கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது, ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

 

pannerselvam

 

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையப்போவதாக கூறப்படுகிறதே உங்களின் நிலைப்பாடு என்ன?

ஏற்கனவே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் வைத்து, எங்கள் நிலைப்பாட்டை நான் சொல்லி இருக்கிறேன். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி அதனை மக்கள் இயக்கமாகவும், தொண்டர்களின் இயக்கமாகவும் வழிநடத்தினார். அவருக்கு பின்னால், ஜெயலலிதாவும் மக்கள் இயக்கமாகவும், தொண்டர்கள் இயக்கமாகவும் வழி நடத்தினார்.

2011-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவும், அவருடைய குடும்பத்தினரும் நீக்கப்பட்டனர். 4 மாதங்கள் கழித்து சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர் மட்டும் கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார். அவருடைய குடும்பத்தில் உள்ள மற்ற யாரையும் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரையில் கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளவில்லை.

கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் சென்று விடக்கூடாது என்பது தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்களின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டை கடைபிடிப்பது தான் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன். அதில் மாற்றம் கொண்டு வருவது என்பது அவர்களுக்கு செய்யும் துரோகம்.

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற எங்களின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இரு அணிகளும் இணைந்தாலும் நீதி விசாரணை நடத்தப்படும்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதே செல்லாது. அவர் நியமித்த, அவர் நீக்கிய உத்தரவுகளும் செல்லாது என்று தான் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம். கழக சட்ட விதி என்ன சொல்கிறதோ அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும்

ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வரை கொடுத்ததோடு பல்வேறு முறைகேடுகளையும் செய்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருடைய உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களையும், பணத்தையும் கைப்பற்றி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் சின்னம் தொடர்பான விசாரணையில் தங்களுக்கு சாதகமான முடிவு வர வேண்டும் என்பதற்காக, பணம் கொடுத்து தீர்ப்பு வாங்க வேண்டும் என்று அவர்கள் தரப்பில் (டி.டி.வி.தினகரன்) பணம் கொடுத்த விவரம் மத்திய உளவுத்துறை மூலமாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

எந்த குடும்பத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோமோ, அந்த குடும்பத்தால் அ.தி.மு.க. நடைமுறையில் தவறுக்கு மேல் தவறு செய்து தமிழகத்துக்கு மிகப்பெரிய அவமானத்தை உருவாக்கிக்கொடுத்துள்ளனர்.

இரு அணிகளும் இணைவதற்கு நிபந்தனைகள் எதுவும் உள்ளதா?

சென்னையில் பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்கும்போது, எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து இருப்பதாக தெரிவித்து, கருத்து கேட்டனர். அப்படி பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறி இருந்தேன். பின்னர், நிபந்தனைகள் ஏதும் உள்ளதா? என்று கேட்டார்கள். நிபந்தனைகள் இல்லை என்றேன். புதிய நிபந்தனைகள் எதுவும் நாங்கள் விதிக்கவில்லை. அதற்காக எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் மாற்றிக்கொள்ள மாட்டோம்.

கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். குடும்ப ஆட்சி இல்லாமல், ஜனநாயக அடிப்படையில் மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மக்கள் அதிருப்தி அடைவார்கள். இது ஒரு தர்ம யுத்தம்; அறப்போராட்டம். இருந்து நாங்கள் மாற மாட்டோம்.

பேச்சுவார்த்தை மூலம் இரு அணிகள் இணைப்புக்கு முடிவு கிடைத்து விடுமா?

கொள்கைக்கு அவர்கள் உடன்பட்டு வந்தால் முடியும். இல்லை என்றால் முடியாது.

அ.தி.மு.க. (அம்மா) அணி தரப்பில் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உங்கள் தரப்பில் குழு அமைக்கப்படுமா?

அவர்கள் எது பற்றி பேச வருகிறார்கள் என்பதை பார்ப்போம். அவர்களின் நிலைப்பாட்டை அறிந்து குழு அமைப்பது குறித்து எங்கள் அணி தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி கருத்து தெரிவிக்கப்படும்.

இரு அணிகளும் இணைந்த பின் எடப்பாடி பழனிச்சாமியை முதல்-அமைச்சராக ஏற்றுக்கொள்வீர்களா?

ஏன் நடக்காததை எல்லாம் பேசுகிறீர்கள்.இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சிறப்பு பூஜையில் பங்கேற்பு

முன்னதாக தனது வீடு அருகே உள்ள சிருங்கேரி மண்டபத்தில் நடந்த சிறப்பு பூஜையில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர், பெரியகுளம் பாலசுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு சிருங்கேரி சாரதா மடத்தின் ஜகத்குருக்கள் பாரதீ தீர்த்த மகாசன்னிதானம், விதுசேகர பாரதீ சன்னிதானம் ஆகியோர் வந்து இருந்தனர். அவர்களை ஓ.பன்னீர்செல்வம் மலர் மாலை கொடுத்து வரவேற்றார்.

பின்னர் அவர்களுடன் சேர்ந்து கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top