நிரபராதிகள் தண்டிக்கப்படுவது இந்திய நீதிமன்றத்தில் ஒரு தொடர்கதை…

Untitled

2007 டிசம்பர் மாதம் 27ஆம் தேதி விஜயவாடாவில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் ஆயிஷா மீரான் எனும் 17 வயது பார்மஸி முதலாமாண்டு மாணவி இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்தது யார் என்று தெரியவில்லை அவரின் அறையில் தங்கியிருந்தவர்களுக்கு கொலையைப் பற்றி தெரியவில்லை. ஆனால் அறைக்கு அருகில் இருந்த கழிவறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தலையில் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்யபப்ட்டிருந்தார் ஆயிஷா மீரான். அவர் உடலின் அருகில் ஒரு கடிதம் காதலிக்க மறுத்ததால் ஆயிஷாவை பலாத்காரம் செய்து கொலை செய்தேன் என்று எழுதப்பட்டு இருந்தது.

 

அதன் பிறகு பல போராட்டங்கள் 1300க்கும் மேலானவர்கள் விசாரிக்கப்பட்டனர், ஆயிஷா தங்கியிருந்த விடுதியை கடந்து செல்பவர்களை எல்லாம் கைது செய்து விசாரித்தது. ஆஞ்சநேயலு என்பவரை முதலில் குற்றவாளி என்று காவல்துறை கூறியது, ஆனால் அவர் குற்றம் நடந்தபொழுது வேறு இடத்தில் இருந்தார் என்பதற்கான சாட்சியங்கள் கொடுக்கப்பட்டு நிரபராதி என்று வெளியில் வந்தார். அடுத்து குருவிந்தர் என்ற லட்டுவை குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அவர் தான் குற்றம் செய்யவில்லை என்கிறார், காவல் துறை 25 லட்சம் கொடுக்கிறோம் குற்றத்தை ஒத்துக்கொள் என்று பேரம் பேசுகிறது. ஆனால் லட்டு மறுத்து தன்னுடைய நிரபராதி தன்மையை மனித உரிமை ஆணையம் மூலம் நிரூபிக்கிறார்.

 

இதே சமயத்தில் சத்யம் பாபு என்பவர் செல்போன் திருடினார் என்ற வழக்கில் 2008 ஜனவரி மாதம் சிறைக்கு செல்கிறார் 23 ஜூலை அன்று ஆறுமாத சிறை தண்டனை முடிந்து வெளியில் வருகிறார். அவரை ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி அவரது கிராமத்திற்கு அதிரடிப்படையுடன் வந்து காவல்துறை கைது செய்து செல்கிறது. அவரின் மீதான ஒரே வழக்கு அதுவரை செல்போன் திருடிய வழக்கு மட்டும் தான். 11ஆம் தேதி கைது செய்யப்பட்டவரை 16ஆம் தேதி கைது செய்ததாக கூறி 17ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் ஆயிஷாவை கொலை செய்தவர் என்று நீதிமன்றத்தில் நிறுத்துகிறது காவல்துறை. 14ஆம் தேதியே கிராம மக்கள் சத்யம் பாபுவை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றன ஆனால் நீதிமன்றத்தில் 11ஆம் தேதி கைது செய்துவிட்டு சட்டவிரோதமாக 5 நாள் காவலில் வைத்துவிட்டு 17ஆம் தேதி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது அம்பலம் ஆனது.

 

இது மட்டுமல்ல மரணமடைந்த ஆயிஷாவின் பெற்றோரும் சத்யம் பாபு கொலையாளி இல்லை என்று செசன்ஸ் கோர்ட்டில் சாட்சியம் அளிக்கின்றனர். செசன்ஸ் நீதிமன்றத்திற்கு காவல்துறையினரால் தூக்கி தான் கொண்டுவரப்படுகிறார் சத்யம் பாபு. அவருக்கு GB Syndrome எனும் நரம்பியல் வியாதி உள்ளது. அவரால் மற்றவர் உதவி இல்லாமல் நடக்க இயலாது என்றாலும் அவர் 2005 ஆம் ஆண்டில் இருந்து அதாவது தனது குடும்ப பிரச்சனை காரணமாக சைக்கோவாக மாறி இத்தகைய குற்றங்களை செய்தார் என்று காவல்துறை சொல்கிறது. ஆனால் அவர் மீது இருந்த ஒரே வழக்கு இதற்கு முன்பு செல்போன் திருடிய வழக்கு மட்டும் தான். ஆனால் அவரை தொடர் குற்றவாளியாக சித்தரித்தது காவல் துறை.

photo2

2010 செப்டம்பரில் செசன்ஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பின் பொழுது சத்யம் பாபு தான் குற்றவாளி அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று நீதிபதி கூறிவிட்டு, சத்யம் பாபுவிடம் ஆயுள் தண்டனை அனுபவிக்கிறீர்களா இல்லை தூக்கு தண்டனை வேண்டுமா என்று கேட்டபொழுது. “என்னை தூக்கில் போடுங்கள், செய்யாத குற்றத்திற்கு என்னை குற்றவாளி என்று நீதிமன்றம் முடிவு செய்துவிட்ட பிறகு நான் சிறையில் வாழ விரும்பவில்லை” என்று கூறினார். இத்துடன் நிற்கவில்லை 2013 ஆம் ஆண்டு மே மாதம் மருத்துவமனை சென்று திரும்பும் வழியில் தப்பித்து ஓடிவிட்டார் என்று கூறினார்கள் காவல்துறை அடுத்த இரண்டு மணி நேரத்தில் கைதும் செய்தனர்.

 

இப்பொழுது 9 வருடங்களுக்கு பிறகு ஹைதராபாத் உயர்நீதி மன்றம் சத்யம் பாபுவை நிரபராதி என்று மார்ச் 30ஆம் தேதி அறிவித்தது, அதன் கீழாக ஏப்ரல் 2 காலை, விடுதலை செய்யப்பட்டார் சத்யம் பாபு. ஆனால் இந்த வழக்கின் உண்மை குற்றவாளிகள் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஏன் அகில இந்திய பெண்கள் ஆணையத்தின் ஆணையர் செசன்ஸ்  நீதிமன்றத்தில் விடுதியின் வார்டன், மற்றும் ஆயிஷாவின் அறையில் தங்கியிருந்த பெண்கள் இருவரிடமும் உண்மை கண்டறியும் சோதனையான நார்கோ சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கை கொடுத்தார். நீதிமன்றமும் சோதனைக்கு உத்தரவிட்டது ஆனால் இது வரை அவர்களுக்கு நார்கோ சோதனை நடத்தப்படவில்லை.

 

இந்த வழக்கில் பேசிய மனித உரிமை ஆர்வலர்களில் இருந்து மரணம் அடைந்த ஆயிஷா மீராவின் பெற்றோர் வரை முன்னாள் காங்கிரஸ் ஆட்சில் துணை முதல்வராக இருந்தவரின் பேரன் தான் குற்றவாளி, அவர் ஆயிஷா தங்கியிருந்த விடுதியின் முதலாளிக்கு சொந்தக்காரர் என்ற வகையில் பெண்கள் விடுதிக்குள் அடிக்கடி வந்து செல்வார் அவரை விசாரிக்க வேண்டும் என்று சொன்ன பொழுதிலும் இது வரை அவர்கள் விசாரிக்கப்படவில்லை. ஆயிஷாவின் பெற்றோர் ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஆயிஷா மரணத்திற்கு 2 ஆண்டுகள் கழித்து தங்கள் வேலையை விட்டுவிட்டு நீதி  கேட்டு தங்கள் பயணத்தை தொடர்ந்து கொண்டுள்ளனர். சத்யம் பாபுவின் விடுதலையை வரவேற்ற அவர்கள் அரசு அவருக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் ஆனால் நீதிமன்றமோ 8 ஆண்டு நிரபராதி சிறையில் இருந்த கொடுமைக்கு ஒரு லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க தீர்ப்பில் கூறியுள்ளது.

 

சத்யம் பாபு எனக்கு அரசிடம் இருந்து எந்த நஷ்ட ஈடும் வேண்டாம், உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடியுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார். சத்யம் பாபு விடுதலை செய்யப்பட்டார் என்று மகிழ்வதா இல்லை 17 வயது இளம் பெண் ஆயிஷாவின் மரணத்திற்கு 10 ஆண்டுகள் கழித்து இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று கவலை கொள்வதா..

 

இந்திய நீதிமன்றமும் காவல் துறையும் அடியுடன் சுத்தம் செய்யப்பட்டு, சட்டத்தை தவறாக பயன்படுத்தும் நீதிபதிகளும் காவல் துறையினரும் தண்டிக்கப்படும் வகையில் சட்டங்கள் திருத்தப்படாத வரை நிரபராதிகள் தண்டிக்கப்படுவது தொடரும்.

 

ஹரிஹரன்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top