புத்தக அறிமுகம் : Bearing Witness – Sexual Violence in South Chattisgarh

 

 

events_1

இந்திய அரசின் 2016-17 ஆண்டுக்கான பட்ஜெட்டில் உள்துறை அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவு 77,000 கோடி ரூபாய். இது முந்தைய ஆண்டை விட 24.56%  அதிகம். இந்த 77,000 கோடியில் , 50,176 கோடி ரூபாய் இந்தியாவின் ஏழு பாதுகாப்பு படை பிரிவுகளுக்கு செலவிடப்பட இருக்கிறது. அதில் அதிகபட்சமாக உள்நாட்டு பாதுகாப்பில் ஈடு பட்டிருக்கும் Central Reserve Police Force (CRPF) படையினருக்கு 16,228 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தாற்போல் Border Security Force (BSF) பிரிவிற்கு 14,652 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு 7.44 லட்சமாக இருந்த உள்துறை அமைச்சகத்தின் ஊழியர் பட்டியல்( பாதுகாப்பு படையினர் அனைவரையும் சேர்த்து) 2014 ஆம் ஆண்டு 32% உயர்ந்து 9.80 லட்சமாக இருந்தது. இத்தனை பாதுகாப்பு படை வீரர்களுக்கான தேவை இந்தியாவிற்கு எங்கு இருந்து வருகின்றது? தேசிய இன ரீதியான ஒடுக்குமுறை ஒரு பக்கம் என்றால் நாட்டின் வளங்களை சுரண்டுவதற்கு தடையாக இருக்கும் மக்களை  ஒடுக்குவதற்கு இத்தனை பெரிய இராணுவத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது இந்த காந்தி தேசம்.

 

மத்தியபிரதேசத்திலிருந்து  2001 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட சட்டிஸ்கர் மாநிலத்தில், 2003 ஆண்டிலேயே CRPF படைகள் நிரந்தரமாக நிலைநிறுத்தப்பட்டன. 2005 ஆண்டில் டாடா ஸ்டீல் மற்றும் எஸ்ஸார் குரூப் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.  அதே ஆண்டில் “Salwa Judum” என்ற அமைப்பை ஆதிவாசி இளைஞர்களைக் கொண்டே சட்டத்திற்கு புரம்பாக அரசும், டாடா, எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவங்களும் சேர்ந்து தொடங்கின. “Salwa Judum” என்றால் கோண்டி மொழியில் “தூய்மை படுத்தலுக்கான வேட்டை” என்று பொருள்.  ஆதிவாசிகள் மக்களில் நிலவுடமையாளர்களாகவும், ஹிந்துத்வ கொள்கைகளை ஏற்றுகொண்டவர்களாகவும்  இருந்தவர்களின் தலைமையிலேயே இந்த Salwa Judum அமைப்பு தொடங்கப்பட்டது. காவல் துறை மற்றும் ஆயுதப் படைகளுடன் இணைந்து  Salwa Judum இயங்கிய கால கட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 3,50,000 ஆதிவாசி மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. பலர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான கற்பழிக்கப்பட்டனர். பலதரப்பட்ட மனித உரிமை மீரல்கள் அரங்கேறியதற்கு பிறகு 2011 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் Salwa Judum அமைப்பை கலைக்க உத்தரவிட்டது.  ஆனால் Salwa Judum அமைப்பைச் சார்ந்தவர்கள் ஈடுபட்ட பாலியல் வன்முறைகளுக்கு எதிராக இது வரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.

function

ஆனால் அதற்கு பிறகும் ஆதிவாசி மக்கள் சந்திக்கும் வன்முறை குறையவில்லை.  மார்ச் 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு தேடுதல் வேட்டையில் 3 கிராமங்களைச் சேர்ந்த  மூன்று பேர் கொல்லப்பட்டார்கள், 300க்கும் மேற்பட்ட  குடிசைகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன, மூன்று பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இந்த வன்முறை வெறியாட்டத்தை தலைமையேற்று நடத்திய எஸ்.ஆர்.பி கல்லுரி மீது புகார்கள் அளிக்கப்பட்டு, சி.பி.ஐ விசாரணை தொடங்கப்பட்ட பிறகு , 2013 ஆம் ஆண்டில் அவருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.  2014 ஆம் ஆண்டில் மறுபடியும் அவர் பஸ்டார் பிரிவு ஐஜி ஆக நியமிக்கப்பட்டார்.

 

2015 ஆம் ஆண்டு இறுதியில், ”மிஷன் 2016” என்று ஒன்றை ஐ.ஜி கல்லுரி அறிவித்தார். அதாவது 2016 ஆண்டில் நக்சல்களை ஒழித்துக் கட்டுவது. அதற்கான திட்டம் தான் அது. அதன் அடிப்படையில் District Reserve Guard Force (DRG) என்ற ஒரு பிரிவு, ஆதிவாசி இளைஞர்களைக் கொண்டே புதிதாக உருவாக்கப்பட்டது. “மண்னின் மைந்தர்”களைக் கொண்டே நாங்கள் நக்சல்களுக்கு எதிராக போராடப் போகிறோம் என்று எஸ்.பி. கல்லுரி அறிவித்தார்.  2011ல் உச்ச நீதி மன்றம் “Salwa Judum” அமைப்பிற்கு எதிரான வழக்கில் ஆதிவாசி இளைஞர்களை படைகளை சேர்பதை கண்டித்தது. ஆதிவாசி இளைஞர்களை ஆதிவாசி மக்களுக்கு எதிராகவே பயன்படுத்துவது என்பது ஆதிவாசி சமூகத்தை பிளவு படுத்தி மோசமான விளைவுகளை ஏறுபடுத்தும், அது தற்கொலைக்கான மாத்திரைகளை அனைவருக்கும் தருவதற்கு சமானம் என்று எச்சரித்தது.  பெருமுதலாளிகள் கையில் சில்லரைகளை வைத்துக் கொண்டு கனிம வழங்களைச் சுரண்ட வாசலில் காத்திருக்கும் போது சட்டமாவது தீர்ப்பாவது!! அவற்றை எல்லாம் குப்பையில் போட்டு விட்டு மீண்டும் ஆதிவாசி இளைஞர்களை படைகளில் சேர்த்துள்ளது சட்டிஸ்கர் அரசு. District Reserve Guard Force பற்றி ஊடகங்களிடம் பேசிய கல்லுரி “பாதுகாப்பு படையணியினரைப் போலல்லாமல் DRG படையில் இருக்கும் ஆதிவாசி இளைஞர்களுக்கு அதிகமான தேவைகள் இல்லை. சோறும், பருப்பும்,உப்பும் மட்டுமே அவர்களின் மூன்று வேளை உணவிற்கு போதுமானதாக இருக்கிறது” என்று தெரிவித்தார். ஒடுக்கப்படும் ஏழை மக்களின் உயிர்கள் தான் எத்தனை மலிவாக போய்விட்டது!!!

 

காஷ்மீர் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் AFSPA போன்ற கொடிய சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பைப் பயன் படுத்திக் கொண்டு இராணுவப் படையினர் ஈடுபடும் மனித உரிமை மீறல்களைப் பற்றியும் ஆதிவாசிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையைப் பற்றியும் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. தொடர்ச்சியாக பல மனித உரிமை மீறல்கள் அரங்கேறும் சட்டிஸ்கர் மாநிலத்தில், அதன் தெற்கு மாவட்டங்களில் செப்டம்பர் 2015க்கு பிறகு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைகளின் போது மட்டும் நடந்தேறிய பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் பெண்கள் சந்திக்கும் இடர்களையும் பதிவு செய்திருக்கும் புத்தகம் தான் “Bearing Witness-Sexual violence in South Chattisgarh”.  Women against social violence and state repression (WSS) என்ற அமைப்பு கள ஆய்வுகள் மூல கண்டவற்றை இந்த புத்தகத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளது.

Bearing-witness

2015, அக்டோபர் 19-24 அகிய நாட்களில், பிஜாபூர் மாவட்டத்தில் இருக்கும் பெடகெல்லூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களிலும், 2016 ஜனவரி 11-14 ஆகிய நாட்களில்  பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள நேந்த்ரா என்ற கிராமத்திலும், சுக்மா மாவட்டத்தில் உள்ள குன்னா என்ற கிராமத்திலும், மே 5 – 7 ஆகிய நாட்களில் பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள கொர்சோலி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களிலும்  காவல் துறை மற்றும் பாதுகாப்பு படை  இணந்து தேடுதல் வேட்டை என்ற பெயரில் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பல பெண்கள்  படையினரால் கர்பழிக்கப்பட்டனர்.  13 வயது சிறுமிகள் முதற்கொண்டு கற்பிணிப் பெண்கள் வரை ஆயுதப்படையைச் சார்ந்த பலரால் கற்பழிக்கப்பட்டனர். அவர்களின் வீட்டில் சேமித்து வைத்திருந்த பொருட்கள், கால்நடைகள் சூரையாடப்பட்டன.  பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆடைகளைக் களைந்து அவர்களை அடித்து உதைத்தது காவல்படை.

 

பொதுவாகவே பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் பெண்கள் மீது நடத்தும் பாலியல் தாக்குதல்களை தனிப்பட்ட நபர் செய்யும் தவறாகவும், உள்நாட்டு போரின் விரும்பத்தகாத பக்கவிளைவுகளாக  ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டாலும், உண்மையில் அவை தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு கருவியாக தெரிந்தே அரசு அதனை பயன்படுத்துகிறது என்று இந்த புத்தகம் ஆணித்தரமாக பதிவு செய்கிறது. பல இடங்களில் ஒரே நேரத்தில், பல்வேறு படை அணியிணரால் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டது என்பது இது ஒரு யுக்தியாகவே படையினர் கையாள்கின்றனர் என்பதே அன்றி தனிப்பட்ட சிலரி ன் தவறுகள்  அல்ல என்பதை இந்த புத்தகம் பதிவு செய்கின்றது.

 

பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடுவதில் இருக்கும் இடர்களையும் இந்த புத்தகம் பதிவு செய்கிறது.  தாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு கூட அங்குள்ள காவல் துறை அதிகாரிகள் தயாராக இல்லை. நாட்கணக்கில் காத்துக் கிடந்து , தங்களுக்கு நேர்ந்த அவலத்தை பலரிடம் திரும்பத் திரும்பக் கூறி பிறகு கூட இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் நக்சல்களின் சதி என்று புறந்தள்ளப்படுகிறது. பெடகெல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் பல முறை முயன்ற பிறகு நவம்பர் 1,2015 அன்று FIR பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  National Commision For Women, National Commission for scheduled Tribes, National Human Rights commission அகிய அமைப்புகள் தலையிட்டு, பல ஆய்வுகளை மேற்கொண்டு, மனித உரிமை மீறல்களையும், அரசின் மெத்தனப் போக்கையும் உறுதி செய்த பிறகும் கூட குற்றத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

 

2011 இல் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பில் “மாவேயிஸ்ட்/நக்சல் வன்முறையை வெறும் சட்ட ஒழுங்கு சிக்கலாக மட்டும் அரசு கையாளக் கூடாது.. இவற்றிக்கு காரணம், ஏற்கனவே பல ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் சமூகத்தில் அரசு செயல்படுத்தி வரும் நியாயமற்ற சமூக பொருளாதார கொள்கைகள் தான்” என்று கூறியது. ஆனால் இன்று வரை அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளில் இருந்து சிறிதும்  விலகாமல், நாட்டின் வளங்களை பண்நாட்டு முதலாளிகள் சூரையாடுவதற்குத் தேவையான கட்டமைப்பை பலப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றது. CRPF பிரிவிற்கு ஆயிரக்கணக்கான கோடிகளை அளித்திருக்கும் இதே உள்துறை அமைச்சகம் தான் ”பெண்கள் பாதுகாப்பிற்கான நிர்பயா நிதித் திட்டம்” என்பதற்கு 150 கோடிகளை அளித்துள்ளது. ஆக ஒருபக்கம். பெண்களை மானபங்கப்படுத்த ஆயிரக்கணக்கான கோடிகள், அவர்களைப் பாதுகாக்க நூறு கோடி என்று அரும்பாடுபட்டு தர்மத்தை நிலைநாட்டுகிறது இந்திய அரசு!!  மோடி பிரதமராக பதவியேற்றதற்கு பிறகு பஸ்டார் மாவட்டத்தில் “Ultra Mega steel plant” ஒன்றை நிறுவுவதற்கான திட்டதில் கையெழுத்திடார். பஸ்டார் மாவட்டத்தில் மட்டும் 40 ஆதிவாசி மக்களுக்கு ஒரு இராணுவ வீரன் என்ற எண்ணிக்கையில் அங்கு இராணுவத்தின் அடர்த்தி உள்ளது. ஆனால் கல்வி, தண்ணீர் வசதி, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய கட்டமைப்பைக் கூட அரசு அங்கு ஏற்படுத்தவில்லை.

 

இந்த தேடுதல் வேட்டையின் போது , “நரேந்திர மோடி உத்தரவிட்டால் உங்கள் கிராமத்தையே கொழுத்தி விடுவோம்” என்று படையணியினரால் மிரட்டப்பட்டதாக  ஒரு பெண்  இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இதே மிரட்டலை, கூடன்குளம், மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில் என்று நம்முடைய நிலைத்தை பாழ்படுத்தி வாழத்தகுதியற்ற பூமியாக மாற்றத் துடிக்கும் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக போராடும் தமிழர்களாகிய நாமும் சந்திக்கப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை!!

 

அருண் காளிராஜ்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top