அகில இந்திய கைப்பந்து போட்டி வருமான வரி அணி வெற்றி

நெல்லை பிரண்ட்ஸ் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 44–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. தினத்தந்தி, டிடி நெக்ஸ்ட் மற்றும் எஸ்.என்.ஜே. ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 5 அணிகளும் பங்கேற்றுள்ளன. ஆண்கள் பிரிவில் லீக் முறையிலும், பெண்கள் பிரிவில் ரவுன்ட் ராபின் லீக் அடிப்படையிலும் ஆட்டங்கள் நடைபெறுகிறது.

இந்த போட்டியின் 2–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் வருமான வரி (புனே)–செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி (சென்னை) அணிகள் மோதின. 65 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் வருமான வரி அணி 25–22, 25–21, 25–18 என்ற நேர்செட்டில் செயின்ட் ஜோசப்ஸ் அணியை தோற்கடித்து முதல் வெற்றியை ருசித்தது. செயின்ட் ஜோசப்ஸ் அணி தொடர்ந்து சந்தித்த 2–வது தோல்வி இதுவாகும்.

பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தென் மத்திய ரெயில்வே–சாய் (கேரளா) அணிகள் சந்தித்தன. 92 நிமிடங்கள் அரங்கேறிய விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சாய் அணி 25–21, 25–21, 23–25, 25–16 என்ற செட் கணக்கில் தென் மத்திய ரெயில்வே அணியை சாய்த்து முதல் வெற்றியை தனதாக்கியது. முதல் ஆட்டத்தில் சாய் அணி, தெற்கு ரெயில்வேயிடம் தோல்வியை சந்தித்து இருந்தது.

முந்தைய நாள் இரவில் ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் மேற்கு ரெயில்வே அணி 17–25, 25–15, 23–25, 26–24, 15–13 என்ற செட் கணக்கில் சுங்க இலாகா (சென்னை) அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ஓ.என்.ஜி.சி. அணி 25–21, 25–18, 25–22 என்ற நேர்செட்டில் எஸ்.டி.ஏ.டி. (சென்னை) அணியை வீழ்த்தியது. இன்னொரு ஆட்டத்தில் கர்நாடக அணி 28–30, 25–23, 26–24, 22–25, 15–11 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப். (சென்னை) அணியை சாய்த்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top