பாபர் மசூதி இடிப்பு: எல்.கே.அத்வானி, ஜோஷி விடுவிப்புக்கு எதிரான மனு; சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

 

advani

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனு மீது இன்று விசாரணை நடக்கிறது.

 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டதாக பா.ஜனதா தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய மந்திரி உமாபாரதி, ராஜஸ்தான் மாநில கவர்னரும், உத்தரபிரதேசத்தின் அப்போதைய முதல்–மந்திரியுமான கல்யாண் சிங் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அமைப்பு மேற்கண்ட தலைவர்கள் உள்பட 21 பேர் மீது ரேபரேலி சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 13 பேரை விடுவித்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் ஐகோர்ட்டும் கடந்த 2010–ம் ஆண்டு உறுதி செய்தது. எல்.கே.அத்வானி, உமாபாரதி, உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மக்பூப் அகமது (தற்போது உயிருடன் இல்லை) மற்றும் சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு 22–ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும் ஆர்.எப்.நாரிமன் ஆகியோரை கொண்ட அமர்வு மார்ச் 6-ம் தேதி அறிவித்தது.

 

முன்னதாக இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் மேலோட்டமாக விசாரணை நடத்தினர். அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த வழக்கில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 13 பேர் வெறும் தொழில்நுட்ப காரணங்களுக்காக விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதை ஒரு போதும் ஏற்க முடியாது’ என்று கூறினர். இந்த விவகாரத்தில் லக்னோ, ரேபரேலி கோர்ட்டுகளில் உள்ள 2 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து ஏன் விசாரிக்க முடியாது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விடுவிக்கப்பட்ட 13 பேருக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதிப்போம் என்றும் தெரிவித்தனர்.

 

மேலும் அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது? என்று விவரிக்குமாறு சி.பி.ஐ. அதிகாரிகளையும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

 

ஒத்திவைக்கப்பட்டது படி நேற்று (22-ம் தேதி) நீதிபதி பி.சி.போஸ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி ஆர்.எப்.நாரிமன் நீதிமன்றத்துக்கு வராத காரணத்தால் நாளை (இன்று) விசாரணை நடைபெறும் என நீதிபதி பி.சி.கோஷ் தெரிவித்தார். இந்த அமர்வில் நீதிபதி தீபக் குப்தாவும் இடம்பெற்றுள்ளார். இதனிடையே, வழக்கு விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று அத்வானி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால் கோரிக்கை வைத்தார்.  எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனு மீது இன்று விசாரணை நடக்கிறது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top