நாகையில் 13-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்: 6 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு

நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த 3-ந்தேதி இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்து சென்றனர். அதேபோல் கடந்த 6-ந்தேதி இந்தியா-இலங்கை இடையிலான ஆதம்பிரிட்ஜ் என்ற இடத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்ஜோ (21) என்பவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயமடைந்தனர்.

இதை தொடர்ந்து நாகை அக்கரைப்பேட்டை சமுதாய கூடத்தில் கடந்த 7-ந்தேதி நாகை தாலுகா மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும், அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து 9-ந்தேதி (நேற்று) முடிவு செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி நேற்று நாகை மீன்பிடி துறைமுக அலுவலக கட்டிடத்தில் அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய 6 மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னதாக இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இலங்கை கடற்படையினை கண்டித்து ராமேசுவரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மற்ற மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களும் கலந்து கொள்வது. இலங்கை அரசை கண்டித்து 13-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அந்தந்த மாவட்டத்தில் மீனவர்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது. இன்று (அதாவது நேற்று) முதல் 6 மாவட்ட மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது. இந்த போராட்டம் சம்பந்தமாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் 6 மாவட்ட பிரதிநிதிகள் ஒன்றுகூடி எடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top