தங்கச்சி மடம் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தொடர் போராட்டம்

 

thangatchi

 

இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் நேற்று 3-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் மீனவர்கள் மெழுகுவத்தி ஏந்தி பிரிட்ஜோவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கச்சத்தீவு அருகே திங்கள் கிழமை இரவு ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ(21) உயிரிழந்தார். ஜெரோன்(27) என்ற மீனவர் காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராமேசுவரம் அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் பிரிட்ஜோவின் உடலை மருத்துவமனை அதிகாரிகள் ஒப்படைக்க முயன்றபோது பெற் றோரும், உறவினரும் உடலை வாங்க மறுத்தனர். இலங்கை கடற் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை தங்கச்சிமடத்தில் தர்ணா போராட்டம் தொடங்கப்பட்டு புதன்கிழமை இரவிலும் நடைபெற்றது.

முன்னதாக புதன்கிழமை மாலை கொழும்பில் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து ஆகியோர் தலைமையில் இரு நாட்டு உயரதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தையின்போது இலங்கை சிறைகளில் உள்ள 85 தமிழக மீனவர்களையும், இந்திய சிறைகளில் உள்ள 15 இலங்கை மீனவர்களையும் பரஸ்பரம் விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டது.

மூன்றாவது நாளாக நேற்று தங்கச்சிமடத்தில் மீனவர் பிரிட் ஜோவுக்கு மீனவர்கள் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். இந்தப் போராட்டத்தில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும். இறந்த மீனவரின் குடும் பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடாக இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மீனவர் பிரிட்ஜோவின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் நேரில் வலியுறுத்தினாலும் உறவினர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். இதனால் ராமேசுவரம் மருத்துவ மனையில் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாநில செயலாளர் முத்தரசன் போன்றோர் கலந்துகொண்டனர்

தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என்று தங்கச்சிமடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 563 மீனவர்கள் இதுவரை சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top