ஆஸ்திரேலியாவை 112 ரன்களில் சுருட்டி 2–வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கல்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 4–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 189 ரன்களும், ஆஸ்திரேலியா 276 ரன்களும் எடுத்தன. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3–வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 79 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4–வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த புஜார, ரஹானே ஜோடி மேற்கொண்டு 12 ஓவர்கள் சமாளித்தது. ஸ்கோர் 238 ரன்களை எட்டிய போது, ரஹானே (52 ரன், 134 பந்து, 4 பவுண்டரி) மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ரஹானே– புஜாரா கூட்டணி 118 ரன்கள் (46.2 ஓவர்) திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அடுத்து வந்த கருண் நாயருக்கு (0) சந்தித்த முதல் பந்திலேயே ஸ்டம்பு பறந்தது.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா (92 ரன், 221 பந்து, 7 பவுண்டரி), ஹேசில்வுட் வீசிய ஷாட்பிட்ச் பந்து வீச்சில் ‘கல்லி’ திசையில் நின்ற மிட்செல் மார்சிடம் கேட்ச் ஆனார். 4 ரன் இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று விக்கெட் சரிந்ததால் இந்திய அணியால் 300 ரன்களை நெருங்க முடியவில்லை. இறுதி கட்டத்தில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவின் பங்களிப்பு (20 ரன், 37 ரன், 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆறுதல் அளித்தது.

இந்திய அணி 2–வது இன்னிங்சில் 97.1 ஓவர்களில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்–அவுட் ஆனது. அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 6 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஸ்டீவ் ஓ கீபே தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி ஆஸ்திரேலியாவின் 2–வது இன்னிங்சை டேவிட் வார்னரும், மேத்யூ ரென்ஷாவும் தொடங்கினர். 5–வது ஓவரிலேயே இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா பிரித்தார். அவரது பந்தில் ரென்ஷா (5 ரன்), விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் ஸ்டீவன் சுமித் அடியெடுத்து வைத்தார்.

 

பலமான விரிசல்கள் நிறைந்திருந்த ஆடுகளம் (பிட்ச்) பந்து வீச்சின் சொர்க்கமாக விளங்கியது. சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றபடி பந்து நன்கு சுழன்று திரும்பியது. அது மட்டுமின்றி வேகப்பந்து வீச்சில், பந்து சற்று எழும்புவதும், திடீரென ஒரேயடியாக தாழ்ந்து செல்வதுமாக இருந்தது. இதனால் பந்து வீச்சை துல்லியமாக கணிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர்.

பேட்ஸ்மேனை சுற்றி கச்சிதமாக பீல்டர்களை நிறுத்தி, ‘சுழல்– வேகம்’ என்று இடைவிடாது இந்தியா தொடுத்த தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

அஸ்வின் ஓவரில் முட்டிப்போட்டி அடிக்க முயன்ற துணை கேப்டன் வார்னர் (17 ரன், 25 பந்து, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து பார்த்தும், அவரது ஆசை ஈடேறவில்லை. அவரது பந்தில் வார்னர் ஆட்டம் இழப்பது இது 9–வது நிகழ்வாகும். அடுத்து வந்த ஷான் மார்ஷ் 9 ரன்னில் (19 பந்து) உமேஷ் யாதவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். சிறிது நேரத்தில், அபாயகரமான வீரர் ஸ்டீவன் சுமித்தும் (24 ரன், 67 பந்து, 2 பந்து) உமேஷ் யாதவின் பந்து வீச்சுக்கு இரையானார்.

சுமித்தை வெளியேற்றியதும் இந்திய வீரர்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது. ரசிகர்களின் ஆரவாரமும் காதை பிளந்தது. இதே உற்சாகத்துடன் இந்திய பவுலர்கள் ஆக்ரோ‌ஷமாக பந்து வீசி, ஆஸ்திரேலியாவை முழுமையாக சிதைத்தனர். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விக்கெட்டுகளை கொத்து கொத்தாக அள்ளி, ஆஸ்திரேலியாவின் சவாலுக்கு சமாதி கட்டினார்.

வெறும் 35.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 112 ரன்களில் சுருண்டது. பரபரப்பான இந்த டெஸ்டில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. அந்த அணி கடைசி 11 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது. இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது. அதற்கு இந்திய வீரர்கள் சுடச்சுட பதிலடி கொடுத்து விட்டனர்.

இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் (90 ரன், 51 ரன்) விளாசிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் தற்போது 1–1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. 3–வது டெஸ்ட் போட்டி வருகிற 16–ந்தேதி ராஞ்சியில் தொடங்குகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top