ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை- மத்திய அரசு ;பொதுமக்கள் கொந்தளிப்பு !

paathippu

 

புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசல் பகுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தத் திட்டத்தை கைவிடுமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்தத் திட்டத்தால் விவசாயத்துக்கோ, சுற்றுச் சூழலுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:

meethen

 

இறக்குமதியையே நம்பியிருக்காமல், உள்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இது போன்ற திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. 2016-ம் ஆண்டுக்கான ஏலச்சுற்றின்படி இந்தியளவில் 31 இடங்களில் கச்சா எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கான சுரங்கப் பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் சுமார் 3,500 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கியவை ஆகும்.

தற்போது தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 600 டன் கச்சா எண்ணெய்யும், 30 லட்சம் சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இயற்கை எரிவாயுவும் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது வரை தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய், எரிவாயு எடுப்பதற்காக 700 கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த சுரங்கப் பணிகளுக்கான அனுமதி என்பது உலகளாவிய ஏலப் போட்டிகள் முறையில், வெளிப்படைத் தன்மையோடு வழங்கப்படுகிறது. இந்த டெண்டர் நடவடிக்கைகளில் ஓ.என்.ஜி.சி. போன்ற இந்திய பொதுத்துறை நிறுவனங்களும், மாநில பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற் கின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நெடுவாசல், புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பாக தற்போது சில பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன.

 

methen-2

 

இதுபோன்ற திட்டங்களால் நிலத்தடி நீர்மட்டத்துக்கோ, விவசாயத்துக்கோ உலகில் இதுவரை எங்குமே பாதிப்பு ஏற்பட்டதில்லை.

சுமார் 1000 மீட்டர் ஆழத்துக்கும் கீழே உள்ள ஹைட்ரோ கார்பன் பொருட்கள்தான் தோண்டியெடுக்கப்படுகின்றன. இதனால் பூமி அடுக்கின் மேல்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் எவ்விதத்திலும் பாதிக்காது. இதுபோன்ற ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தும் முன் சுற்றுச்சூழல் தாக்கங்கள் பற்றிய முறையான ஆய்வுகள் செய்யப்பட்டு, அதன் அடிப்படையிலேயே அனுமதி வழங்கப்படுகின்றன.

ஆகவே, நெடுவாசல், காரைக்கால் பகுதி திட்டங்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாறாக இதுபோன்ற திட்டங்களால் மாநிலத்துக்கு ராயல்டி, வாட் வரி என பொருளாதார ரீதியிலான பல்வேறு பலன்கள் கிடைக்கும். இந்த 2 இடங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களால் மட்டுமே ரூ.300 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும். ரூ.40 கோடி ராயல்டி கிடைக்கும். மேலும், 500 பேருக்கும் மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நெடுவாசலில் நேற்று நடைபெற்றது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி-க்கள் மூலம் எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவது, மக்களுக்கும், சூழலுக்கும் கேடு விளைவிக்கும் எரிவாயு திட்டத்துக்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடருவது, திட்டத்தை ரத்து செய்யக் கோரி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைத்து போராட்டம் நடத்துவது, அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் புதுக்கோட்டையில் திரளான மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஒரே நாளில் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டி இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்புவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top