திருமணத்துக்கு பிறகு பாஸ்போர்ட்டில் பெண்கள் பெயரை மாற்ற தேவை இல்லை

மும்பையில், இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு கூட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் அந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

திருமணத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் பெண்கள், தங்களது தந்தையின் பெயரை இணைத்து பயன்படுத்தி வந்தனர். திருமணத்துக்கு பிறகு, அந்த பாஸ்போர்ட்டில் அவர்கள் பெயர் மாற்றம் செய்ய வேண்டி இருந்தது. இனிமேல், திருமணத்துக்கு பிறகும், பெயர் மாற்றம் செய்யாமல், அதே பெயரையே பயன்படுத்திக் கொள்ளலாம். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில், எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. எல்லா வளர்ச்சி திட்டங்களிலும் வீட்டு பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

அதன்படி, பெண்களுக்கு பேறு கால விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் குழந்தை பெறும் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படுகிறது.

‘உஜ்வாலா’ திட்டத்தின் கீழ், இலவச சமையல் கியாஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள 5 கோடி பேருக்கு இலவச சமையல் கியாஸ் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆனால், ஒரே ஆண்டிலேயே 2 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. சமையல் கியாஸ் மானியத்தை விட்டுத்தருமாறு வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, 1 கோடியே 20 லட்சம்பேர் மானியத்தை விட்டுத் தந்துள்ளனர்.

பெண்களுக்கு அதிக கடன்

தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்ற உணர்வு பெண்களிடம் உள்ளது. பால் உற்பத்தி தொழிலில் அவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் ஆண்களை விட இரண்டு அடி முன்னால் இருப்பார்கள். ‘முத்ரா’ திட்டத்தில் கடன் பெற்றவர்களில் 70 சதவீதம்பேர் பெண்களே ஆவர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top