இலங்கை கடற்படையை கண்டித்து நாகை மீனவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதம்

ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 6-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பிரிட்ஜோ (வயது21) என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் நாகையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய 6 மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்தும், ஆழ்கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, உண்ணாவிரதம் இருப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நாகை தலைமை தபால் நிலையம் முன் கடந்த 13-ந் தேதி மீனவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இன்று 4-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தையொட்டி கல்லூரி மாணவர்கள் சார்பில் பேரணி நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர். பேரணி பல்வேறு வீதிகள் வழியாக சென்று உண்ணாவிரதம் நடைபெற்ற தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது.

நேற்று நடந்த உண்ணாவிரதத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், ஜீவானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரமோகன், விஜயபாலன், ரங்கநாதன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் நாகை வந்தார். அவர் உண்ணாவிரதம் இருந்த மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இலங்கையிடம் உள்ள விசைப்படகுகளை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும் என உறுதி அளித்திருந்தார். இதனை தொடர்ந்து அக்கரைப்பேட்டை மீனவ கிராம பஞ்சாயத்தார் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.

அதில் அமைச்சர் ஜெயக்குமாரின் உறுதி மொழியை ஏற்று மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை மட்டும் வாபஸ் பெறுவதாக வும், உண்ணாவிரதம் வழக்கம் போல் தொடரும் எனஅறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 9-நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அதனை கைவிட்டனர். இன்று காலை சிறிய படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top