தமிழகத்தில் பா.ஜனதாவின் அடுத்த குறி தி.மு.க.: திருமாவளவன்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அம்பேத்கர் சிலை அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. தமிழ் அறம் அறக்கட்டளை தலைவரும், தொழில் அதிபருமான வள்ளியூர் மா.வீரக்குமார், சட்டமேதை அண்ணல் அம்பேத்கருக்கு 10 அடி உயரம் கொண்ட முழு உருவ வெண்கல சிலை அமைத்தார். தமிழ்நாட்டிலேயே மிக உயரமான இந்த சிலை வள்ளியூர் நீதிமன்றம் அருகில் ஐ.பிரபு நினைவு திடலில் நிறுவப்பட்டது.

இதன் திறப்பு விழா சிலை அமைப்புக்குழு தலைவர் நெல்லை இரா. சொல்லழகன் தலைமையில் நடந்தது. விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

தொழிலாளர்கள் 8 மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டும் என சட்டம் வகுத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். இந்தியாவில் அம்பேத்கரை சாதிய தலைவராக பார்க்கின்றனர். அவர் விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்களின் பாதுகாவலராக உள்ளார். ஆனாலும் அவரை சாதிய தலைவராக பார்ப்பதற்கு தலித் சாதிய வெறுப்புதான் காரணமாகும். இந்தியாவில் சாதிய தலைவாரக வெறுக்கப்படும் அம்பேத்கருக்கு ஐ.நா சபையில் சிலை அமைக்கப்பட்டு பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் எந்த தலைவருக்கும் இல்லாத பெருமை அம்பேத்கருக்கு உண்டு. 300 ஆண்டுகளில் கறுப்பர் இனம் கூட விடுதலை பெற்றுவிட்டது. ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட இனமான தலித் இனம் இன்னும் விடுதலை பெற முடியவில்லை. அதற்கு காரணம் முட்டுகட்டையாக இருப்பது அரசுதான். ஆட்சி அதிகாரம் குறித்த விழிப்புணர்வு இல்லாத சமுதாயம் தலித் சமுதாயம் தான்.

அதற்காகத்தான் அம்பேத்கர் தலித் சமுதாயத்தினர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என கனவு கண்டார். மதவாத சக்திகளும் இன்று அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இது எந்த ஆபத்தில் கொண்டு முடிய போகிறது என்று தெரியவில்லை.

அம்பேத்கர் இந்தியாவில் உருவான பவுத்த மதத்தை பின்பற்றி வந்தார். அதற்கு காரணம் பார்ப்பினியத்தை ஒழிக்க வேண்டும் என்றுதான் பின்பற்றினார். அது சமத்துவத்தை போதித்த கோட்பாடு, இந்துத்துவத்தை எதிர்த்த கோட்பாடு அது. அதனை புரிந்து கொண்ட தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் ஒருவர்தான்.

இந்தியா முழுவதும் தலித் சமுதாயத்தையும், இயக்கங்களையும் குறி வைத்து ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. மதமாற்றத்தை தடுக்க தலித்துகளை இந்துத்வா அமைப்புகள் ஒடுக்கி வருகிறது.

தற்போது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை என்னவென்றால் அனைத்து மாநிலங்களையும் பா.ஜ.க ஆளவேண்டும் என்பதுதான். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்றி ஆட்சியில் ஆளவேண்டும் என்பதுதான் மிக முக்கியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக அ.தி.மு.க வை பலவீனபடுத்தியது மட்டுமின்றி தி.மு.க வையும் அழிக்க நினைக்கிறது.

இதனை தி.மு.க வின் மூத்த தலைவர்கள் உணர்ந்தால் மதவாத சக்தியும், சாதியவாத சக்திகளையும் அழிக்க முடியும். பா.ஜ.க.வின் அடுத்த குறியே தி.மு.க தான். அடுத்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால்தான் தி.மு.க கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தை மற்றும் இடது சாரிகள் கலந்து கொண்டது.

தி.மு.க.வில் கூட்டணிக்கு யாரை வேண்டுமானாலும் அழைத்து கொள்ளுங்கள். அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் இந்த தேசத்தை சாதியவாத மற்றும் மதவாத சக்திகளிடையே இருந்து காப்பற்ற எப்போதும் கலைஞரோடு துணை நிற்பேன். அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் கையை பற்றியது அடுத்த தேர்தலுக்கான கூட்டணிக்காக அல்ல. மதவாத, சாதிய வாத, பிரிவினைவாத சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். அதற்காகதான்.

ராமதாசை கூட கூட்டணிக்கு அழைத்து கொள்ளுங்கள். அதை பற்றி கவலைப்படவில்லை. போனமுறை இப்படிதான் கடைசி நேரத்தில் எங்களை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டார்கள். கூட்டணியில் அப்போது இடம் பெற்றிருந்தால் இப்போது ஸ்டாலின் முதலமைச்சராக இருந்திருப்பார். கூட்டணிக்காக நான் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கூட்டத்தில் பங்கேற்றேன்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.

இதில் மூத்த பொதுவுடமை தலைவர் இரா.நல்லக்கண்ணு, முன்னாள் டி.ஜி.பி. முத்து கருப்பன், ஐ.ஏ.எஸ். அதிகாரி செல்லப்பன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, எச்.வசந்தகுமார், ஏ.எல்.எஸ். லட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு, வள்ளியூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானதிரவியம், ஏர்வாடி வேலு, சுந்தர், விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு, அமைப்பு செயலாளர் எல்லாளன், தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை வள்ளியூர் மா.வீரக்குமார் செய்திருந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top