ஹைட்ரோகார்பன்- விவசாயிகளின் பிரச்சனை; மெரினா கடலில் இறங்கி இளைஞர்கள் போராட்டம்

 

Hydrocarbon-project-a

 

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் விவசாயிகள் பிரச்சனைக்காகவும் இளைஞர்கள் சிலர் இன்று சென்னை மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியிலும் 15 நாட்களுக்கு மேலாக மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இளைஞர்கள் சிலர் திடீரென சென்னை மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் வரலாம் என்ற தகவல் பரவியதால் மெரினாவில் ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த கண்காணிப்பையும் மீறி சாதாரணமாக வந்த இளைஞர்கள் திடீரென, கடலுக்குள் இறங்கி விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கினர். மேலும் தங்கள் கைகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை வைத்திருந்தனர்.

இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கடற்கரைக்கு சென்று, இளைஞர்களை வெளியே வரும்படி கூறினர். ஆனால், அவர்கள் வெளியேற மறுத்து தண்ணீருக்குள் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை மீனவர்கள் உதவியுடன் போலீசார் வெளியேற்றி போலீஸ் வேனில் ஏற்றினர்.

அப்போது பேசிய இளைஞர்கள், ஹைட்ரோகார்பன் திட்டத்தை அரசு கைவிடும்வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தடையை மீறி போராட்டம் நடத்தியதால், இளைஞர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top