வி.வி. மினரல்ஸ் நிறுவனம், போலி சான்றிதழ் மூலம் 420 டன் தாது மணலை எடுத்து ஏற்றுமதி செய்ய முயற்சி .

manal

 வி.வி. மினரல்ஸ் நிறுவனம் போலி சான்றிதழ் மூலம் 420 டன் தாது மணலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்ய நடைபெற்ற முயற்சி தடுக்கப்பட்டது. கனிமவளத் துறை உதவி இயக்குநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தமிழக கடற்கரை பகுதிகளில் தாது மணல் எடுக்கவும், ஏற்றுமதி செய்யவும் தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு தடை விதித்தது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த வி.வி. மினரல்ஸ் நிறுவனம் 420 டன் தாது மணலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக, துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகத்துக்கு அனுப்ப, இம்மாதம் 8-ம் தேதி தூத்துக்குடி சுங்கத் துறையில் பதிவு செய்தது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்தது போன்ற ஒரு சான்றிதழையும் அந்த நிறுவனம் சுங்கத் துறையில் சமர்ப்பித்தது. அச்சான்றிதழில் ‘இந்த தாது மணல் சட்டப்படியாக எடுக்கப்பட்டது. எனவே, அதனை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கலாம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. சான்றிதழில் ‘மாவட்ட ஆட்சியருக்காக’ எனக் கூறி, ஒரு கையெழுத்து போடப்பட்டிருந்தது. ஆனால், அந்த சான்றிதழ் முறையாக இல்லை. கையெழுத்திட்டிருந்த அதிகாரியின் பதவி குறிப்பிடப்படவில்லை. மாவட்ட ஆட்சியரின் முத்திரையும் இல்லை.

எனவே, சந்தேகமடைந்த சுங்கத் துறை அதிகாரிகள், சான்றிதழின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தக் கோரி மார்ச் 13-ம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதினர். மறுநாளே (மார்ச் 14) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுங்கத் துறைக்கு பதில் கடிதம் வந்தது. அதில், ‘தாது மணல் ஏற்றுமதிக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ் உண்மையானதுதான்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கடிதத்திலும் மாவட்ட ஆட்சியருக்காக எனக் கூறி, ஒரு கையெழுத்து மட்டுமே போடப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியரின் முத்திரையும் இல்லை.

சந்தேமடைந்த சுங்கத் துறை அதிகாரிகள் இந்த விஷயத்தை, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் கவனத்துக்கு நேரடியாக கொண்டுவந்தனர். இது தொடர்பாக, தான் எந்த சான்றிதழும் அளிக்கவில்லை என கூறிய ஆட்சியர், ‘தாது மணலை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டாம்’ என சுங்கத் துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, தூத்துக்குடி மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமோகன் இந்த சான்றிதழை அளித்தது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் புவியியல் மற்றும் கனிமவளத் துறை ஆணையருக்கு, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில், தூத்துக்குடி மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் கிருஷ்ண மோகனை சென்னைக்கு அழைத்து, அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர்.

கிருஷ்ண மோகன் தனது அதிகார எல்லையை மீறி, தாது மணல் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கி சான்றிதழ் அளித்தது தெரியவந்தது. அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து, புவியியல் மற்றும் கனிம வளத் துறை ஆணையர் நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார்.

மேலும், வெளிநாட்டுக்கு  வி.வி. மினரல்ஸ் ஏற்றுமதி செய்ய முயன்ற 420 டன் தாது மணலை பறிமுதல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் கூறும்போது, “தாது மணல் எடுக்கவும், ஏற்றுமதி செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. கனிமவளத் துறை உதவி இயக்குநர் தனது அதிகார எல்லையை மீறி தாது மணல் ஏற்றுமதி செய்ய வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்ய முயன்ற 420 டன் தாது மணல் எங்கே உள்ளது என தெரியவில்லை. அதனை கண்டுபிடித்து பறிமுதல் செய்ய தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் குழு ஒன்று    அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top