உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கில் கர்நாடக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி

 

Supreme-Court-1487364112

 

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்குமாறு பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே நிலவும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ‌ ராய், ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய அமர்வு, ‘‘செப்டம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ‌ ராய், ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய அமர்வு முன் நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், “கர்நாடக அரசின் கோரிக்கையில் எவ்வித முகாந்திரமும் இல்லை. எனவே சீராய்வு மனுவை தள்ளுபடி செய்கிறோம்’’ என உத்தரவிட்டனர்.

கடந்த மார்ச் 21-ம் தேதி மீண்டும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், ‘‘கர்நாடக அரசு வரும் ஜூலை 11-ம் தேதி வரை தமிழகத் துக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும்’’ என உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும்போது, ‘‘காவிரியின் குறுக்கே உள்ள அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது’’ என தெரிவித்துள்ளார்.

அதேசமயம் கர்நாடக அரசின் இந்த கைவிரிப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவில்லை. இதன் காரணமாக காவிரி நீர்பாசன பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top