தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
தெற்கு டில்லியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இன்று காலை நடைபெற்ற சோதனையின் போது, சுகேஷ் சந்திரசேகர் என்பவர் ஏராளமான ரொக்க பணத்துடன் கைதாகியுள்ளார்.
சந்திரசேகர் அளித்துள்ள வாக்குமூலத்தில், அந்த பணத்தை டி.டி.வி.தினகரனிடமிருந்து பெற்றதாகவும், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக பேரம் பேசப்பட்டாகவும் கூறியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளதை டெல்லி காவல்துறை உறுதி செய்துள்ளது.
டெல்லி காவல்துறை துணை கமிஷனர் மதுர் வர்மா இன்று மதியம் நிருபர்களிடம் பேசுகையில், தேர்தல் ஆணையத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாக கூறி பணம் பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கைது செய்துள்ளோம்.
அவரிடம் இருந்து 1.30 கோடி கைப்பற்றியுள்ளோம். மேலும், 2 ஆடம்பர கார்களை பறிமுதல் செய்துள்ளோம். லஞ்ச தடுப்பு சட்டத்தின், 8வது பிரிவு, ஐபிசி சட்டத்தின் பிரிவுகள், 170, 120பி ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்.
சுகேஷ் சந்திரசேகர் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். விசாரணை நடப்பதால் வேறு தகவல்களை தெரிவிக்க முடியாது என்றார். டிடிவி தினகரன் பெயரும் எப்.ஐ.ஆரில் இடம் பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு, தினகரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.