லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; விலை உயரும் வர்த்தகபொருட்கள்.

 

 vellai nirutham

 

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியதற்கும்  லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நேற்று காலை 6 மணி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை. தமிழகத்தில் மட்டும் 4½ லட்சம் லாரிகள் ஓடவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்குள் லாரிகள் எதுவும் வரவில்லை. இதேபோல், தமிழகத்தில் இருந்தும் வெளிமாநிலங்களுக்கு லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் சரக்குகள் தேக்கம் அடைந்து உள்ளன. குறிப்பாக, அரிசி, பருப்பு, எண்ணெய், கோழி தீவனங்கள், முட்டைகள் போன்றவை எல்லா மாவட்டங்களிலும் தேங்கிக்கிடக்கின்றன. தமிழகத்தில் மட்டும் ரூ.1,500 கோடிக்கு சரக்குகள் தேங்கி உள்ளன.

நேற்று ஒரு நாள் மட்டும் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ரூ.200 கோடியும், 6 மாநிலங்களிலும் சேர்த்து ரூ.1,000 கோடியும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தலைமையில் லாரி அதிபர்கள் நேற்று மதியம் சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சரை எம்.ஆர்.விஜயபாஸ்கரை சந்தித்து பேசினார்கள்.

அப்போது, லாரி உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்து, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு அமைச்சர் காலஅவகாசம் கேட்டார். ஆனால், ஏற்கனவே 20 நாட்களுக்கு முன்பே தங்கள் கோரிக்கைகளை அரசிடம் அளித்துள்ளதாகவும், மேற்கொண்டு காலஅவகாசம் வழங்க முடியாது என்றும் லாரி உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்துவிட்டனர். இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் எம்.ஆர்.குமாரசாமி கூறியதாவது ;-

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்கள் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும்.

சுங்கவரி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். காப்பீடு கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு அழைத்ததன் பேரில் பேச்சுவார்த்தை நடத்த இங்கு வந்தோம். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எங்களுடன் பேசினார். ஆனால், கால அவகாசம் கேட்டார். நாங்கள் மேற்கொண்டு காலஅவகாசம் அளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டோம். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதும், பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை குறைக்கவேண்டும் என்பதும் எங்களுடைய முக்கிய கோரிக்கைகள் ஆகும்.

எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும். அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் வருவோம். லாரிகள் வேலைநிறுத்தத்தால், தமிழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.1,500 கோடி வர்த்தகம் பாதிக்கும். தென்மாநில அளவில் ரூ.6 ஆயிரம் கோடி முதல் ரூ.7 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும்.

இதனால் ,அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடும் வறட்சி காரணமாக பெரிய வெங்காயம், உருளைக்கிழக்கு ஆகியவற்றை தவிர மற்ற காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. தற்போது, லாரிகளில் காய்கறி வரத்தும் குறைந்துள்ளதால், 30 சதவீதம் வரை காய்கறி விலை உயர வாய்ப்புள்ளது .

மேலும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் 3 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.இந்த வேலை  நிறுத்தம் நடுத்தர மக்களுக்கு அன்றாட பொருட்கள் வாங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top