காற்று வெளியிடை;இசை வெளியீடு.

katru veliyidai

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காற்று வெளியிடை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொண்டார்.

இவ்விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசியது, “25 வருடம் நானும் ரஹ்மானும் ஒன்றாக பயணித்துள்ளோம். அவரை நான் நேற்று தான் சந்தித்தது போல் உள்ளது. முதலில் பார்த்தது போன்று தான் இப்போதும் உள்ளார்.

‘காற்று வெளியிடை’ திரைப்படம் இந்திய விமான படை பின்னணியில் உருவாகியுள்ள ஒரு அழகான காதல் கதை ஆகும். நான் ஒவ்வொரு முறை வட இந்தியாவில் படப்பிடிப்புக்கு செல்லும் போதும் அவர்களை பார்த்துள்ளேன். அவர்களை பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும்.

நான் மூன்று நாட்களுக்கு முன்னால் கார்த்தியை சந்தித்த போது “நான் விமான படை அதிகாரியை இப்போது இருக்கும் படப்பிடிப்பு தளத்திருக்கு அருகே எங்கேயாவது கண்டால் உடனே எழுந்து மரியாதை செலுத்துகிறேன்” என்றார். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் இருக்கும்.

ஒவ்வொரு முறை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து வேலை செய்வது புதிய அனுபவமாகும். நான் அவரிடம் நாளை படப்பிடிப்பு உள்ளது, பாடல் வேண்டும் என்று கேட்டுவிட்டு அவரை பாடலுக்காக சந்திக்க சென்றால் அவர் தீம் மியூசிக் தயார் செய்து வைத்திருப்பார். ஆனால் அந்த தீம் மியூசிக்கை கேட்டதும் சந்தோஷத்தில் நம் மனம் மாறி தீம் மியூசிக்கை ரசிக்க ஆரம்பித்துவிடும்.

என் ஒவ்வொரு படத்துக்கும் தேவையான இசையை தேடிப் பிடித்து கொடுப்பவர். அடுத்த படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து பணியாற்ற அவரிடம் உங்கள் முன்னால் கேட்டு கொள்கிறேன்” என்று பேசினார் இயக்குநர் மணிரத்னம்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பேசும் போது, “இயக்குநர் மணிரத்னம் சார் எனக்கு கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் எனலாம். நான் மணிரத்னம் சாரைப் பார்க்கவில்லை என்றால் வைரமுத்து சார் மற்றும் இன்று நான் இருக்கும் இடம் எனக்கு கிடைத்திருக்காது. அவருடன் வேலை பார்ப்பது ஒரு தெய்வீகமான அனுபவம் எனலாம்” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சூர்யா பேசியது, “மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் இருந்து வந்த சின்ன தயாரிப்பு நான். ‘ஆயுத எழுத்து’ படத்தில் நடிக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் கூட்டத்தை விலக்கி கொண்டு இருந்த கார்த்தி இப்போது அதே நிறுவனத்தின் தயாரிப்பில் நாயகனாக நடித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் நடித்துவிட்டார் என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயமாகும். இப்போது கார்த்தியின் மனம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது நன்றாக தெரிகிறது. கார்த்தியை இதைப் போல் பார்த்ததே இல்லை, வீட்டில் அனைவருக்கும் கார்த்தியை இந்த இடத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் மணிரத்தினத்திடம் ஒன்று கேட்டு கொள்ள விரும்புகிறேன் எப்படி இன்னும் அழகான காதல் கதைகள் உருவாக்கி கொண்டு வருகிறீர்கள்” என்றார்.

இவ்விழாவில் கார்த்தி பேசியது, “நான் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக இருந்து நாயகனாகி உள்ளேன். எனக்கு இது ஒரு கனவு படம் என்றால் அது பொய்யாக இருக்கும் , ஏனென்றால் எனக்கு இப்படி ஒரு நல்ல கனவு வந்ததே இல்லை.

நான் அமெரிக்காவில் படித்துவிட்டு சினிமாவுக்கு செல்கிறேன் என்றதும் எல்லோரும் சொன்னது உனக்கு ஏன் இந்த வேலை என்று தான். நான் மணிரத்தினத்திடம் சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அங்கே நிறைய கற்றுக்கொண்டேன்.

நான் வேலையில் நேர்மையாக உள்ளதற்கு காரணம் மணிரத்தினத்திடம் வேலை செய்தது தான். மணிரத்தினம், என்னை நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடி என்றார். அவர் இந்தப் படத்தில் நடிக்க சொல்லி என்னிடம் கதையைக் கொடுத்தது எல்லாம் கனவு போல் இருந்தது.

இப்படத்தில் நான் போர் விமானியாக வருகிறேன். போர் விமானியுடன் ஒரு நாள் முழுவதும் இருந்தேன். இதெல்லாம் இந்த படத்தில் நடிக்க நல்ல அனுபவமாக இருந்தது. இப்போது நான் மணிரத்தினம் படத்தின் நாயகன் என்பது ஆச்சரியமாக உள்ளது” என்று  கார்த்தி பேசியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top