மருத்துவக்கல்லூரி விவகாரம்; தமிழக அரசு அபராதத்தொகையை கீழடிக்கு கொடுக்க வேண்டும்

 

court

 

 

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து முதுநிலை மருத்துவ படிப்புக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களை பெறாமல் இருந்த தமிழக அரசுக்கும், இந்த 50 சதவீத இடங்கள் மாநில அரசுகளுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்காத இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் தலா ரூ.1 கோடி அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து முதுநிலை மருத்துவ படிப்புக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களை பெறாமல் இருந்த தமிழக அரசுக்கும், இந்த 50 சதவீத இடங்கள் மாநில அரசுகளுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்காத இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் தலா ரூ.1 கோடி அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், அதை செய்வதில்லை. அரசுக்கு ஒப்படைக்க வேண்டிய இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகங்களே நிரப்பிக்கொள்கின்றன. இதனால் தகுதிவாய்ந்த மாணவர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்’ என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் கடந்த மார்ச் மாதம் விசாரித்தார்.அப்போது, 2000–ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முதுநிலை மருத்துவக் கல்வி ஒழுங்கு முறை சட்டத்தின்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தங்களிடம் உள்ள முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளதா?, முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் எத்தனை?, அரசு எத்தனை இடங்களை நிரப்பியது? உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய, மாநில அரசுகள், இந்திய மருத்துவக் கவுன்சில், தனியார் கல்வி நிறுவனங்கள் என்று அனைத்து தரப்பினரும் பதில் அளித்து மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கை, கோடை விடுமுறை நாளான நேற்று சிறப்பு வழக்காக நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த 130 பக்கம் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–

அய்யன் திருவள்ளுவர், ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் – வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்று கூறியுள்ளார். இதற்கு விளக்கம், ‘நோய் என்ன?, நோய்க்கான காரணம் என்ன?, நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆய்வு செய்து சிகிச்சை செய்யவேண்டும்’ என்பதாகும்.

இந்த புனிதமான மருத்துவ சேவையில் அரைவேக்காடு மாணவர்களை நுழைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தேசிய அளவில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகின்றன. முன்பு எல்லாம் அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டும்தான் இருந்தன. நாளடைவில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உருவாகின. இதன்பின்னர் கல்வித்தகுதிகள் எல்லாம் புறம்தள்ளப்பட்டு, பணம் மட்டுமே இந்த படிப்புக்கு முதல் தகுதியாகிவிட்டது.

ஆனால், மாநில அரசுக்கு வழங்கவேண்டிய 50 சதவீத இடங்களை, தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழங்காததால், தகுதிவாய்ந்த ஏழை மருத்துவ மாணவர்களால், உயர் படிப்பில் சேரமுடியவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் தனது கடமையை செய்யத்தவறியுள்ளன.

ஆனால், மராட்டியம், ஒடிசா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், 50 சதவீத இடங்களை ஆண்டுதோறும் அம்மாநில அரசுகளிடம் முறையாக ஒப்படைத்துள்ளன. தனியார் கல்வி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள 50 சதவீத இடங்களை சேர்த்து, அம்மாநில அரசுகள், முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான விளக்க குறிப்பேடுகளை வெளியிட்டுள்ளன.

இந்த நடைமுறை தமிழகத்தில் இல்லை.தனியார் கல்லூரிகளிடம் 50 சதவீத இடங்களை பெறவில்லை. அந்த இடங்கள் குறித்து, விளக்கக் குறிப்பேட்டில் தமிழக அரசு குறிப்பிடவும் இல்லை. எனவே, முதுநிலை மருத்துவ படிப்புக்காக தமிழக அரசு நடப்பு கல்வியாண்டில் (2017–18) வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேட்டை ரத்து செய்கிறேன்.

தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் தலா 50 சதவீத இடங்களை குறிப்பிட்டு, புதிதாக விளக்கக் குறிப்பேட்டை தமிழக அரசு வெளியிடவேண்டும். இதில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டாலும், ஒருவேளை அந்த கல்வி நிறுவனங்கள் 50 சதவீத இடங்களை ஒப்படைக்க முன்வந்தால், அதை அரசு பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ.) 15 சதவீத இடஒதுக்கீட்டை, தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களே நிரப்பிக்கொள்கின்றன. இதை ஏற்க முடியாது. இந்த இடங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசு முறையான பொது கவுன்சிலிங்கை நடத்தி, இந்த இடங்களை நிரப்ப வேண்டும். ஏற்கனவே, வெளிநாடு வாழ் இந்தியர்களை, முதுநிலை மருத்துவ படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சேர்த்திருந்தால், அது ரத்து செய்யப்படுகிறது.

மேலும், தமிழக அரசு முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் விவரங்களை இணையதளத்தில் புதிதாக வெளியிடவேண்டும். அதில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவைகளில் எத்தனை முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளன?, கவுன்சில் எப்போது நடைபெறும்?, இந்த கவுன்சிலிங்கில் எத்தனை பேர் பங்கேற்றனர்?, எத்தனை பேருக்கு இடம் கிடைத்துள்ளது?, இடம் கிடைத்தும் படிப்பில் சேராத மாணவர்கள் எத்தனை பேர்? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையின்போது சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கடைசி நேரத்தில் சில முடிவுகளை எடுப்பதால், இந்த நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த பிரச்சினைகளையும், குழப்பத்தையும் தவிர்க்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகள், இந்திய மருத்துவக் கவுன்சில் போன்றவை வரும் கல்வியாண்டுக்கு முன்கூட்டியே தங்களது அறிவிப்புகள், புதிய விதிகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.

மேலும், 50 சதவீத இடங்களை பெறாமல், அந்த இடங்களை பல கோடி ரூபாய்க்கு தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். தனியார் கல்லூரிகள் வளம்பெற, இந்த அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர். இந்த 50 சதவீத இடங்களை தனியார் கல்லூரிகளிடம் இருந்து அரசு பெறாததால், அந்த இடங்களில் வசதிப்படைத்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையால் தகுதியும், திறமையும் வாய்ந்த அப்பாவி ஏழை மருத்துவ மாணவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் இந்த செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கிறேன். இந்த தொகையை 4 வாரத்துக்குள், சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணிக்கு வழங்கப்பட வேண்டும்.

மேலும்,இந்திய மருத்துவக் கல்வி கவுன்சிலுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கிறேன். இந்த தொகையை ‘ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆப் தமிழ்நாடு’ என்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை செய்துவரும் அமைப்புக்கு வழங்கவேண்டும். இந்த வழக்கை வருகிற ஜூன் 12–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.  இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top