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

முதல்வரின் இந்த அறிவுறுத்தல் ஏற்புடையதே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கும் முரணாக மத்திய அரசு தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை தடுப்பது எப்படி என்பதுதான் முதல்வர் முன் நாம் வைக்கும் கேள்வி.

அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினை விவாதிக்கப்படவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டம் 25 நாட்களாகத் தொடர்கிறது. அதைப் பற்றியும் விவாதிக்கவில்லை.

மருத்துவர் பட்டமேற்படிப்பு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததன் காரணமாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் ஆகியோரின் போராட்டம் 15 நாட்களாகத் தொடர்கிறது. அது பற்றியும் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசவில்லை.

இதெல்லாம் உடனடிப் பிரச்சினைகள். மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள். அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மருத்துவ பட்டமேற்படிப்பில் 50% இடங்களை அரசுக்குத் தரவில்லை; தமிழக அரசும் அதைக் கேட்டுப் பெறவில்லை; இந்திய மருத்துவக் கவுன்சிலும் அந்த இடங்களை வழங்குமாறு வலியுறுத்தவில்லை என்ற ஒரு நீதிமன்றத் தீர்ப்பும் வந்திருக்கிறது. இதனால் தமிழக அரசுக்கும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது அந்தத் தீர்ப்பு.

இதற்கெல்லாம் காரணம் அரசுகள்தானே. அதுவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில்தானே தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது. அப்படியிருந்தும் இதுபோன்ற விதிமீறல்கள் எப்படி நடந்தது? மத்திய அரசு, மாநில அரசு இரு அரசுகளும் இணைந்து பயணித்ததன் விளைவு என்று இதை எடுத்துக் கொள்ளலாமா?

அதற்காக மத்திய அரசுடன் இணைந்து பயணிக்கக் கூடாது என்று நாம் சொல்ல வரவில்லை. இணைந்துதான் பயணிக்க வேண்டும். அதுதான் சரியான அரசியல் நிலைப்பாடும்கூட. ஆனால் அந்த பரஸ்பர ஒத்துழைப்பு என்பது தமிழகத்தின் உரிமைகளைக் காவு கொள்ளக் காரணமாக இருந்துவிடக் கூடாது; தமிழகத்தின் நலன்களை நாசமாக்கிவிடக் கூடாது என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கவலை.

அமைச்சர்கள் மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது என்று சொல்லும் முதல்வர் எடப்பாடி, தமிழகப் பிரச்சினைகளுக்காக மத்திய அரசிடம் பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும். அதைச் செய்யாத பட்சத்தில், மத்திய அரசு மேலும், மேலும் தமிழகத்தை ஒடுக்க முற்படுவதையே பார்க்க முடிகிறது.

எனவே மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது என்று அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் முதல்வர், மத்திய அரசுடன் தனக்கிருக்கும் இணக்கமான சூழலைப் பயன்படுத்தி பற்றியெரிந்து கொண்டிருக்கும் தமிழகப் பிரச்சினைகளைத் தீர்க்க ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று வேல்முருகன் தெரிவித்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top