ஒரேநாளில் 2 படகுகளுடன் 16 மீனவர்கள் சிறைபிடிப்பு: ராமேசுவரம் மீனவர்கள் கொந்தளிப்பு

நேற்று இரவு  2 படகுகளுடன் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையி னர் தாக்குவதும், சிறை பிடித்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதன் உச்சக்கட்டமாக கடந்த 6-ந் தேதி கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் சிறைபிடித்து செல்லும் பணியில் மும்முரம் காட்டி வருகிறது.

கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படை 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது.

இந்நிலையில் நேற்று இரவு ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் மீன்பிடி சாதனங்கள், வலைகளை சேதப்படுத்தினர்.

தொடர்ந்து தங்கச்சிமடத்தை சேர்ந்த கெம்பஸ் என்பவரின் படகில் இருந்த இன்பம், மாரியப்பன், குணா, ரமேஷ், பாபு, குமார், சாம்சன், லோயோ ஆகிய 8 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. இவர்கள் தலைமன்னார் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நாகப்பட்டினத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் படகில் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி, படகில் இருந்த ஸ்டீபன், காளிமுத்து, சந்திரசேகர் உள்பட 8 மீனவர்களை படகுடன் சிறைபிடித்து சென்றனர். இவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

எல்லை தாண்டி வந்ததாக கூறி அடுத்தடுத்து மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top