மத்திய அரசிடம் கேரளா ‘கஸ்தூரி ரங்கன்’ அறிக்கையை மாற்ற வேண்டி வலியுறுத்தல்!

 

 

Rainforest-Canopy-Layer

 

கேரளாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய நிலப் பகுதி பட்டியலில் இருந்து 886.7 சதுர கி.மீ நிலத்தை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அம்மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.

மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியை பாதுகாக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக் கப்பட்டது. அதில் 123 கிராமங்களையும் சேர்த்து மொத்தம் 13,108 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட நிலம் பாதுகாக்க வேண்டிய பகுதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதியில் வேளாண் பணியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மக்கள் தொகை அதிகம் கொண்ட இடங்கள், வேளாண் நிலங்கள், தோட்டப் பயிர்கள் நிறைந்த இடங்கள் என மொத்தம் 886.7 சதுர கி.மீ நிலத்தை வனம்சாரா நிலப்பகுதியாக வரையறுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து 886.7 சதுர கி.மீ நிலத்தை பாதுகாக்க வேண்டிய நிலப் பகுதியில் இருந்து மத்திய அரசு நீக்க வேண்டும் என வலியுறுத்தி கேரள சட்டப் பேரவையில் கடந்த 2014-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிப்ரவரி 2014-ல் மத்திய அரசு பாதுகாக்க வேண்டிய நிலப் பகுதி குறித்த அறிவிக்கையை வெளியிட்டது. அதில் 123 கிராமங்கள் அடங்கிய 9993.7 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பகுதிகள் பாதுகாக்க வேண்டிய நிலப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதில், 9,107 சதுர கி.மீ பகுதிகள் மட்டுமே முழுமையான வனப்பகுதி.

இந்நிலையில் கேரள சட்டப் பேரவையில் நேற்று இந்த விவகாரம் மீண்டும் எதிரொலித்தது. அதற்கு முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்து பேசியதாவது:

கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் அடிப்படையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய பகுதியாக வரையறுக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் அதிகம் வாழும் இடங்கள், வேளாண் நிலங்கள், தோட்டப் பயிர்கள் நிறைந்த இடங்களை நீக்குமாறு கடந்த 23-ம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் மத்திய அரசை அணுகி வலியுறுத்துவோம். இது தொடர்பாக நிபுணர் குழுவை அமைத்து அதன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்திருந்தோம். அதன் படி கடந்த 2014-ல் மத்திய அரசு 9993.7 சதுர கி.மீ பகுதிகளை மட்டும் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளாக அறிவித்திருந்தது. எனவே 886.7 சதுர கி.மீ நிலம் நிச்சயம் மீட்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கஸ்தூரி ரங்கனின் வரைவு அறிக்கை வரும் 4-ம் தேதியுடன் காலாவதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக சர்ச்சைக் குரிய அத்திரபள்ளி உள்பட 15 நீர்மின் திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள அரசு நேற்று சட்டப்பேரவை யில் தெரிவித்தது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top