விவசாயிகள் பிரச்சனைக்கு காரணமும் தீர்வும்

கடந்த ஒரு மாத காலமாக  தமிழக விவசாயிகள்  டெல்லியில் போராடி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், வறட்சி காரணமாக வேலை இழந்திருக்கும் தமிழக விவசாய தொழிலாளர்களுக்கும்,  விவசாயிகளுக்கும்  நிவாரணம் வழங்க வேண்டும். காவேரி  டெல்டாவை  பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு  நியாயமான விலை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து போராடி கொண்டிருக்கிறார்கள்.

முப்பது  நாட்களுக்கும் மேலாக தொடரும்  போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் மட்டுமின்றி  இந்தியாவின் மற்ற மாநில விவசாயிகளும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர் . ஆனாலும் ஆளும் மோடி அரசின் காதில் மட்டும் தமிழக விவசாயிகளின் அழுகுரல் விழவில்லை.

janr

“இந்த விவசாயிகளுக்கு வேறு வேலையே இல்லை; காலம் எல்லாம் மானியமும், தள்ளுபடியும் தான் கேட்டு கொண்டிருப்பார்கள்” – என்று பாஜக கட்சியினர் பிரச்சாரம் செய்ய துவங்கியிருக்கிறார்கள். விவசாயிகள் இப்படி காலம் முழுக்க  பஞ்சப்பாட்டு பாடி கொண்டேயிருக்க  என்ன காரணம்? காமராசருக்கு பின் தமிழகத்தில் அணை கட்டவில்லை, விவசாயிகளுக்கு  தண்ணிரை பயன்படுத்த தெரியவில்லை என்று  என்ன  என்னவோ கதைகள்  வாட்சப்களில் பரவி கொண்டிருக்கிறது, ஆனால் உண்மை என்ன ?

விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க சினிமா  டிக்கட்டில் ஒரு ரூபாய் கொடுப்போம் என்கிறார் ஒரு நடிகர், ஆளுக்கு ஒரு குடும்பத்தை தத்தெடுப்போம் என்கிறார் ஒரு நடிகை, எங்கள் தலைவர் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை  கொடுப்பதாக  ஒரு ரசிகர்மன்ற குஞ்சி விசிலடித்து கொண்டிருக்கிறது. விவசாயிகளின் சிக்கலுக்கு பணப்பற்றாகுறையும் வறுமையும்தான் காரணமா ?  நம்  இரக்க உணர்வில்  எல்லோரும் சேர்ந்து  உதவிசெய்து  இதை தீர்த்துவிட முடியுமா? உழைத்து வாழ்ந்த மக்களை நம்முன்  கையேந்த வைத்துவிட்டு  நாம் தான் தூக்கிவிட முடியுமா? உண்மையில் போராடும்  விவசாயிகளுக்கு  என்னதான்  பிரச்சனை அதை  எப்படிதான் தீர்ப்பது ?

 வறட்சி

இந்த ஆண்டு  தமிழகத்தில் பருவமழை  சுத்தமாக  பெய்யவில்லை; ஒட்டு மொத்த தமிழகத்தின் மிக முக்கியமான ஆற்று பாசன படுகைகளான இருப்பது

 1. தாமிரபரணி , முல்லை பெரியாறு மூலம் நீர்வளம் பெறும் வைகை பாசனம்
 2. தமிழகத்தின் மிக பெரிய பாசன பகுதியான காவேரி.

17965109_1542346765810530_210979263_n

இதில் தாமிரபரணியின் நெல்லை மாவட்ட பாசன பகுதிகள்  கடந்த ஆண்டுகளை விட வறட்சியை சந்தித்தாலும் அது தமிழத்தின் மற்ற பகுதிகள் எதிர் கொண்டிருக்கும் பெரும்பஞ்சத்தை  நோக்கி இன்னும் செல்லவில்லை.

ஆனால், காவேரி மற்றும் அதன்  துணையாறுகளான:

 • பவானி,
 • நொய்யல்,
 • அமராவதி,
 • கொள்ளிடம்

உள்ளிட்ட ஆறுகள் மூலமாகவும்

 • கல்லனை கால்வாய் ,
 • புல்லம்பாடி கால்வாய் ,
 • உய்யகொண்டான் கால்வாய்,
 • கட்டளை கால்வாய்

உள்ளிட்ட  துணை கால்வாய்கள் மூலமாகவும்  பாசனம் பெரும் நிலப்பரப்பு வறண்டதுதான்  இந்த வறட்சியின் மூலகாரணம்.

காவேரி ஆற்றின் பாசனபகுதிகள் :

மாவட்டம் ஏக்கரில்
சேலம் 44700
கோவை,ஈரோடு,நாமக்கள் 53764
திருச்சி,கருர்,பெரம்பலூர் 276900
தஞ்சை, திருவாரூர், நாகை 1588960

காவேரியின் கிளை நதிகளின் பாசன பகுதிகள்:

ஆறு ஏக்கரில்
பாவானி 250000
அமராவதி 60000
நொய்யல் 40000

 

இது இல்லாமல் கொள்ளிடம் ஆற்றின் பாசன பகுதியில் இருக்கும்  அரியலுர் மற்றும் கடலூர்  மாவட்டங்கள் இருக்கிறது.

நிலத்தடி நீர்

ஈரோடு மாநகரத்திற்கு காவேரியில் இருந்து 9 பம்ப் ஆவுஸ் மூலமாகதான் நீர் வழங்கப்படுகிறது .

மேட்டுப்பாளையம் மூலையூரில் செயல்படும் நீரேற்று நிலையம் மூலம் மேட்டுப்பாளையம் நகரத்துக்கு கீழ் உள்ள 9 ஊராட்சிகளை சேர்ந்த 193 கிராமங்களுக்கான குடிநீர் விநியோகம் தற்போழுது  நீர் பற்றாகுறையால் வாரத்திற்கு ஒருமுறை என்ற  நிலைக்கு வந்து விட்டது.

கோவைக்கும்  திருப்பூருக்குமான  குடிநீர் என்பது   பாவனி ஆற்றுப்படுகையை நம்பித்தான் இருக்கிறது.  நாமக்கல் மாவட்டத்தில்  ராசிபுரம் இடைப்பாடி கூட்டு குடிநீர் திட்டம் ,  பரமத்தி கபிலர்மலை கூட்டு குடிநீர் திட்டம் , சேந்தமங்களம் சீராப்பள்ளி குடிநீர் திட்டம் உட்பட பல குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த திட்டங்கள் தான் ஒட்டுமொத்த நாமக்கல் மாவட்டத்திற்குமான   குடிநீர் வழங்கபடுகிறது.

அணைகள் நிறைந்த மலைத்தொடரை ஒட்டிய மேற்கு மாவட்டத்திலேயே இந்த  நிலை என்றால் ?

காவேரி படுகையில்  இருந்துதான்   ஒட்டுமொத்த  தமிழகத்திற்கும் குடிநீர் வருகிறது.  சென்னை,கடலூர் ,அரியலூர் ,பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர்,திருவாரூர் ,நாகை ,புதுக்கோட்டை ,கரூர், திருப்பூர், கோவை,   ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,திண்டுக்கல், இராமநாதபுரம் ,மதுரை, விருதுநகர் ,காஞ்சிபுரம் , திருவள்ளூர் என   ஒட்டுமொத்த தமிழகத்திற்கான குடிநீருக்காக   65க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான ஆழ்துளை கிணறுகள் காவேரி முழுக்க பலநூறு அடிகளில் அமைக்கபட்டு நீர் உறிஞ்சப்படுகிறது.

18009433_1542347219143818_191658664_n (1)

காவேரி ஆற்று நீர் வராததால் உறிஞ்சப்பட்ட  நிலத்தடி நீர் மீண்டும் சேரவே இல்லை  மேலும் தமிழக ஆறுகளில் அளவு கடந்த மணல் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. அமராவதி ஆறு முழுவதும் சுரண்டப்பட்டுவிட்ட நிலையில் காவேரியிலும், கொள்ளிடத்திலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் ஆற்று மணல் வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய அள்ளப்படுகிறது. இதற்கு ஆற்றுப்படுகையைச் சேர்ந்த மக்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து கொண்டே இந்த மணல் கொள்ளைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். மணல் முழுமையால அள்ளப்படுவதால் அடுத்த ஆண்டுகளில் ஆற்று நீர் வந்தாலும், நிலத்தடி நீரை பிடித்து வைக்கும் திறனை நிலம் இழந்து, முழுமையாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயமுள்ளது.. இந்த சூழலில் மேலும் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் பங்குக்கு ஆற்றுநீரை உறிஞ்சி  கொண்டிருக்கிறது. இந்த வறட்சியின் மூலகாரணமாக காவேரி இருப்பதனால் தான் இறந்துபோன விவசாயிகளில் பெரும்பான்மையானோர் இந்த ஆற்றுப்படுகையை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் கர்நாடகாவில் பெங்களூர் உள்ளிட நகரங்களுக்கு தண்ணீர் வழங்கும் உரிமையை விவலியோ என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இந்த நிறுவனம் ஆண்டு ஒன்றுக்கு  13 டி எம் சி தண்ணிரை பயன்படுத்துகிறது அதுமட்டும் இல்லாமல் பெங்களூரை சுற்றி உள்ள மூன்று குளிர்பான நிறுவனங்களுக்கும் தண்ணீரை விற்பனை செய்கிறது.

இது எல்லாம் தாம் நம் விவசாயிகளுக்கு உரிமையான தண்ணீர். விவசாயிகளுக்கான தண்ணிரை  இந்த நிறுவனங்களிடம் விற்றுவிட்டு இரண்டு மாநில மக்களை மோதவிட்டு குளிர்காய்ந்து  கொண்டிருக்கிறது  இந்திய அரசு.

வங்கி கடன் யார் பொறுப்பு  ?

தேசிய மயமாக்கிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மிக முக்கியமானதாக  இருக்கிறது. ஏன் விவசாயிகள் வங்கி கடன் தள்ளுபடியை மத்திய அரசிடம் கேட்கிறார்கள் என்ற கேள்வி  கூட  எழுகிறது. வழக்கமாக சிறு குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கி கடனை மாநில அரசு தள்ளுபடி செய்யும் .ஆனால் இந்த ஆண்டு விவசாயிகள் விவசாய  பணியை துவங்கிய காலகட்டத்தில்  செபடம்பர் மாதம் பண முடக்கம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக  கூட்டுறவு வங்கிகளும் முடக்கப்பட்டிருந்ததால் விவசாயிகள் முழுமையாக தேசிய வங்கிகளுக்கு தான் சென்றார்கள்.

17523344_1537830309595509_8213466117243297343_n

நகை கடனுக்காக சென்ற போது இந்தியன் வங்கியில் இறந்த விவசாயி

 

தேசிய வங்கிகள்  பயிர் கடனாக இருந்தாலும்  நகை போன்ற அடமான பொருட்கள் இல்லாமல் கொடுப்பது இல்லை. அப்படி  பயிர்  நகை கடனாக பெற்ற கடன்களை தான் விவசாயிகள் தள்ளுபடி செய்ய சொல்லி கேட்கிறார்கள்.

வறட்சியின் காரணமாக கடன் வாங்கி அதனையும் வயல்களில் பயிர்செய்து இழந்து நிற்கும்  விவசாயிகள் மீண்டும் இந்த கடனை அடைக்க அடுத்த ஆண்டு மகசூல் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும், அதற்கு அடுத்த ஆண்டு விவசாய பணிகளுக்கும்  மூலதனம் வேண்டும். இந்த  தேசிய வங்கிகளில் இருக்கும் பயிர் நகை கடன் தள்ளுபடி செய்ய வில்லை என்றால் அதற்கான  இரண்டாண்டுகால வட்டி  என்பது நகை மதிப்பைத்தாண்டி செல்லும். இத்தனை நாள் சேமிப்பான நகையையும் இழந்து, அடுத்த ஆண்டிற்கான தொழில் செய்ய மூலதனும் இல்லாமல் விவசாய பணிகள் முழுமையாக முடக்கப்படும்.

தேசிய வங்கிகளின் கடன்  என்பது முழுமையாக மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ளது.  அதனால் தான் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடி கொண்டிருக்கிறார்கள்.

உழுதவன் கணக்கு பார்த்தால் ?

ஒரு ஏக்கர் திருந்திய நெல் சாகுபடிக்கான செலவு:

உழவு 3000
விதை 30 கிலோ 1500
நாற்று அறித்தல் 2500
வரப்பு வெட்டும் கூலி 2500
நாற்று நடும் கூலி 3000
இரண்டு முறை களையெடுக்க 2500
உரச்செலவு 3500
அறுவடை செலவு 3500
மொத்தம்        22000

 

இது மட்டுமில்லாமல் மூன்று மாதகாலம் அந்த விவசாயிகளின் ஒட்டுமொத்த குடும்பமும்  வயலில் தங்கள் உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள் அவர்களுக்கான  கூலி  இதில் சேர்க்கப்படவில்லை.

17974729_1542346899143850_1694157793_n

தஞ்சை  போன்ற வளமான மண்ணில் நல்ல விளைச்சல் என்பது ஒரு ஏக்கருக்கு  பதினெட்டு குவிண்டால் ஆகும். ஒரு குவிண்டால்  நெல்லுக்கு 1470 விலை அரசு  நிர்ணயம் செய்துள்ளது. 18*1470=26460  ஒரு விவசாயிக்கு மூன்று மாதகால  உழைப்பிற்கு பின் கிடைக்கும் குறைந்த பட்ச கூலி என்பது 4460 ரூபாய் மட்டுமே,  வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்தால் இந்த வருமானம் வட்டிகே  சரியாக இருக்கும்.

பயிர்  பால்பிடித்து வரும்போது நீர் இல்லாமல் வறண்டு போனதுதான் இந்த ஆண்டின் சோகம், ஒரு ஏக்கருக்கு அறுவடை செலவு  இல்லாத மீதி 18500  இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஐந்து ஏக்கரில் விவசாயம் செய்யும் ஒரு குறு விவசாயி 92500 ரூபாய்  கடன் வாங்கி நட்டப்பட்டு நிற்பதுதான் சோகம்.

கரும்பு

 

உழவு 4000
கரணை 10*150 6000
பார் வாய்க்கால் பிடிக்கும் செலவு 3000
களை எடுக்க 1000
உரம் இரண்டுமுறை 5200
மீண்டும் கால் மாற்றும் செலவு 3000
சேற்று களை  என்கிற உரமிடல் 7500
தோகைகட்டும் செலவு-மூன்று முறை 5000
மொத்தம் 33200

 

கரும்பு ஓராண்டு பயிர்; இதற்கு ஒரு விவசாய குடும்பம் 12 மாதம்  தங்கள் முழு  உழைப்பையும் செலுத்தி உழைக்கும் அதற்கான ஒராண்டு கூலி போட்டால் பயிர் செலவு எவ்வளவோ போகும்.அரசு ஒரு டன் கரும்பு கொள்முதலுக்கு நிர்ணயம் செய்துள்ள விலை இந்த ஆண்டு 2850 ரூபாய்.  சரியான காலத்தில் ஆலைகள் கரும்பை வெட்டினால் மட்டுமே எடை நிற்கும், ஆலைகள் கரும்பை  வெட்ட தாமதமாக்கும் போது கரும்பின் எடை குறைந்து போகும் .

sugarcrops_sugarcane_clip_image016

மேலும் தமிழகம்  முழுவதும் ஆலைகள் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை 2000 கோடிக்கு மேல் இருப்பதாக அரசே தெரிவித்துள்ளது. வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்து அறுவடையும்  நடந்த பின்னும் காசு வராமல்  வங்கி கடனுக்கு  வட்டி கட்டி கொண்டிருக்கும் நிலைதான் கரும்பு விவசாயிகளின் நிலை. இந்த ஆண்டு மூன்று மாத நெல் பயிரே கருகி கிடக்கும் போது ஓராண்டு பயிரான கரும்பின் நிலை என்னவாக இருக்கும் .?

மஞ்சள்   

 தமிழகத்தில் பயிரிடம் படும் பணப்பயிரில் மிக முக்கியமானது மஞ்சள்.  ஈரோடு  என்றால் மஞ்சள் என்று தான் எல்லோருக்கும் நினைவுக்குவரும் கடந்த நாற்பது ஆண்டுகளாக  பாவானி  ஆற்று பாசனம் பகுதியில் தான் அதிக அளவில் மஞ்சள் சாகுபடி நடக்கும் பகுதி

 

உழவு 4000
விதை 10000
வாய்க்கால் வெட்டும் செலவு 3000
உரம் பூச்சு கொல்லி 6200
பொரிவைக்கும் செலவு (2 முறை) 3000
களை எடுக்கும் செலவு 2 முறை 3600
வெட்டு கூலி 12000
மொத்தம் 41800

 

இது இல்லாமல் மஞ்சளை வேகவைக்கும் செலவு மற்றும் வண்டி கூலி  மண்டிகளின் கமிசன் என்று  சில வரையை செய்ய முடியாத செலவுகளும் இருக்கிறது.   ஒரு ஏக்கரில் 20 கட்டை மஞ்சள்  சரசரியா விளையும்  என்று விவசாயிகள் சொல்கிறார்கள் இதில் ஒரு கட்டை என்பது 100 கிலோ  இதன் இன்றைய விலை 7500 ரூபாய்.  இந்த ஒராண்டுகால பயிரில்  நோய் தாக்குதல் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் இருந்து சரியான விலையும் கிடைத்தால் விவசாயிக்கு  அந்த வயலில் உழைத்த கூலியாக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஒரு வேளை நோய் தாக்குதலோ வேறு சிக்கலோ வந்தால் எல்லாம் போச்சு.

er

இந்த ஒராண்டு செலவை கடன் வாங்கிதான் செய்திருப்பார் அதன்  வட்டியை கணக்கு பார்த்தா மீதி ஏதும் இருக்காது. இந்த மஞ்சள் விளையும் காளிங்கராயன் கால்வாய் பாசன பகுதியில் தான் பயிர் கருகி கடனை எப்படி அடைக்க வழி தெரியாமல் அடுத்து அடுத்து அதிக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்  இத்தனைக்கும் காரணம் காவேரி தண்ணீர் வராததுதான்.

ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல்  சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட காவேரி பாசன பகுதியிலும் தமிழகத்தில் மஞ்சள் விவசாயம் செய்யப்படுகிறது

கொடிக்கால் விவசாயிகள்

காவேரி பாசன பகுதியான கரூர் மாவட்டம் குளித்தளை மற்றும் தஞ்சை கும்பகோணம் பகுதியில் கொடிக்கால் என்று சொல்லப்படும் வெற்றிலை விவசாயம் நடைபெற்று வருகிறது .வெற்றிலை விவசாயம் என்பது  முதலில் கொடிபடர தேவையான அகத்திகான விதை போட்டு அது வளர்ந்த 40வது நாளில் வெற்றிலை கொடிகளை நாற்றங்காலில் இருந்து எடுத்து  நடுகிறார்கள். முதல் ஆறு மாதம் முழுவதும் பராமரிப்பு வேலைகள் மட்டுமே, இந்த ஆறுமாத பராமரிப்பு செலவு ஏக்கருக்கு 3 லட்சம் வரும் என்பதால் இதனை தனித்த விவசாயிகளால் செய்ய முடியாது எனவே  கூட்டாகதான்  ஒரு ஏக்கரில் விவசாயம் செய்கிறார்கள். ஒரு ஆண்டு  பயிரிட்டால் மூன்று நான்கு ஆண்டுகள் இலை பறிக்க முடியும். ஆனால் இந்த ஆண்டு காவேரி நீர் பொயித்து போனதால்  தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் முழுமையாக இந்த முதலீடுகளை இழந்து நிற்கிறார்கள்.

விவசாயிகளுக்கு அரசு ஏன் தள்ளளுபடி  செய்ய வேண்டும் ?

நீண்ட காலமாக விவசாயிகள் தங்கள் விளைச்சலுக்கு உரிய விலை, மானியம் ,தள்ளுபடி என்று கேட்டுகொண்டும்    வெள்ளத்தால் இழப்பு ,வறட்சியால்  இழப்பு என்று பஞ்சபாட்டு பாடி கொண்டும் இந்த  தொழிலை தொடர்வதற்கான காரணம், அஃது வெறும் தொழில் மட்டுமல்ல; விவசாயம் என்பது  ஒரு  உயிரோட்டமான பண்பாடு, அது ஒரு வாழ்க்கை முறை.

former

தற்கொலை செய்த விவசாயி முருகானந்ததின் வீடு

மக்களுக்கு அடிப்படை தேவையான உணவையும் உடையையும்  உறுதிபடுத்துவது ஒரு  அரசின் கடமையாக இருக்கிறது.அதேபோல நாட்டின் பெரும்பான்மை  மக்களுக்கு  வேலை வாய்ப்பையும் வழங்குவதாகவும் விவசாயம்  இருக்கிறது.  இந்த  தேசத்தின்   வேலைவாய்ப்பை உறுதிபடுத்தும் தொழிலின் வீழ்ச்சி என்பது ஒட்டுமொத்த தேசத்தையும் பஞ்சம் , பட்டினி சாவுகளை நோக்கி  நகர்த்தும். இதனை தடுத்து  மக்களின் உணவையும்,வேலைவாய்ப்பையும் உறுதிபடுத்துவது ஒரு மக்கள் நல அரசின் கடமையாகிறது.

சிறு,குறு,கூலி விவசாயிகள்

விவசாயம் தோல்வி அடையும் போது சிறு, குறு விசாயிகளும்   நிலமற்ற கூலி விவசாயிகளும் தங்கள் வாழ்வாதாரத்தையும் வேலை வாய்ப்பையும் இழக்க நேரிடும். இதனால் இந்தியா முழுக்க கிராமங்களில் இருந்து நகரங்களை  நோக்கி இடம் பெயர்வோரின் எண்ணிக்கை பல மடங்காகமாறும் அபாயம் உள்ளது. இந்தியா முழுக்க விவசாத்தை நம்பி வாழும் மக்கள் மொத்த மக்கள் தொகையில் 54% பேர்   நீண்டகாலமாக தாங்கள் செய்து வந்த தொழில் பொய்த்து  தங்கள் உழைப்பை நம்பி   பெரும் எண்ணிக்கையில் நகரங்களை நோக்கி வரும் தொழிலாளர்கள்  நகரங்களில் வாழ்வதற்கான கூலி கிடைக்காமல்   தங்க இடம், உண்ண உணவு போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வழியற்று பட்டினி சாவுகளை நோக்கி அவர்களை தள்ளும்  மேலும் எந்த வாழ்வாதாரமும் அற்றவர்களாக மாற்றி பட்டினியில் நகரங்களில் அலையவிடுவது அவர்கள் குற்றவாளிகளாகவும் மாறும் வாய்ப்புள்ளது.   இந்த ஆண்டு தமிழகத்தில் இறந்து போனவர்கள் ஐந்து ஏக்கருக்கு குறைவாக வைத்திருக்கும் சிறு விவசாயிகளும்,குத்தகை விவசாயிகளும் தான்.  இதை தடுக்கும் பொறுப்பு நம்மை ஆளும் இந்திய அரசுக்குதான் இருக்க வேண்டும்

a2c784f7-4e27-48f8-a29a-6634c075df6f

என்ன  செய்கிறது இந்தியா ?

தன் நாட்டு மக்களின் உணவுக்கும் அவர்களின் வாழ்வாதார உரிமையை உறுதிப்படுத்த வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமை.ஆனால் இந்தியா உலக வரத்தக கழகத்தின் வணிக வசதி ஒப்பந்தத்தை  ஏற்றுகொண்டதன்  மூலம் சந்தையில் வாங்கும் சக்தி அற்றவர்கள் எல்லாம் பூமிக்கு பாரம் என முடிவெடுத்து  செயல்பட துவங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் படி  ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியில் 10 சதவித உற்பத்திக்கு மட்டும் 1986-88 காலகட்டத்தில் இருந்த   விலைக்கு மானியம் கொடுத்தால் போதும் என்ற முடிவை எடுத்துள்ளது. இதன் அடிப்படையில்

 • விவசாயிகளுக்கு உரம் ,விதை , மின்சாரம் உள்ளிட்டவைகளுக்கான மானியம் நிறுத்தப்படும்.
 • அரசு கொள்முதல் செய்வதையும், கொள்முதல் செய்து சேமித்து வைப்பதையும் நிறுத்துவார்கள்.
 • வங்கிகளில் இனி விவசாய கடன்கள் தள்ளுபடி கிடையாது ,

இவை எல்லாம் கொடுப்பது வெளிநாட்டில் இருந்து  விற்பனைக்கு வரும் நிறுவனங்களுக்கு  இடைஞ்சலாக இருகிறதாம் . இதை தான் ரிசர்வ் வங்கி கவர்னர்  விவசாயிகளின் கடன் தள்ளுபடி   வங்கி கொள்கைக்கு எதிரானது என்று  சொன்னார்.

இந்திய அரசு தன் மக்களை வெறும் சந்தையாக மட்டுமே பார்த்து உலகப் பெரும்வல்லரசுகளிடம்  நாட்டை அடகு வைத்திருக்கும் சூழலில் ,இந்த மக்கள் விரோத செயல்களுக்கு நேரெதிராக  வறட்சி நிவாரணம், கடன்தள்ளுபடி,  விளை பொருளுக்கான உரிய விலை என்றும், காவேரி  தண்ணீரை பெருநகரங்களில் குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும் ,குளிர்பான கம்பெனிகளுக்கும்  தாரைவார்த்து கொண்டிருக்கும் அரசை அம்பலபடுத்தி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் போராடி கொண்டிருக்கிரார்கள்.

 

இந்த போராட்டம்  தமிழக விவசாயிகளுக்காக மட்டும் அல்ல இந்தியாவின் உழைக்கும் ஏழை மக்களின் உணவை உறுதிபடுத்துவற்கான போராட்டம். இந்தியா முழுக்க உள்ள  விவசாயிகளின் வாழவாதாரத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம், இந்திய ஆறுகளின் தண்ணீர் என்பது பன்னாட்டு  நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் பண்டம் அல்ல.அது இந்த  தேசத்து மக்களின் உரிமை என்று முழங்கும்  போராட்டம்!  தெரிந்தோ ? தெரியாமலோ?  தமிழக விவசாயிகள்  வலலரசுகளின்  வணிக வசதிக்காக அடகு வைக்கப்பட்ட இந்திய விவசாயத்தை  மீட்பற்காக போராடி கொண்டிருகிறார்கள்.

2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  மோடி- ஒபாமா சந்திப்பிற்கு பின்  நவம்பர் 27 ஆம் தேதி இந்திய அரசு கைழுத்திட்ட வணிக வசதி ஒப்பந்தத்தில்  இருந்து இந்தியா வேளியேறுவதுதான் இந்த  விவசாயிகளின்  போராட்டத்திற்கு ஒரே தீர்வு.

 பன்னிர் பெருமாள்

 

பாவானி ஆற்று சிக்கல் குறித்து விரிவான கட்டுரைக்கு

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top