சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி; மருத்துவர்களின் பாதுகாப்புக்கு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்

 

 

dr

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்களால் டாக்டர்கள் தாக்கப்பட்டதையடுத்து பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களுடன் அரசு சார்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, பயிற்சி மருத்துவர்கள் வைத்த நியாயமான கோரிக்கைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த கல்லூரி மாணவருடன் 15 பேர் வந்து மருத்துவர்களைத் தாக்கியுள்ளனர். இதனால் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. எனவே, பயிற்சி மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக உறுதி தந்துள்ளனர்.

மருத்துவர்கள் முழுமையான சேவை செய்வதற்கு பாதுகாப்பான சூழல் வேண்டும். எனவே, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். மருத்துவர்களின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழுவில் அரசு மருத்துவர்கள், அரசு வழக்கறிஞர் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள். மாவட்ட அளவில் ஆட்சியர் முன்னலையில் கண்காணப்புக் குழு ஏற்படுத்தப்படும்.

மருத்துவமனைகளில் முக்கியமான பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். சென்னை மருத்துவமனையில் நடந்ததுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளியில் இருந்து மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய எந்த நபராக இருந்தாலும், மருத்துவமனை ஊழியர்களிடம் தவறாக பேசினாலோ, மிரட்டினாலோ, வன்முறையில் ஈடுபட்டாலோ மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top