ஆர்.கே.நகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம்; திருமாவளவன்

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– ஆர்.கே.நகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை அறிவித்து இருக்கிறதே?

பதில்:– நாங்கள் 3 முறைக்கு மேல் கலந்து பேசும்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முடிவை அவர்கள் தெரிவித்தனர். இன்றைக்கு வேட்பாளரை அறிவித்து இருக்கிறார்கள். அதில் வருத்தம் இல்லை. இந்த இடைத்தேர்தல் களத்தில் அவர்களுடன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி) இணைந்து செயல்பட முடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் போராட்டக் களத்தில் நாங்கள் இணைந்து செயல்படுவோம். மற்றபடி கூட்டு இயக்கம் பின்னடைவை சந்திக்காது.

கேள்வி:– மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பீர்களா?

பதில்:– போட்டியிட வேண்டாம் என்று கூறினோம். அந்த நிலைப்பாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக உள்ளது. மற்றப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு வாழ்த்து சொல்ல மட்டுமே இயலும். ஆதரிக்க மாட்டோம்.

கேள்வி:– அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் உங்களிடம் ஆதரவு கேட்டு இருக்கிறதே?

பதில்:– அ.தி.மு.க., தி.மு.க. வெளிப்படையாக எங்களிடம் ஆதரவை கோரியிருக்கிறார்கள். இதை விவாதிக்க முடியாமல் போய் விட்டது. இடைத்தேர்தல் முடிவு தற்காலிக முடிவு அல்ல, உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். மக்கள் நலக்கூட்டு இயக்கம் ஒற்றுமையை காக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

இந்த 2 கருத்துக்கள் குறித்து விவாதித்தோம். இறுதியாக நானும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவரும் போட்டியிட வேண்டாம் என்றோம். அவர்கள் அதற்கு உடன்படவில்லை. தோழமையுடன் சுதந்திரமாக அவர்கள் எடுத்த முடிவை நாங்கள் அங்கீகரித்தோம். இது அவர்களது கட்சியின் உரிமை. இதில் எங்களுக்கு அதிர்ச்சியும், வேதனையும் இல்லை. போராட்டக்களத்தில் கூட்டு இயக்கமாக செயல்படுவதில் தடங்கல் எதுவும் இல்லை. எங்களுக்கு எந்த நெருடலும் இல்லை. இது இடைத்தேர்தல். அவர்களின் விருப்பத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதை எதிர்ப்பாக பார்க்கவில்லை. அந்த சுதந்திரம் எங்களுக்கும் உண்டு. எங்களுடன் அவர்கள் கலந்து பேசிய பிறகு தான் முடிவை அறிவித்து இருக்கிறார்கள்.

கேள்வி:–விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவு யாருக்கு?

பதில்:–இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்து கொண்டு இருக்கிறது. அவர்கள் என்ன முடிவை எடுக்க போகிறார்கள் என்பதை பார்த்து விட்டு, அதன் பிறகு எங்கள் முடிவை அறிவிப்போம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

அதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:–மக்கள் நல கூட்டு இயக்கம், மக்கள் நலக்கூட்டணியாக மாறி 3 கட்சிகளுடன் செயல்பட்டு வந்தீர்கள். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனியாக வேட்பாளரை அறிவித்து இருக்கிறதே?

பதில்:– முடிவு எடுப்பதில் ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை இருக்கிறது. அவர்கள் முடிவு எடுத்து இருக்கிறார்கள், வேட்பாளரை அறிவித்து இருக்கிறார்கள். அதை போல் நாங்களும் சில முடிவுகளை மேற்கொண்டு இருக்கிறோம். அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி, எத்தகைய முடிவை எடுப்பது என்பது குறித்து நாளை (இன்று) அறிவிப்போம்.

கேள்வி:– அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் உங்களிடம் ஆதரவு கேட்டு இருக்கிறதே? மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரிப்பீர்களா?

பதில்:– யாரை ஆதரிப்பது என்பது குறித்து நாளை(இன்று) முடிவு செய்வோம்.  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top