‘கரபாத்திரர்’ என்றொரு பல்கலைக்கழகம்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வடசென்னையை மையமாக கொண்டு வேதாந்த நெறி என்னும் அத்வைத சமயத்தைப் பரப்பிய முக்கிய ஆளுமைகள் நால்வர். அவர்கள் வியாசர்பாடி கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், ஸ்ரீ சாது இரத்தினசற்குரு என்று போற்றப்படும் சை.இரத்தின செட்டியார், குயப்பேட்டை ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள், வண்ணை சாது நாராயண தேசிகர். இந்த நால்வர் பெரு மக்கள் வழி வந்த பல சீடர்கள் அன்றைய சென்னை மாநகரில் குறிப்பாக வட சென்னையைச் சுற்றி அமைந்துள்ள முக்கிய கல்விச் சாலைகள், இந்து தியாலஜிகல் பள்ளி, தொண்டைமண்டல துளுவ வேளாளர் பள்ளி மற்றும் முத்தியாலுபேட்டை உயர்நிலை பள்ளிகளில் பணி மேற்கொண்டிருந்த பல்வேறு தமிழ் வித்வான்கள் மேற்குறிப்பிட்ட மடங்களோடு மிகவும் தொடர்புடையவர்களாக இருந்தவர்கள். குறிப்பாக திருதுருத்தி   இந்திரபீட கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் வம்சாவளி பரம்பரையினரின் சீடர் குழாம்கள். பெரும்பாலும் பிராமணர் அல்லாதவர்கள் தலைமைப் பீடங்களை எற்று நடத்தி தமிழ் குருகுல பள்ளி போன்று வடமொழியையும், தென்மொழியையும் சமமாக பாவித்து தமிழ் வழி அத்வைத வேதாந்தத்திற்கு பெரும் பங்காற்றினார்கள். இவர்களை சூத்திர வேதாந்திகள் என்றும் அழைப்பது உண்டு  என்று      தெ .பொ. மீ  தனது நூலில் குறிப்பிடுகிறார் . அதே சமயம் வர்ணாசிரம தர்மபடி சாதிகளை மறுத்த மகான்கள் இவர்கள். இந்த நால்வரில் தமிழ் உலக அத்வைதத்திற்கு பெரும் பங்காற்றியவர் வியாசர்பாடியில் சமாதி கொண்டருளும் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், மிகப் பெரிய குணக்கடல் ஆளுமை மிக்க ஞானக்கடல்.

 

karappaththirar

சென்னை வேப்பேரி செங்கல்வராய நாயகர் தோட்டத்தில் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் முன்னிலையில் சித்தாந்த தீபிகை ஆசிரியர் ஜே.எம்.நல்லசாமி பிள்ளை தலைமையேற்க திரு.வி.க. அவர்கள் சைவ சித்தாந்த பார்வையில் ‘அத்வைதம்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகிறார். பொதுவாக சித்தாந்திகளும் வேதாந்திகளும் கொள்கை அடிப்படையில் முரண்பட்டவர்களாகவே காணப்படுவர். சொற்பொழி வாற்றிய பின்பு விடைபெறும் நேரம் ஜே.எம்.நல்லசாமி பிள்ளை சுவாமிகளை வணங்கி விட்டு விடை பெறுகிறார். திரு.வி.க அவர்களோ சுவாமிகளை வணங்காமல் வீடு வந்து சேர்கிறார்.

திரு.வி.க. வீட்டிற்கு வந்த பிறகு சுவாமிகளை வணங்காமல் வந்தது குறித்து மனச்சஞ்சலம் அடைகிறார். இயல்பாகவே அவரால் இருக்க முடியவில்லை. உணவையும் உட்கொள்ள இயலவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்படுகிறார். வீடு முழுவதும் புலால் நாற்றம் வீசுவது போல உணர்கிறார். பொழுது புலர்கின்றது. காலைக்கடன்களை முடித்து விட்டு வாயில் சிறிது கற்பூரத்தை இட்டு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளை காண விரைந்தோடி வருகிறார்.

சுவாமிகளைக் கண்டதும் தன் பிழையை நினைத்து, வருந்தி திரு.வி.க. வணங்கினார். அச்சமயம் சுவாமிகள் புன்முறுவலித்து “ இது வருமென்று எனக்குத் தெரியும் ” என்று சொல்லிவிட்டு சிவஞான சித்தியாரை எடுத்து திறந்து முதல் எட்டுச் சூத்திரங்கள் உம்மையும் எம்மையும் பிரிப்பன. இறுதிச் சூத்திரங்கள் நான்கும் நம் இருவரையும் சேர்ப்பன. நேற்று பிணக்கம் இன்று இணக்கம் என்று கரபாத்திர சுவாமிகள் மிகவும் எளிமையாக வேதாந்தத்தையும் சித்தாந்தத்தையும் திரு.வி.க. அவர்களிடம் விளக்கியுள்ளார்.

சுவாமிகளின் அறிவுறுத்தலின் பேரில் தமிழில் உள்ள வேதாந்த நூல்களை படித்து ஆழம் காண மேற்கொண்டதாக திரு.வி.க. அவர்கள் தனது வாழ்க்கைச் சரித்திரத்தில் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.

தனது கரத்தினை (கையினை) பாத்திரமாக கொண்டு முன்று கவள உணவை பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்ததால் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் என்றழைக்கப்பட்டவர் சிவப்பிரகாசர். நம் காலத்தில் வாழ்ந்த பட்டினத்தாரின் கடுந் துறவு இயக்கத்தின் வாரிசு. பிறப்பால் வீரசைவர் கொள்கையால் வேதாந்தி. ஞான பக்குவ நிலையில் விகிதர் எனப்படும் எட்டாவது படி நிலையை அடைந்த மகான்.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் வேதாந்த பட்டறையில் உருவாகிய பல முக்கிய ஆளுமைகள் இந்த நூற்றாண்டில் சிறப்பு மிக்கவர்களாக விளங்கியுள்ளனர். இவரது முதல் சீடர் மேல்நாட்டில் மருத்துவம் பயின்று இங்கு வந்து வேதாந்தத்தில் ஈடுபட்டவரான இராஜாபகதூர், சூளை   ல.செங்கல்வராயநாயகர், சென்னை இராமகிருஷ்ண இயக்கத்துக்கு அடித்தளமிட்ட சுவாமி விவேகானந்தரின் சீடர் டாக்டர் நஞ்சுண்டராவ், ஆனந்த போதினி பத்திரிகையின் பத்திராதிபர் நாகவேடு – சிறுமணவூர் முனுசாமி முதலியார், இலக்கண இலக்கிய தர்க்க வேதாந்த போதகாசிரியார் கோ.வடிவேல் செட்டியார், தர்க்க நிபுணர் முருகேச முதலியார், தலித் மக்களின்  கல்வி அபிவிருத்திக்காக நந்தனார் கழகம் நிறுவிய சகஜானந்தர், ஆறு தத்துவ சாஸ்திரங்களில் நிபுணத்துவம் கொண்டவரான மருவூர் கணேச சாஸ்திரியார், புகழ் பெற்ற நாவலாசிரியர் ஆரணி குப்புசாமி முதலியார், வேதங்களை வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகள் போன்ற பல்வேறுபட்ட முக்கிய ஆளுமைகள் சிவப்பிரகாச சுவாமிகளினுடைய அனுக்கிரகத்தால் செதுக்கப்பட்டவர்கள் என்பதை தமிழகம் அறியாது.

nanjunder

சிவப்பிரகாசர் முத்துசாமி மற்றும் செங்கமலத்தம்மையார் என்ற           தம்பதிகளுக்கு நான்காவது மகனாக திருப்போரூர் நகரில் பிறந்தார். தன்னுடைய பதினாறாவது வயதில் தந்தையை இழந்த பிறகு சென்னை மாநகருக்கு வந்து வெற்றிலை வியாபாரம் செய்கிறார், தனது தமையன்மார்களின் வற்புறுத்தலுக்காகவே வியாபாரம் செய்தாலும் மனதிற்கு பிடித்து வியாபாரம் செய்யவில்லை. சில சமயங்களில் வியாபாரத்தின் மூலம் சம்பாதிக்கும் வருமானத்தை மண்னை தோண்டி புதைத்துவிட்டு அதன் மேல் துண்டை விரித்து தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார். தன்னை மறந்து பல நேரங்களில் நிர்விகல்ப சமாதி நிலைக்குச் சென்று விடுவார்.

மனம் பற்றாமல் வியாபாரம் செய்து வரும் வேலையில் அக்காலத்தில் திருத்துருத்தி இந்திர பீட கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மரபைச் சார்ந்த ஈசூர் சச்சிதானந்த சுவாமிகளுடைய சீடர்களின் தொடர்பு ஏற்பட்டு அவர்களிடம் சில நூல்களினை பயின்று வந்தார், பின்பு அக்கால சென்னையின் வேதாந்த சூடாமணியாக் விளங்கிய சாது சைவ இரத்தின செட்டியாரை குருவாக் கொண்டு பல வேதாந்த நூல்களினை ஐய்யம்  திரிபற  கற்றுணர்ந்தார்.

தனது வீட்டில் மிகுந்த போராட்டத்துக்கிடையே துறவு நிலை அடைவதற்காக தக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தார், அச்சமயம் தனது குருவான ரிப்பன் பிரஸ் சைவ இரத்தின செட்டியாரிடம் போய் சந்நியாசம் வழங்கும்படி வேண்டினார். அச்சமயம் இரத்தினசெட்டியார் சந்நியாசம் என்பது ஆரிய மரபுக்கு உரியது. தமிழ்நாட்டுக்கு உரியது துறவு மட்டுமே சங்க இலக்கியத்தில் முல்லைப்பாட்டில் ” கற்றோய்த்துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோலசை நிலைகடுப்ப “ என்ற வாக்கியத்தை மேற்கோள் காட்டி நாம் கை கொள்ள வேண்டியது துறவு மட்டுமே. சந்நியாச வேடமல்ல என்று கூறினார். எனது ஆசிரியர் திருக்குறள் சாமி என்னும் கிருஷ்ணாந்த யதீந்திர சுவாமிகளிடத்தில் யான் மனத்துறவு மட்டுமே பெற்றுக்கொண்டேன் என்று அறிவுறுத்தினார் சைவ இரத்தினசெட்டியார்.

திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலுக்குச் சென்று தான் அணிந்த உடைகளை அவிழ்த்து விட்டு கோவணத்தை மட்டும் அணிந்து கொண்டு, தனது வீட்டில் வீரசைவ முறைப்படி அணிந்திருந்த இஷ்ட லிங்கத்தையும் விட்டு துறவறத்தை மேற்கொண்டு நேராக தான் பிறந்த ஊரான திருப்போரூருக்குச் சென்று அன்னம் வேண்டும்படி பிச்சைகேட்டார். இவரது அண்ணியார் வாழை இலையில் உணவை பரிமாறி உண்னும் படி வேண்ட, சிவப்பிரகாசரோ எனது கரத்தில் முன்று கவளம் உணவை வேண்டி வாங்கி சாப்பிட்டுவிட்டு கையை சுத்தம்செய்ய ஏரிக்குச் சென்று விட்டார், அது முதல் கரபாத்திர சிவப்பிரகாசர் சுவாமிகள்என நாமம் பெற்றார்.

திருவான்மியூர் கடலோரப்பகுதியில் சுடுகாட்டுப் பகுதிகளில் தன்னிலையின்றி பித்து போல் திரிந்தார். அச்சமயம் சுவாமிகளுடன் ஒரே ஆசிரியர்பால் கற்ற மாணவர்கள் கோ.வடிவேல் செட்டியார், அரங்கநாதம் பிள்ளை ஆகியோர் வந்து பார்த்து விட்டு செல்வார்கள். ஆடு,மாடு மேய்க்கும் சிறுவர்கள் பைத்தியம் என்று எண்ணி சுவாமிகள் மீது கல்லையும்,மண்ணையும் எடுத்து எறிந்து வீசி விளையாடியதை கண்ட பிறகு சோமசுந்தர நாயகர் என்பவர் பத்திரமாக அவரை அழைத்துக் கொண்டு போய் திருவான்யூர் பகுதியில் உள்ள பாழடைந்த ஆசிரமத்தில் அமர்த்தி வைக்கப்பட்டார், பின்பு பறைசேரிகடை பெருமாள் கோவில் சிலகாலம் வாசம் செய்தார், பின்பு சூளை செங்கல்வராயநாயகர் பூந்தோட்டத்தில் கிச்சிலி மரத்தில் தவ வாழ்வை மேற்கொண்டார், இதே கிச்சிலி மரத்தில் இராமலிங்க சுவாமிகளும் தவம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூளை செங்கல்வராய நாயகர் தோட்டத்தில் சிவப்பிரகாச சுவாமிகள் ஆசிரம வாசம் செய்த காலத்தில் கோ. வடிவேல் செட்டியார், முத்தியாலு பேட்டை கல்விச்சாலை தலைமையாசிரியர் மாணிக்கம் செட்டியார், நஞ்சுண்டராவ்,  விச்சு முத்துகுமாரசாமி போன்ற பெரிய ஆளுமைகள் சுவாமிகளிடம் வந்து அளவளாவி கொண்டிருப்பார். இச்சமயத்தில் சாது சங்கம் ஒன்றை கூட்டி வருடந்தோறும் சித்திரை பெளர்ணமி தினத்தையொட்டி பல்வேறு சமய அறிஞர்களை வரவழைத்து சர்வசமய சொற்பொழிவை ஆற்றச் செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர்.

அதன் விளைவாக கோ. வடிவேல் செட்டியாரை தலைமையாக கொண்டு அரிய, பெரிய ஆளுமைகளை சென்னைக்கு வரவழைத்து பல்வேறு அடியார்களுக்கும், அன்பர்களுக்கும் மூன்று வேளை போஜனமிட்டு குறைந்தது மூன்று நாட்கள் தத்துவ சொற்பொழிவுகள் நடைபெற வழிவகுத்தார் சிவப்பிரகாச சுவாமிகள்.

vadivel

கோவிலூர் ஆதின துறவாண்டவர் என்னும் திருக்களர் ஆண்டவரின் சீடரான வீரசுப்பையா சுவாமிகள் வடமொழி, தென்மொழியில் ஆழ்ந்த அறிவுடையவர். இவரைக் கொண்டு ”ஆன்மபுராணம்” அரிய பெரிய வேதாந்த நூலினை படைக்கச் செய்து தமிழுக்கு கொண்டு வந்ததில் சிவப்பிரகாசரின் பங்கு முக்கியமானது. இந்த நூலினை சிவப்பிரகாச சுவாமிகளின் சீடர் மூர்த்தி சுவாமிகள் பதிப்பித்தார்.

தர்க்க நிபுணர் அரங்கநாதம் பிள்ளை அவர்களைக் கொண்டு ஹிந்தி மொழியிலிருந்து ஸ்ரீமத் சித்கனானந்த கிரி சுவாமிகள் எழுதிய அத்வைத சிந்தா கெளஸ்துபம் என்ற நூலினை ‘தத்துவாநு சந்தானம்’ என்ற பெயரில் வேதாந்த நூலினை தமிழுக்கு கொண்டு வர தூண்டுகோலாக இருந்தவர் சுவாமிகள். இந்த நூலினுக்கு பொருளுதவி செய்தவர் சிவப்பிரகாச சுவாமிகளின் சீடர் தி. கோபால நாயகர் அவர்கள்.

 

first page

227 சாஸ்திர நூல்களின் சாராம்சங்களை வெண்ணெய் போல் திரட்டி மோட்ச சாதனம் அடைய விரும்பும் சாது ஜனங்களுக்கும் உபயோகப்படும் வகையில் “வேதாந்த மனன சிந்தாமணி” என்ற மிகப்பெரிய அரிய நூலினை 1901ம் ஆண்டில் டாக்டர் . நஞ்சுண்டராவ் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. இந்த நூலினை கற்போர் பலஞான கலைகளை கற்பதற்கு சமம். இந்த ஒரு நூல் வைத்தே கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் அறிவின் மேதமையை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இந்த நூல் 1909ம் ஆண்டு ஏ. சுப்பிரமணிய ரெட்டியார், வ. தாண்டவராய முதலியார் ஆகியோரால் மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஞான ஸாதக ஸஹாயம் என்ற மற்றுமொரு நூலும் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளால் இயற்றப்பட்டுள்ளது.

சிவப்பிரகாச சுவாமிகளுடைய குருநாதர் சைவ- இரத்தின செட்டியார் வேண்டுக்கோளுக்கிணங்க,

 ”சென்னை வியாசர்பாடி ஷேத்திரத்திற் சாலையொன்றே யின்னலின்றிக் கை கூடி லென்னேசாபன்னரிய சாதுக்களைச் சேர்த்துச் சற்சங்கங் கூட்டுவித்து துற் சங்கம் நீத்துய்வேன்ளேய்ந்து

என்ற வென்பாவிற்கிணங்க கரபாத்திர சுவாமிகளின் சீரிய சிந்தனையால் வியாசர்பாடியில் ஆனந்தாசிரமம் அமைத்து சாதுக்களுக்கு தினந்தோறும் உணவிட்டு வடமொழி தென்மொழி பயின்று வருவதற்கு தமிழ் வழி வேதாந்த குருகுலம் ஒன்றை ஏற்படுத்தினார். இந்த குருகுலம் மூலமாக பல்வேறு ஆளுமைகளை உருவாக்கி பல்கலைக்கழகம் போன்று செயல்பட்டது. இந்த குருகுலத்தின் மூலமாக வெளிவந்து பல்வேறு ஆளுமைகள் மூலம் பல்வேறு மொழிகளிலிருந்து அத்வைத வேதாந்த நூல்களினை தமிழுக்கு கொண்டு வந்து வளம் சேர்த்ததில் பெரும் பங்கு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளுக்கு உண்டு.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளிடம் பேரன்பு கொண்ட அந்தணர் அன்பர்களும் பக்தியுடன் தரிசிக்க வந்தனர். மருவூர்   கணேச சாஸ்திரியார் கரபாத்திர சுவாமிகளின் ‘பாதசேகரர்’ என்று தன்னை அறிமுகபடுத்திக் கொள்கிறார். அவ்வளவு எளிதாக அந்தணர்கள் பிராமணரல்லாதவர்க்ளுக்கு குரு ஸ்தானம்  அளித்துவிட மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளை விட கணேச சாஸ்திரிகள்  ஆறு தத்துவ சாஸ்திரங்களிலும் கரை கண்ட மிகப்பெரிய அறிவாளி. கணேச சாஸ்திரிகளை தவிர்த்து அருணாசல சாஸ்திரிகள், குடகு அப்பையா, டாக்டர், வேங்கடாசல சாஸ்திரி போன்ற சில அந்தணர்கள் சுவாமிகளிடம் மிக பக்தியோடு இருந்தனர். அதே போன்று பல பிராமணப் பெண்கள் திருவேணியம்மாள், சிவகங்கை அம்மாள் சுவாமிகளிடம் சரணடைந்து தன் வாழ்நாள் முழுவதும் பணிவிடை செய்தனர்.

நாகவேடு முனுசாமி முதலியார் செங்கல்வராய தோட்டத்திற்கு வந்து பத்திரிக்கை ஒன்று ஆரம்பிக்க எண்ணினார். சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற்று தனது அனந்தாசிரமம் என்ற பெயரைப் போலவே “ஆனந்த போதினி” என்று பெயரிட்டு சுவாமிகளுடைய ஆசிர்வாதத்தால் தமிழ்நாட்டிற்கு ஆனந்தத்தை தமது பத்திரிக்கை வாயிலாக போதித்துக் கொண்டு தாமும், பத்திரிக்கையும் பெரும் புகழ் அடைந்து பெயர் பெற்றது.

தலித் உலக ஞான சூரியன் முனுசாமி என்ற பெயர் கொண்ட வள்ளுவர் குலத்தைச் சேர்ந்த சிறுவன் ஆரணி அருகிலுள்ள புதுப்பாக்கம் கிராமத்தைச் சார்ந்தவர். ஈசு  சச்சிதானந்த சுவாமிகளின் சீடர் முனுகப்பட்டு நீலமேக சுவாமிகளால் இச்சிறுவனை அடையாளம் கண்டு நரசிங்கபுரம் தக்கண சுவாமிகள் மூலம் சென்னை வந்தடைகிறார். முனுசாமி. கோ வடிவேலு செட்டியாரின் வேதாந்த பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்த வேளையில் முனுசாமிக்கு குழந்தைவேல் சாமிகள் தொடர்பு உண்டாகிறது. குழந்தைவேல் சுவாமி மூலம் வியாசர்பாடி கரபாத்திர சிவப்பிராகாச சுவாமிகளிடம் முனுசாமி வந்தடைகிறார்.

உமாபதி சிவாச்சாரியாரிடத்தில் பெற்றான் சாம்பன் தீட்சை பெற்றது போல கரபாத்திரரை கண்ட சிறுவன் முனுசாமிக்கு     துறவை அளித்து என்றும் ஆனந்தமாய் விளங்குபவன் என்ற பொருள் கொண்ட “சகஜானந்தம்” என்ற காரணப் பெயரிட்டு அழைத்தார் சுவாமிகள். சகஜானந்தர் தம்முடன் இருப்பதை அறிந்த ஆதிக்க சாதியினர் சுவாமிகளிடம் ஒருவாறு முரண்பாடு, பொறாமையும் கொண்டனர்.

தர்க்கத்தில் சிறந்த முருகேச முதலியாரை சுவாமிகள் அழைத்து சகஜானந்தருக்கு தர்க்கம் போதிக்கும்படி வேண்டினார். முதலியாருக்கு உள்ளுக்குள் கோபம் இருந்தாலும் சுவாமிகளின் பேச்சை தட்ட முடியாமல் சொல்லிக் கொடுக்க முன்வருகிறார். தமிழியல் கல்வி வல்லுநரான சின்னையா நாயகரை கொண்டு இலக்கண இலக்கிய தமிழ் காவியங்களை கற்றுத்தர ஏற்பாடு செய்கிறார். ஒருசமயம் சுவாமிகளுடன் நடேச நாயகர் என்பவர் பேசிக் கொண்டிருக்கும் போது சகஜானந்தர் தாகமெடுத்த காரணத்தால் அங்குள்ள பாத்திரத்திலிருந்த தண்ணீரை  குடித்து விட்டார். அதை கண்ட நடேச நாயகர் மிகவும் கோபமுற்று பலவாறாக திட்டிவிட்டு இனியும் தாமதிக்காமல் சகஜானந்தம் என்னும் பறைப்பையனை இந்த ஆசிரமத்தில் இருந்து நீக்கிவிட வேண்டும். இல்லையெனில் சுவாமிகளை விஷம் கொடுத்து கொன்றுவிடுவேன் என்று கடிதம் மூலம் தெரிவித்தார். கடிதத்தை கண்ட சிவப்பிரகாசர் முன்பை விட மேலும் நடேச முதலியாரிடம் பேரன்பை காட்டி மனமாற்றத்தை ஏற்படுத்தினார். சகஜானந்தருக்கு தேவையான எல்லா கல்வியையும் சுவாமிகள் கண்ணும் கருத்துமாக அளித்தார். நலிவடைந்த தலித் மக்களின் கல்வி அபிவிருத்திக்காக சிதம்பரம் சென்று நந்தனார் மடத்தை உருவக்கினார் சகஜானந்தர். நந்தனார் மடம் உருவாகும் போது ஏற்பட்ட சில சிக்கல்களை கரபாத்திர சுவாமிகளிடம் பேரன்பு கொண்டிருந்த சிதம்பரம் பொன்னம்பாலம் சுவாமிகள் மடாதிபதி பரஞ்சோதி சுவாமிகள் முன்னின்று தீர்த்து வைத்தார். சகஜானந்தருக்கு முழுக் கல்வியையும் அளித்ததோடு மட்டுமில்லாமல் பல அறிஞர்கள் கூடிய கூட்டத்தில் சுவாமிகளின் ஆணைக்கு இனங்க சாது சங்கம் தொடங்கிய போது “நான் யாரென்றறிதல் எந்த பிரமாணத்தால்” என்ற தலைப்பில் சகஜானந்தர் தனது பேச்சினால் எல்லோரையும் அசர வைத்துவிட்டார்.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் காலத்திற்குப் பிறகு மடாலயத்தை கவனித்து வந்தவர் முக்தானந்த சுவாமிகள். முக்தானந்த சுவாமிகளின் தூண்டுதலினால் த. ப. இராமசாமி பிள்ளை என்ற சிவநேச செல்வரைக் கொண்டு அவருடைய பொருளுதவியால் வடமொழி வேதங்கள் ரிக், யஜூர், சாம மூன்று வேதங்களும் முழுமையாக வெளிவந்து தமிழ் உலகிற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. த. ப. இராமசாமி பிள்ளை அவர்கள்  இந்த மடத்திற்கு  வந்து  சென்ற  காரணத்தால் தமிழ்கூறும் நல் உலகிற்கு  வேதமொழி பெயர்ப்பு நூல்கள்  இலவசமாக  கிடைத்தது.இந்த   வேதங்களினை மொழிபெயர்த்தவர் காசிவாசி. சிவானந்த யதீந்திர சுவாமிகள். கரபாத்திர சுவாமிகளின் அனுகூலம் பெற்றவர்.

kara-life

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் சாது சங்கம் மூலம் தமிழ் அத்வைத உலகிற்கு ஏராளமான நூல்களினை தனது சீடர்களின் மூலமாக பதிப்பிக்கச் செய்து தமிழ் வழி வேதாந்தத்திற்கு வளம் சேர்த்தனர். சுவாமிகளினுடைய சீடர்கள் அந்தணர்கள் முதல் தலித் வரை எவ்வித பாகுபாடுமின்றி சாதி வர்ணத்தால் அல்ல குணத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுவர் என்பதை சகஜானந்தர் மூலம் இந்த உலகுக்கு அடையாளம் காட்டியவர். கரபாத்திரருடைய ஜீவசமாதி வியாசர்பாடியில் அமைந்துள்ளது. இவர் தவ வாழ்வு மேற்கொண்ட தியான அறை மூடிய நிலையில் உள்ளது. தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்த ஆசிரமம் இருக்கிறது. த.ப.இராமசாமி பிள்ளையின் பொருளுதவிக்கொண்டு கரபாத்திர சிவபிரகாச சுவாமிகளுடைய சரித்திரம் காசிவாசி சிவானந்த யதிந்திர சுவாமிகளால் இயற்றப்பட்டு நன்கொடையாக அளிக்கப்பட்டது.   பல்கலைகழகம் போன்று இயங்கிய வியாசர்பாடி கரபாத்திர சுவாமிகளின் மடம் இன்று    அதற்கான எந்த சுவடுமின்றி  சாமானியர்கள் வந்து தரிசித்து செல்லும் கோவிலாகவே இருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஆளுமைகள் உலவிய இந்த இடத்தில் நாமும் சென்று தரிசித்து விட்டு கரபாத்திரரின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டு வரலாமே..

கரபாத்திரர் விதேக கைவல்யம் அடைந்த ஆண்டு: 5-4-1918 [அவர் நினைவாக இக்கட்டுரை]

 

ரெங்கையா முருகன்

‘அனுபவங்களின் நிழல்  பாதை’  நூலாசிரியார்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top