கிரானைட் முறைகேடு; சகாயம் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க மத்திய,மாநிலஅரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 

SAGAYAM MADURAI

கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்துள்ள அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்று மத்திய, மாநில அரசுகள் 6 வாரத்தில் ஒருங்கிணைந்த விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கனிம வள முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி கடந்த 2014-ல் சமூக ஆர்வலரான டிராபிக் ராம சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் முதற்கட்டமாக மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நியமித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி அவரும் விசாரணையை முடித்து 2015 நவம்பர் 23-ல் தனது அறிக்கையை உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்தார். அதில் ரூ. ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி அளவுக்கு கிரானைட் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து, முறைகேட்டுக்கு உதவி புரிந்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு ) ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி, ‘‘ சகாயம் அறிக்கை தமிழக அரசின் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டது. எனவே இதுதொடர்பாக ஒருங்கிணைந்த விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய 6 வாரம் அவகாசம் வேண்டும்’’ என்றார்.

இந்திய கிரானைட் மற்றும் கல் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘கடந்த 17 ஆண்டுகளில் கிரானைட் குவாரிகள் மூலம் ரூ. 52 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஆனால் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது மதிப்பீட்டில் ரூ. ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அவரது மதிப்பீடு தவறானது. அவர் பிற துறைகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ஆய்வு நடத்தியுள்ளார்.

எனவே இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிபுணர்கள் அடங்கிய புதிய குழுவை நியமித்து மீண்டும் துல்லியமாக விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மையான மதிப்பீடு தெரியும். இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யவுள்ளோம். அதுதொடர்பாகவும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சமர்ப்பித்த அறிக்கை மீது மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது குறித்து 6 வார காலத்துக்குள் ஒருங்கிணைந்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top