அமெரிக்கா அதிரடி உத்தரவு;இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு ‘எச்.1பி’ விசா தற்காலிக நிறுத்தம்

 

What-is-H1B-Visa-How-Trump’s-New-Rules-Benefit-Americans

அமெரிக்க நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி விசா’ வழங்கி வருகிறது

 

இந்த விசாக்கள் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் பலவற்றிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.

 

ஆனால் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டொனால்டு டிரம்ப்;- இந்த விசா, அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதாக கூறி, அதை வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்றும், நான் அமெரிக்க ஜனாதிபதியானால், அதை செய்வேன் என்றுகூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் எச்1பி விசாக்களை வழங்குவதை கட்டுப்படுத்த வகை செய்யப்பட்டது. இந்த விசாவை பெறுவதற்கான குறைந்தபட்ச சம்பளத்தை 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் அளவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சத்து 40 ஆயிரம்) இரு மடங்காக உயர்த்துவதற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனால் குறைந்த சம்பளத்திற்காக இந்தியா உள்ளிட்ட பிறநாட்டு ஊழியர்களைக் கொண்டு அமெரிக்கர்களை நிறுவனங்கள் வெளியேற்றி வரும் விவகாரம் முற்றுபெறும் என கருதப்பட்டது.

 

தற்போது எச்.1-பி விசா வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 60,000 டாலர்களாக உள்ளது. இது 1989-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது, அதன் பிறகு மாற்றப்படவில்லை. தற்போது குறைந்தபட்ச சம்பளம் இரட்டிப்புக்கும் அதிகமாக்கப்பட்டு ஆண்டுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் அளவுக்கு இருக்க வேண்டும் என்று புதிய மசோதா கூறுவதால் அமெரிக்கப் பணியாளர்களை குறைந்த சம்பள அயல்நாட்டினரைக் கொண்டு மாற்ற முடியாது. இந்த மசோதாப்படி நிறுவனங்கள் எச்.1-பி விசாவுக்கு கோருவதற்கு முன்பாக அமெரிக்கப் பணியாளருக்கான காலியிடங்களை வைத்திருக்க வேண்டும். மோசடி செய்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கவும் பறிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

 

 

அமெரிக்காவின் ஐ.டி. துறையில் 85 சதவீதத்துக்கும் அதிகமாக இந்தியர்களே பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகிறதே என்ற எண்ணத்தில் ஐ.டி. துறைகளுக்கு நெருக்கடி கொடுத்து உள்ளார் டொனால்டு டிரம்ப்.

 

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இடி தாக்குவது போல் எச்.1பி விசா வழங்குவதையே நிறுத்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 3-ந்தேதி முதல் 6 மாதத்துக்கு தற்காலிகமாக ‘எச்.1பி’ விசா வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்கா இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘எச்.1பி’ விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் இந்திய ஐ.டி. ஊழியர்கள் கடுமையான பாதிப்பு அடைவார்கள். ஏற்கனவே பணிபுரியும் ஊழியர்கள் தவிர புதிதாக ஊழியர்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல முடியாது.

 

இது தற்காலிகம் என்று அறிவித்தாலும் தடையை மேலும் மேலும் நீடித்துக் கொண்டே செல்லவும் அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு எச்.1 பி விசா பெற்றவர்கள், தங்கள் மனைவி அல்லது கணவருக்கு மிக எளிதாக பணி விசா பெறும் நிலை  இருந்தது. அந்த சிறப்பு சலுகை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது. இதனால் எச்.1பி விசா பெறுபவர்கள் மனைவி அல்லது கணவனுக்கு என்று விசா பெற இயலாத நிலை ஏற்பட்டது. தற்போது விசா வழங்குவதையே நிறுத்தி விட்டது.

 

இது எதிர்காலத்தில் அமெரிக்கா செல்லும் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இருந்து ஐ.டி. வேலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் அந்த ஐ.டி. வேலைகள் அனைத்தும் அமெரிக் கர்களுக்கே கிடைக்கும் என்று டிரம்ப் எதிர்பார்க்கிறார்.

 

 

எச்1பி விசா என்பது வெளிநாட்டு இளைஞர்கள், அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிவதற்காக வழங்கப்படும் விசா ஆகும். இது நிரந்தர விசா அல்ல. தற்காலிக விசாதான். அறிவியல், பொறியியல், மருத்துவம், உடற்கல்வி, கணிதம், சமூகஅறிவியல், கலை உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே இவ்வகை விசா பெற முடியும். இந்த எச்1 பி விசா வழக்கமாக மூன்று ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையில் எச்1பி விசா பெற்று பணிபுரிபவர்களுக்கு மட்டும் 10 ஆண்டுகள் வரை அனுமதி கொடுக்கிறார்கள்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top