உத்தரபிரதேசத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதில் மோசடி

 

mosadi4

 

உத்தரபிரதேசத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதில் மோசடி நடப்பது குறித்து சிறப்பு புலனாய்வு போலீசாருக்குதகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், அம்மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அம்மாநில தலைநகரில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் சோதனை இன்று நடத்தினர். இதில், பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேச தலைநகர் லக்ணோவில் உள்ள 12 பெட்ரோல் நிலையங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது, 7 பெட்ரோல் நிலையங்களில் சிப் என்று சொல்லக்கூடிய கையடக்க அளவிலான மின்னணு கருவி ஒன்றை பெட்ரோல் வழங்கும் கருவியில் பொருத்தி மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

அதாவது, இந்த கருவியின் மூலமாக ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பினால் 50 முதல் 60 மில்லி குறைவாக வாகனங்களில் நிரப்பும் வகையில் கணக்கீடு செய்வதில் மோசடி செய்ய முடியும். அதேநேரத்தில், விலையில் மாறுதல் இருக்காது.

பெட்ரோல் வழங்கும் கருவியில் உள்ள மின்னணு திரையில் வழக்கமான எரிபொருள் அளவும், விலையும் காட்டும். ஆனால், உள்ளுக்குள் லிட்டருக்கு 6 சதவீதம் வரை குறைவாகவே நிரப்பும். ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பினால், 940 மில்லி மட்டுமே வாகனத்தில் நிரப்பப்படும்

இந்த மோசடி குறித்து சோதனை நடத்தியதுடன், இந்த மோசடியில் ஈடுபட்ட பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களையும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடிக்கான அளவீட்டு செய்யும் கருவியை விற்பனை செய்த ரவீந்தர் என்பவனையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல  தகவல்கள் கிடைத்துள்ளன . மோசடி அளவீட்டை காட்டும் ஒரு கருவியை ரூ.3,000 என்ற விலையில் ரவீந்தர் விற்பனை செய்துள்ளான். ஒரு எஞ்சினியரிடம் இந்த சிப் தயாரிக்கும் நுட்பத்தை கற்றுக்கொண்டிருக்கிறான்.

உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள 1,000 பெட்ரோல் நிலையங்களில் இந்த கருவியை விற்பனை செய்துள்ளதாகவும் அவன் தெரிவித்துள்ளான். இந்த மின்னணு கருவியை எளிதாக பெட்ரோல் வழங்கும் கருவில் பொருத்த முடியும் என்பதுடன், ரிமோட் கன்ட்ரோல் மூலமாக கட்டபடுத்த முடியும்.

மேலும், உத்தரபிரதேசத்தில் இயங்கி வரும் பெரும்பான்மையான பங்குகளில் இந்த மோசடி நடந்து வருவது தெரிய வந்துள்ளது.

இந்த கருவியின் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை வருவாய் கிடைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாதந்தோறும் ஒவ்வொரு பெட்ரோல் நிலையமும் லட்சக்கணக்கான ரூபாயை இந்த மோசடி மூலமாக வருவாய் ஈட்டியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top