காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தென் மாநிலங்களை சேர்ந்த 30 லட்சம் லாரிகள் ஓடாது

 

9188_lorry

 

மத்திய , மாநில அரசுகள் கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நாளை மறுநாள் முதல் தொடரும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு உயர்த்தியது, 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்க உத்தரவிட்டது, தமிழகத்தில் வாட் வரியை அதிகரித்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது என்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை வாபஸ் பெறக்கோரியும் தென் இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நாளை மறுநாள் (30-ந் தேதி) முதல் லாரிகள் ஓடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த 30 லட்சம் லாரிகள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதோடு தென் மாநிலங்களுக்கு லாரிகளை இயக்க வேண்டாம் என்று அதன் தலைவர் குல்தரன்சிங் வட இந்திய லாரி உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஒரு லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டு விட்டதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூறியதால் லாரி உரிமையாளர்களிடையே குழப்பமான நிலை ஏற்பட்டது.
இது குறித்து மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தமிழ்நாடு தலைவர் குமாரசாமி இன்று கூறியதாவது-

தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏற்கனவே அறிவித்தது போல வருகிற 30-ந் தேதி காலை 6 மணி முதல் தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் நான்கரை லட்சம் லாரிகளும் ஓடாது.

இதனால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இரும் தளவாடங்கள், மஞ்சள், துணி வகைகள், உணவு பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்தால் தினமும் ரூ.1500 கோடி வரை பாதிப்பு ஏற்படும். லாரி உரிமையாளர்களுக்கு தினமும் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். முன்னதாக வட மாநிலங்களுக்கு செல்லும் 40 ஆயிரம் லாரிகள் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

மத்திய , மாநில அரசுகள் கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நாளை மறுநாள் (30-ந் தேதி) முதல் தொடரும். இந்த போராட்டத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு தலைமையில் மாவட்டம், தாலுகாக்களை சேர்ந்த 135 லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் பங்கேற்கின்றன. லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி தொழிலை சார்ந்துள்ள தொழிலாளர்கள் முழுமையாக ஸ்டிரைக்கில் பங்கேற்பார்கள். பொது மக்கள் பிரச்சினை என்பதால் அவர்களும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனத்தின் மாநில தலைவர் ராஜவடிவேல் கூறியதாவது- தென் இந்திய அளவில் வருகிற 30-ந் தேதி தொடங்கும் லாரி ஸ்டிரைக்கை முன்னிட்டு நேற்று முதல் தமிழகம் முழுவதும் வட மாநிலங்களுக்கான லாரி புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கான 40 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு தினமும் கொண்டு செல்லப்படும் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது.பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top