பிரதமர் மோடியுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

 

modi3

 

 

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக் மாஸ்டர் நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அவருடைய நிர்வாகத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும்.

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடியும், மெக் மாஸ்டரும் தெற்காசிய பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:–

மோடியும், மெக் மாஸ்டரும் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. அவர்கள் இரு நாடுகள் இடையேயான உறவு, முக்கிய பிராந்திய விவகாரங்கள், ராணுவத்தொடர்பு மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் விரிவான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

அமெரிக்கா–இந்தியா இடையேயான ராஜ்ஜிய தொடர்புகள் பற்றியும் விவாதித்தனர். அப்போது, அமெரிக்காவின் முக்கிய ராணுவ கூட்டாளியாக இந்தியா திகழும் என்பதை அமெரிக்க தரப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

மெக் மாஸ்டரின் வருகை தெற்காசிய பிராந்திய அளவிலான ஆலோசனையின் ஒரு பகுதிக்கானது. இதில் காபூல் மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களுக்கான பயணங்களும் அடங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

முன்னதாக மெக் மாஸ்டர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து, அமெரிக்கா–இந்தியா இடையேயான உறவில் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்பை இஸ்லாமாபாத் நகரில் மெக் மாஸ்டர் சந்தித்துவிட்டு டெல்லி வந்தார் என்பதும், அதற்கு முன்பாக அவர் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top