காசுமீரில் இந்திய ராணுவத்தின் கொலைகள் – ஐ.நாவில் வலியுறுத்திய பெண்கள்

 

 

un2

 

பிரச்சினைக்குரிய பகுதிகளில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் நிலை என்ற தலைப்பில் காசுமீரைச் சேர்ந்த பெண்கள் அமைப்புகளின் சார்பில் ஐ.நாவில் மார்ச் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில்கருத்தரங்கங்கள்நடத்தப்பட்டன. இதில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜூலி வார்டு, Tamils Centre For Human Rights அமைப்பைச் சேர்ந்த டியர்டர் மெக்கன்னல், பாலஸ்தீன வழக்கறிஞர்ர் ஹாலா கலீல், காசுமீர் அரசியல் கைதிகளான சமாரூத் ஹபீப் மற்றும் தாரிக் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காசூமீர் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ஷமீம் ஷால் காசுமீர் விடுதலைப் போராட்ட வரலாறு குறித்துப் பேசினார். காசூமீரானது இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 3 பெரிய அணு ஆயுத நாடுகளால் சூழப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நேரு காசுமீருக்கு சுய நிர்ணய உரிமையை அளிக்கும் வாக்குறுதிகளை இந்தியப் பாராளுமன்றத்திலும், ஐ.நா மன்றத்திலும் பல முறை அளித்ததை சுட்டிக் காட்டினார்.

1990 ஆம் ஆண்டின் காசுமீர் விடுதலைப் போராட்ட எழுச்சிக்குப் பிறகு, 1991  ஆம் ஆண்டில் குனன் போஷ்போரா கொடூரம் இந்திய ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டது. 2 காசுமீர் கிராமங்களை சேர்ந்த 53 பெண்கள் இந்திய ராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். 1993 ஆம் ஆண்டு சோபோர் படுகொலை நிகழ்வில் 55 காசுமீரிகள் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். காசுமீரின் அரசியல் உரிமைகளை முன்வைத்து அமைதியான வழியில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த ஜம்மு& காஷ்மீர் மக்கள் லீக் தலைவர் ஷேக் அப்துல் ஆசிஸ் இந்தியப் படையினரால் 2008 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். 2010 ஆம் ஆண்டு இந்தியப் படைகள் ஷெல் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை காசுமீரிகள் மீது வீசியதில் 120 காசுமீர் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

un3

 

1948 இலிருந்து தொடர்ச்சியாக ஏராளமான ஐ.நா தீர்மானங்கள் காசுமீருக்காக வெளிவந்திருக்கின்றன. ஆனால் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வதை இந்தியப் படைகள் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றன. ஏராளமான பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். பல பெண்களின் கணவன்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பல மனித உடல் புதைகுழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இளைஞர்களை கொல்வதை இந்திய அரசு போர்த்தந்திரமாக வைத்துள்ளது. ஆனால் அவர்கள் அதற்கெல்லாம் அச்சப்படாமல், வீதிக்கு வந்து போராடுகின்றனர். எனவே பெல்லட்டுகளைப் பயன்படுத்தி அவர்களின் கண்களை குருடாக்குகிறது இந்திய அரசு. 7,00,000 படைகள் காசுமீர் மண்ணில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆப்கன், சியாரோ லியோன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணித்த ஐ.நா வின் நல்லெண்ண தூதர்கள் காசுமீரைக் கண்டுகொள்ளவில்லை. சர்வதேச விவாதங்களில் காசுமீர் விவகாரம் இடம்பெறுவதில்லை. காசுமீர் மக்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது என்று காசுமீர் பெண்கள் அமைப்பினர் பேசினர்.

பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டோர் குறித்த காணொளி ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது.
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுலி வார்டு பேசுகையில், பாலியல் வன்புணர்வு என்பது ஆயுதமாக போரில் பயன்படுத்தப்படுகிறது. நான் பாலஸ்தீனுக்காக பல ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். பாலஸ்தீனுக்காக என்ன செய்தேனோ, அதை காசுமீருக்கும் செய்வேன். நீதி என்பது இல்லாமல் அமைதி என்பது கிடையாது. காசுமீரின் புதிய இளைஞர்கள் அரசியல் தலைவர்களாக உருவாக வேண்டும். ஐரோப்பிய யூனியன் காசுமீர் விவகாரத்தில் முக்கியமான நபராக செயல்பட முடியும்.

ஒரு தாயாக, ஒரு பெண்ணாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினராக காசுமீர் மக்களை தொடர்ந்து ஆதரிப்பேன் என்று அவர் பேசினார்.

10 ஆண்டுகள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்து, பின்னர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட சமரூத் ஹபீப் காணொளி மூலமாக உரையாற்றினார். எங்களுடைய இளைஞர்களும் சிறுவர்களும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறைக் கம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்படுகின்றனர். அவர்களில் பலர் பின்னாளில் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது? அவர்கள் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகிறார்கள். அவர்கள் கட்டாயப் படுத்தப்பட்டு அவர்களின் குடும்பத்திலிருந்து பிரித்து கொண்டு செல்லப்படுகிறார்கள்.

அரசியல் கைதியான தாரிக் அகமது பேசுகையில், நான் கடைசி நபரல்ல.இந்த கைதுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் ஸ்ரீநகரில் வேலை செய்து கொண்டிருந்தேன். எனது மனைவி கர்ப்பமாக மருத்துவமனையில் இருந்தார். அவர் எனக்கு அவரசமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நான் 15 நிமிடத்தில் வந்து விடுவதாக என் மனைவியிடம் உறுதியளித்தேன். சிலர் வந்து என்னைக் கூட்டிச் சென்றனர். கைது செய்யப்பட்டேன். அதற்கு பிறகு 12 வருடங்களுக்குப் பிறகுதான் என் மனைவியை சந்தித்தேன்.  என்னுடைய பெண் குழந்தை ஒன்றரை வயதில் கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு “என்னுடைய எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள், என் தந்தையை விடுதலை செய்யுங்கள்” என போராடியது. இது போன்று வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. ஏராளமான பெண்கள் காசுமீரில் துன்பத்தில் வாழ்கிறார்கள். காசுமீர் பிரச்சினை தீர்க்கப்படாத வரை, அவர்கள் பாதிக்கப்படுவது தொடரும். இந்த மக்களின் நீதிக்காக குரல் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

un4

Tamils Centre For Human Rights அமைப்பைச் சேர்ந்த டியர்டர் மெக்கன்னல் இலங்கை அரசினால் தமிழ்ப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை விவரித்தார். தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய போது அவர்களை ஒடுக்க இலங்கை அரசு தாக்க அடக்குமுறைகளை கையாண்டதாக குற்றம் சாட்டினார். இலங்கை அரசு பாலியல் வன்புணர்வினை பெண்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியது. பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என எவரும் இலங்கை அரசின் கோர தாக்குதல்களுக்கு தப்பவில்லை. தமிழ்ப் பெண்கள், தமிழ் சிறுமிகள், தமிழ் குழந்தைகள் என அனைவரும் பட்ட துன்பங்களை நான் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். 20 வருடங்களாக இந்த உண்மைகளை சொல்லிக் கொண்டிருக்கிறோம். தமிழர்கள் தங்களின் பிரச்சினைகளை தீரத்துடன் எதிர்கொண்டனர். பெண்கள் தமிழ் சமூகத்தின் மையமாக இருந்தனர்.

தமிழர்களின் 35 வருட அமைதிப் போராட்டத்தினை இலங்கை அரசு ஒடுக்கியது. போரின் போது தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 95,000 விதவைப் பெண்கள் இருக்கிறார்கள்.

காஷ்மீராக இருந்தாலும், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியாக இருந்தாலும், பால்ஸ்தீனாக இருந்தாலும், புருண்டி உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளாக இருந்தாலும் அனைவரும் மனிதர்களே. அனைத்து பெண்களும் பெண்களே. அனைவருக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.

பாலஸ்தீனத்தின் செயல்பாட்டாளரான ஹாலா கலீல், பாலஸ்தீனப் பெண்கள் மீது இஸ்ரேலிய ராணுவத்தினர் நிகழ்த்தும் தாக்குதல்கள் குறித்து பேசினார். பாலஸ்தீனப் பெண்கள் இஸ்ரேலிய ராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்குள் வாழ்வதாக குற்றம் சாட்டினார். 1990 களிலிருந்தே பாலஸ்தீனப் பெண்கள் தேசியப் போராட்டத்தில் முன்னணியில் நின்றனர். சாதாரண பாலஸ்தீனப் பெண்கள் கூட தங்கள் நகைகளையும், தாலியையும் விற்று பாலஸ்தீன் போராளிகளின் உணவுக்காக பணம் கொடுத்தனர்.  1987ல் தொடங்கிய பாலஸ்தீன எழுச்சியில் பெண்கள் ஆண்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இஸ்ரேலிய ராணுவம் வீசிய குண்டுகளில் ஏராளமான பெண்கள் வீடுகளிலேயே உயிரிழந்தனர். ஏராளமான பாலஸ்தீனப் பெண்கள் இஸ்ரேலிய அரசினால் கைதிகளாக்கப்பட்டனர்.

அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. பாலியல் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் சிறைபடுத்தப்பட்டனர். அவர்களுக்கான மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டன. இதனால் பல பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. 2000-2007 காலக்கட்டத்தில் 69000 பெண்கள் இஸ்ரேலின் முகாம்களில் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். அவர்களுக்கு அனைத்து மருத்துவங்களும் மறுக்கப்பட்டன. 35,000 புதிதாக பிறந்த குழந்தைகள் இறந்து போயின. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க தயாராக வேண்டும் என்றும் பேசினர்.

மேலும் வெஸ்டர்ன் சகாரா பகுதியைச் சேர்ந்த பெண்களும் காசுமீரிகள் நடத்திய இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

காசுமீரிகள் மற்றும் காசுமீர் பெண்கள் மீது இந்திய அரசு நிகழ்த்தும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், காசுமீரிகளின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

  • ஜெனீவாவிலிருந்து TamilsNow

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top