சட்டவிரோத கட்டிடத்தை திறந்தார் பிரதமர்; அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது ஈஷா யோகா மையம்! நீதிமன்றம் நோட்டிஸ்

modi

கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பி.முத்தம்மாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:

வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள இக்கரை பொழுவம்பட்டி கிராமம் மலைப்பிரதேச பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இக்கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி உயர பிரம்மாண்ட ஆதியோகி சிவன் சிலையும், அதைச் சுற்றி சுமார் ஒரு லட்சம் சதுர அடியில் தியான மண்டபங்கள், கார் பார்க்கிங், பூங்கா போன்ற கட்டுமானங்கள் சட்டத்துக்கு புறம்பாக மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ளன.

இங்கு சிவன் சிலை அமைக்கவும், 300 சதுர மீட்டர் பரப்புக்குள் விளை நிலங்களை கட்டுமானங்களாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாற்றுவதற்கும் மட்டுமே ஈஷா மையத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், தற்போது அத்துமீறி மலைப்பகுதியைச் சுற்றிலும் ஆக்கிரமித்து விதிமுறைகளை மீறி கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன.

எனவே, வனப்பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக புதிதாக கட்டுமானங்கள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். அத்துடன் முறைகேடான கட்டுமானங்களை இடிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளும் ஈஷா யோகா மையமும் பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை மார்ச் 3-க்கு தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கோவை மண்டல நகரமைப்பு திட்டமிடல் துணை இயக்குநர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மத வழிபாடு மற்றும் மேம்பாட்டுக்காக ஈஷா யோகா மையம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இக்கரை பொழுவம்பட்டியில் சிவன் சிலை அமைப்பதற்கும், அதைச்சுற்றி கட்டுமானம் கட்டுவதற்கும் கடந்த 08.10.2016 மற்றும் 15.02.2017 ஆகிய தேதிகளில் 19.18 ஹெக்டேர் விளை நிலத்தை மாற்ற கோவை மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.

இக்கரை பொழுவம்பட்டியில் கட்டுமானங்களை மேற்கொள்ள மலைப்பகுதி பாதுகாப்புக் குழு மற்றும் வனம், வேளாண், மண்ணியல், சுரங்கத் துறைகளிடம் அனுமதி பெறவேண்டும் என ஈஷா மையத்துக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், உரிய அனுமதியின்றி 109 ஏக்கர் பரப்பில் சட்டவிரோதமாக கட்டுமானங்களை ஈஷா மையம் கட்டியுள்ளது.

அவற்றை இடிப்பதற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. மேலும், சிவன் சிலை அமைத்தது, அதைச் சுற்றிலும் கட்டிடங்களை கட்டியது மற்றும் இதுதொடர்பாக மலைப்பகுதி பாதுகாப்பு குழுவின் அனுமதி பெற்றது தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு ஈஷா மையத்துக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஒவ்வொரு கட்டுமானத்துக்கும் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கான கட்டணமாக எவ்வளவு தொகை வசூலிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு கடந்த 2007-ல் நிர்ணயம் செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. இந்தக் கட்டணம் ஒவ்வொரு முறையும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது அடுக்குமாடி கட்டிடங்களுக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.285 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், உரிய விதிமுறைகளின்படி ஈஷா யோகா மையத்தின் கட்டுமானங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதன்மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top