இலங்கை அரசின் தொடரும் தமிழினப்படுகொலைக்கு ஐரோப்பியபாராளுமன்றம் வர்த்தக உதவி!

 

eu

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான மிகப் பெரிய இனப்படுகொலையை நடத்தி ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தது. அந்த இனப்படுகொலை இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தவும், இனப்படுகொலைக்கு நீதி கேட்டும் உலகம் முழுவதும் தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் இலங்கையின் வர்த்தகத்தை பலப்படுத்தும் வகையில் GSP+ வர்த்தக ஒப்பந்தத்தில் இலங்கையினை சேர்த்துக் கொள்ளும் முடிவினை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள விடயம் உலகத் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

GSP+ வர்த்தக ஒப்பந்தம் குறித்து முதலில் பார்ப்போம்.

GSP+ (Generalised Scheme of Preferences +)  என்பது வளர்ந்து வரும் ஏழை நாடுகள் தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மிகக் குறைந்த அளவிலான வரியுடனும் அல்லது 0% வரியுடனும் ஏற்றுமதி செய்து கொள்ளும் வசதியை அளிக்கும் ஒப்பந்தம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளும் உடன்பட்டு வகுக்கப்பட்ட விதியின்படி, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமை, சூழலியல் மற்றும் நல்ல நிர்வாகம் ஆகியவை சார்ந்த 27 சர்வதேச மனித உரிமை சட்டங்களை (27 core international conventions) ஏற்றுக் கொண்டு அவற்றை செயல்படுத்துகிற நாடுகளுக்கு மட்டுமே இந்த சலுகையை ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் அளிக்க முடியும். உலகில் 13 நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இந்த சலுகையினை அளித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு சாட்சியங்களாக பல்வேறு ஆவணங்கள் வெளிவந்து, பல்வேறு மனித உரிமை செயல்பாட்டாளர்களின் அறிக்கைகள் இலங்கை அரசு செய்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை உள்ளிட்ட விடயங்களை அம்பலப்படுத்தி, உலகம் முழுக்க இலங்கை அரசிற்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்திய 2010ஆம் ஆண்டின் காலக் கட்ட்த்தில் GSP+ சலுகையிலிருந்து இலங்கையினை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது.

அதற்கு காரணமாக ஐ.நா மனித உரிமைகள் சட்டங்கள் மூன்றினை the International Covenant on Civil and Political Rights (ICCPR), the Convention Against Torture (CAT), and the Convention on the Rights of the Child (CRC) இலங்கை அரசு முறையாக செயல்படுத்தவில்லை, அதனால் இலங்கையை நீக்குகிறோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது. (ஆனால் ராஜபக்சே அரசு ஹம்பன்தோட்டா துறைமுகம் குறித்த ஒப்பந்தத்தினை சீனாவுடன் போட்டதால், அதற்கு எதிராகத் தான் அதே நாளில் இலங்கைக்கான GSP+ ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் ரத்து செய்ததாக பல்வேறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்).

2015 ஆம் ஆண்டு இலங்கையின் அதிபராக இருந்த ராஜபக்சே அரசு மாற்றப்பட்டு, மைத்ரிபால சிரிசேனா அதிபராக வந்ததற்குப் பிறகு இலங்கை அரசு மீது அதுவரை தெரிவித்து வந்த அதிருப்தியிலிருந்து அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் பின்வாங்கத் தொடங்கின. உண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளே செயல்பட்டன. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை நடத்துவதற்காகத் தான் அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நாவில் கொண்டுவரப்பட்டதென்றும், அதில் தமிழர்களுக்கான தீர்வென்று எதுவும் இல்லை என்றும் பல்வேறு தமிழர் பிரநிதிகள் குரல் கொடுத்திருந்தார்கள்.

மேற்குலகிற்கு ஆதரவான மைத்ரிபால சிரிசேனா வந்த பிறகு இலங்கை ஜனநாயகத்தில் புரட்சி ஏற்பட்டதாக மேற்குலக ஊடகவியலாளர்கள் பொய்களை கட்டமைக்கத் துவங்கினார்கள். தமிழர்கள் முன்வைத்துப் போராடிக் கொண்டிருக்கும் கோரிக்கைகளான இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு உள்ளிட்டவை மழுங்கடிக்கப்பட்டு, இலங்கை அரசு தன்னைத் தானே விசாரித்துக் கொள்ளும் என்று அமெரிக்காவும், மேற்குலகும் அறிவிக்க ஆரம்பித்தது. இதன் பின்னணியில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் சூழ்ச்சியும் இருந்தன. உள்நாட்டு விசாரணையை முன்னிறுத்தி இலங்கை அரசே ஒரு தீர்மானத்தை ஐ.நாவில் கொண்டுவருவதும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அதற்கு துணை செய்வதும் என எண்ணற்ற நாடகங்கள் ஐ.நாவில் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

ஆனால் இலங்கை அரசு எந்த சர்வதேச விதிகளையும் மதிக்கவில்லை என்பதை தொடர்ந்து பல்வேறு மனித உரிமை குழுக்களின் அறிக்கைகள் வெளிப்படுத்தி வருகின்றன. இலங்கை ராணுவம் தமிழ்ப் பெண்களை பாலியல் சித்ரவதைக்கு உட்படுத்துவதும், பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்களை பயன்படுத்தியதும் ஐ.நாவின் சிறப்பு கண்காணிப்பாளர்களின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சித்ரவதைகள் சட்டப்பூர்வமாக நடைபெறுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இலங்கை அரசு ஐ.நா மன்றத்தில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

காணாமல் போவதும், கைதுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. தமிழர்களின் நிலங்களில் சிங்கள ராணுவம் இன்னும் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு தொடர்கிறது. சிங்களக் குடியேற்றங்கள் நட்த்தப்படுகின்றன. தமிழர்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. 2009க்குப் பிறகு இன்று வரை இனப்படுகொலை தொடர்வதையே யாஸ்மீன் சூகா உள்ளிட்டோரின் அறிக்கைகளில் காணப்படும் சாட்சியங்களின் வெளிப்பாடாக நாம் பார்க்க முடியும்.

தமிழர்களின் வடக்கு மாகாண் சபை நிறைவேற்றிய தீர்மானம் தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடர்வதை உறுதிபடுத்துகிறது. தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு இதுவரை ஒரு சிங்கள சிப்பாய் கூட தண்டிக்கப்படவில்லை. உண்மையான நிலைமை இப்படி இருக்க இலங்கை அரசு எல்லா விதிகளையும் முறையாக பின்பற்ற ஆரம்பித்து விட்டதாக சொல்லி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் வர்த்தகத்தை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் GSP+ சலுகை தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கூறி மைத்ரிபால அரசு ஐரோப்பிய ஒன்றியத்திடம் விண்ணப்பித்தது. அதைத் தொடர்ந்து 2017 ஜனவரி 11 அன்று ஐரோப்பிய ஆணையம் இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை முறையாக செயல்படுத்துவாக சொல்லி, அவர்களுக்கு GSP+ சலுகையை மீண்டும் அளிக்க வேண்டும் என்று ஒரு அறிக்கையை தந்தது. ஐரோப்பிய ஆணையத்தின் இந்த அறிக்கை குறித்து விவாதித்து ஐரோப்பிய பாராளுமன்றமும், கவுன்சிலும் நான்கு மாதங்களுக்குள் அதன் மீது ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும்.

இந்நிலையில் ஐரோப்பிய இடது சாரி மற்றும் பசுமை சார் இடது அமைப்புகளின் 52 பாராளுமன்ற உறுப்பினர்களின் சார்பில் இலங்கை அரசானது மனித உரிமை ஆணையத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, இலங்கைக்கு GSP+ சலுகை அளிக்கப்படக் கூடாது என்று ஒரு தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. தீவிரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்காதது, போர்க்குற்றவாளிகளை கெளரவிப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை அந்த தீர்மானம் உள்ளடக்கியிருந்த்து.

அந்த தீர்மானத்தின் மீது பெல்ஜியத்தின் பிரெசெல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஏப்ரல் 27, 2017 அன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 436 உறுப்பினர்கள் அந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து இலங்கைக்கு GSP+ சலுகையை அளிக்க வேண்டும் என்று கூறியது தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

119 உறுப்பினர்கள் அந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும் இலங்கைக்கு எதிராகவும் வாக்களித்திருந்தனர். இந்நிலையில் மே மாதத்தின் நடுவில் அமைச்சகக் கவுன்சிலின் அனுமதியைப் பெற்று GSP+ ஐ மீண்டும் இலங்கைக்கு அளிக்கும் வேலைகளை ஐரோப்பிய ஒன்றியம் செய்து வருகிறது.

இலங்கை அரசின் மிகப் பெரிய ஏற்றுமதி மையமாக ஐரோப்பிய யூனியன் இருக்கிறது. இலங்கையின் மூன்றில் ஒரு பகுதி ஏற்றுமதி ஐரோப்பிய யூனியனில் தான் நடைபெறுகிறது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் 2.6 பில்லியன் யூரோ மதிப்பிற்கு இலங்கை ஐரோப்பிய யூனிய நாடுகளுக்கு ஏற்றுமதியை மேற்கொண்டிருக்கிறது. அதாவது இலங்கை ரூபாய் மதிப்பின் படி 42900 கோடி ரூபாய்.

இலங்கையின் ஐரோப்பிய ஏற்றுமதியில் டெக்ஸ்டைல்ஸ்(63.1%), பிளாஸ்டிக் (10.4%), காய்கறிகள்(7.5%), இயந்திர உபகரணங்கள் (3%), உணவுப்பொருட்கள் (2.7%) ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை அனைத்தும் GSP+ வரிச்சலுகையின் கீழ் நடைபெறும் பட்சத்தில் இலங்கையின் ஏற்றுமதி மற்றும் வர்த்தகம் பல மடங்கு பலம் பெறும்.

இதன் அடிப்படையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலையினை இலங்கை அரசு தீவிரப்படுத்துவதோடு, தனது குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் இந்த வர்த்தக செல்வாக்கினைப் பயன்படுத்தும் என்று புலம் பெயர் தமிழர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இலங்கை அரசு பொருளாதாரத் தடையைக் கொண்டு வரப் போராடிக் கொண்டிருந்த தமிழர்கள் இதனை மிகுந்த கவலையுடன் பார்க்கிறார்கள்.

ஏற்கனவே அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்கத் துணையுடன் இலங்கை அரசு முறித்து இனப்படுகொலை போரை தொடங்கிய 2006 ஆம் ஆண்டு காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் எந்த அடிப்படையுமின்றி ஒரு தலைப்பட்சமாக அநியாயத் தடையை விதித்தும், இலங்கை அரசுக்கு பொருளாதார உதவிகள் செய்தும் ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்கள் மீதான இன அழிப்புப் போருக்கு துணைபோனது. விடுதலைப் புலிகளின் மீதான சட்ட விரோதத் தடையினை சட்டப் பூர்வமாக பல ஆண்டுகள் போராடி தமிழர்கள் முறியடித்தனர்.

2006 ஆம் ஆண்டு எடுத்ததைப் போன்று ஒரு இனவாத அரசின் ஆதரவு நிலைப்பாட்டினை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்திருக்கிறது. இதனை எதிர்த்துக் குரல் கொடுக்கவும், இதற்கு எதிரான சட்டப்பூர்வமான போராட்டங்களை முன்னெடுக்கவும் அந்தந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் தயாராக வேண்டும் என்று புலம் பெயர் அரசியல் செயல்பாட்டாளர் ஒருவர் TamilsNow குழுவிடம் தெரிவித்தார். மேலும் இது குறித்துப் பேசிய அவர் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம்(EU human Rights court), ஐரோப்பிய நீதி மன்றம்(EU Justice court), ஐரோப்பிய பாராளுமன்ற கோரிக்கை ஆணையம் (EU parliament Petition commission)  ஆகியவற்றை அணுகுவதன் மூலமும் GSP+ சலுகை இலங்கைக்கு கொடுக்கப்படாமல் இருக்க அழுத்தத்தினை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை அரசினை பலப்படுத்தி பாதுகாக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த செய்ல்பாடு மனித உரிமைகளின் பிதாமகனைப் போல் காட்டிக் கொள்கிற ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான நம்பிக்கையை தமிழர்கள் இழக்கும்படி செய்திருக்கிறது. மேற்குலகின் கோர முகத்தினை தமிழர்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களின் சமரசமற்ற போர்க்குரல் மட்டுமே வல்லரசுகளை அடிபணியவைக்கும். தமிழர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதிகளுக்கு எதிராக தமிழர்கள் போராட்டக் குரலை உயர்த்த வேண்டிய காலம் நெருங்கியிருக்கிறது.

தமில்ஸ் நவ்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top