நெல்லையில் உள்ள நகைக் கடை கொள்ளை விவகாரம்;பிடிபட்ட ஜார்கண்ட் கும்பல்.

nellai

நெல்லையில் உள்ள நகைக் கடைக்குள் புகுந்து ரூ.9 கோடி மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள அழகர் ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் கடந்த 23-ம் தேதி, நள்ளிரவு மர்ம நபர்கள் 37.5 கிலோ தங்க, வைர நகைகள் மற்றும் ரூ.7 லட்சத்து 95 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பினர். மறு நாள் (24-ம் தேதி) வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கொள்ளையர்களில் ஒருவரான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காலிக்சேக்(41) என்பவர் மட்டும் சிக்கினார். அவரிடம் இருந்து 9 கோடி மதிப்புள்ள 37.5 கிலோ தங்க, வைர நகைகள், ரூ.7 லட்சத்து 95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. மீதமுள்ள 4 பேரும் காரிலிருந்து தப்பி ஓடினர். அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸாரின் ஒரு பிரிவினர் ஜார்கண்ட் சென்றுள்ளனர்.

கொள்ளை நடந்த அழகர் ஜுவல்லரியில் 3 மாடி கட்டிடத்தின் அருகில் வேறு கட்டிடங்களும் உள்ளன. மாடி கட்டிடத்தின் மேல் பகுதியில் இரும்பு ஷட்டர் கதவும், கம்பி வலையும் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள், காஸ் சிலிண்டர் வெல்டிங் மூலம் இரும்பு ஷட்டர் கதவை ஒரு ஆள் நுழைந்து செல்லும் அளவுக்கு துளையிட்டு ஒவ்வொருவராக உள்ளே சென்றுள்ளனர். முதலில் மேல் தளத்திலும், தொடர்ந்து தரைத் தளத்திலும் தங்க நகைகள், வைர நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

இதுகுறித்து, பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமுருகன் கூறும்போது, “கொள்ளையர்கள் நகைக் கடைக்குள் நுழையும் போது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருக்க சில வயர்களை துண்டித்துள்ள னர். ஆனால், அனைத்து கேமராவின் வயர்களையும் கொள்ளையர்களால் துண்டிக்க முடியவில்லை. இதனால், கொள்ளையர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியிருந்தது” என்றார்.

கொள்ளையர்கள் நெல்லையில் இருந்து வேலூருக்கு வந்து, பின்னர் திருப்பதிக்கு வாடகைக் காரில் புறப்பட்டுள்ளனர். காரை வேலூரைச் சேர்ந்த சாமுவேல்(54) என்பவர் ஓட்டியுள்ளார். சாமுவேல் உதவியால்தான் கொள்ளையரில் ஒருவர் பிடிபட்டார்.

இதுகுறித்து, சாமுவேல் கூறும்போது, “சம்பவத்தன்று திருப்பதி செல்ல வேண்டும் எனக் கூறி வடமாநில இளைஞர்கள் 5 பேர் என்னை அணுகினர். அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படி இருந்தது. இதனால், அவர்களது வாக்காளர் அடையாள அட்டை நகலை வாங்கி வைத்துக் கொண்டேன். தமிழக ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியை அடைந்ததும் காரை நிறுத்தினேன்.

அங்கிருந்த போலீஸாரிடம் எனது சந்தேகம் குறித்து தெரிவித்தேன். உடனே 5 பேரையும் காரிலிருந்து இறக்கிய போலீஸார், அவர்களிடம் இருந்த பைகளை சோதனையிடத் தொடங்கினர். முதல் பையைத் திறந்தபோது அதில் துணிகள் இருந்தன. இரண்டாவது பையைத் திறந்தபோது, 5 பேரும் திடீரென தப்பித்து ஓடத் தொடங்கினர். பையில் ஏராளமான பணமும், நகையும் இருப்பதைக் கண்ட போலீஸார், அவர்கள் 5 பேரையும் விரட்டிச் சென்றனர்” என்றார்.

தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் குறித்து காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி கூறும்போது, “கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் பிடிபட்ட பணமும், நகையும் பாளை யங்கோட்டையில் கொள்ளையடிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. வனப் பகுதியில் தப்பி ஓடிய கொள்ளையர்களில் ஒருவரது காலில் முள் குத்தியதால் பிடிபட்டார். அவரது பெயர் காலிக்சேக் என்பது தெரியவந்தது. மற்றவர்கள் தப்பிவிட்டனர். பிடிபட்டகாலிக்சேக்கை பாளை யங்கோட்டை போலீஸாரிடம் ஒப்படைத்து விட்டோம்” என்றார்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் கூறியதாவது:

ஜார்க்கண்ட் மாநில கொள்ளையர்கள் கையடக்க காஸ் சிலிண்டரை அங்கிருந்தே கொண்டுவருகின்றனர். அவர்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து செல்வார்கள். முதல் குழு ஏதேனும் ஒரு மாவட்டத்தில் 10 முதல் 15 நாட்கள் வரை தங்கியிருந்து சுற்றியுள்ள பகுதிகளை நோட்டமிடுவார்கள். கொள்ளையடிப்பதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்யும் அவர்கள், அந்த தகவலை இரண்டாவது குழுவில் இருக்கும் கொள்ளையர்களுக்கு தெரிவித்துவிட்டு, ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு திரும்பிவிடுவார்கள்.

முதல் குழு அளித்த தகவல்களைக்கொண்டு, இரண்டாவது குழுவினர் கொள்ளை நடவடிக்கை யில் இறங்குவார்கள். கொள்ளையடித்த நகை, பணத்துடன் உடனடியாக சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டுவிடுவார்கள். அங்கு சென்ற பிறகு கொள்ளையடித்தவற்றை தங்களுக்குள் பங் கிட்டுக்கொள்வார்கள். காஸ் வெல்டிங் கொள்ளை என்றாலே பெரும்பாலும் ஜார்க்கண்ட் கொள்ளையர்கள்தான் என்ற முடிவுக்கு நாங்கள் வந்துவிடு வோம்.

இதே பாணியில்தான் திருப்பூர் நகைக் கடையில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகை, பணத்தை ஜார்க்கண்ட் கொள்ளையர்கள் கடந்த 2012-ம் ஆண்டு கொள்ளையடித்திருந்தனர்” என்றார்.

கொள்ளையனை பிடித்து ரூ.9 கோடி மதிப் புள்ள நகை, பணத்தை மீட்ட டிஐஜி சந்திரன், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், ஆய்வாளர் பாண்டி, காவலர்களான பொன்னுசாமி, அண்ணாமலை உள்ளிட்ட தனிப் படையினரை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேற்று முன்தினம் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்தார். அதேபோல் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை மீட்பதற்கு முக்கிய காரணமாக இருந்த கார் ஓட்டுநர் சாமுவேலுக்கும் டிஜிபி தனது பாராட்டை தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top