உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. தனித்து போட்டி: வைகோ பேட்டி

 

_Vaiko-told-local-elections-Competition-alone-MDMK_SECVPF

 

கோவையில் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் பொதுக்குழு கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. மொத்தம் உள்ள 1,408 பொதுக்குழு உறுப்பினர்களில் 1,312 பேர் கலந்துகொண்டனர். உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் சிலர் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்தில், தமிழக அரசியல் நிலைமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அநாகரிகமாக நடந்து கொண்டனர். சட்டசபையில் மேஜை, நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்துவது சபை விதிகளில் இல்லை. ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இருந்தால், அது எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரத்துக்கு வழிவகுத்து இருக்கும்.

ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வின் தயாரிப்பு. அவர் இப்போது தி.மு.க.வுக்கு எதிராக பேசுவதும் ஒரு நாடகம் தான். தி.மு.க. ஆட்சி அமைத்து விடலாம் என்று பல்வேறு சூழ்ச்சியில் ஈடுபட்டது. அது நிறைவேறவில்லை. தி.மு.க.வினர் என்மீதும், தா.பாண்டியன் உள்ளிட்ட பல தலைவர்கள் மீதும் அவதூறு பரப்பி வருகிறார்கள். இதை கண்டிக்கிறேன்.

மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் என்ற புதிய பெயரில் தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த ம.தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது. மத்திய அரசு நெருப்போடு விளையாட வேண்டாம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் ம.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.

தமிழக மக்களை பலி ஆடுகளாக கருதி மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முனைகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இருக்கும்போது, வேண்டும் என்றே தமிழகத்தை தேர்வு செய்துள்ளனர். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக இந்த திட்டத்தை செயல்படுத்த தியாகம் செய்ய வேண்டும் என்று இல.கணேசன் போன்றவர்கள் கூறுவது சரியல்ல.

உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. மதுவுக்கு எதிராகவும், பொதுமக்களின் நலனுக்காகவும் ம.தி.மு.க. பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. தமிழக மக்களின் நலன் மட்டுமே எங்களது குறிக்கோள். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கொடி பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்க இருக்கிறேன். பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை கண்டித்து ம.தி.மு.க. போராட்டம் நடத்தியது. தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடுவோம்.

இவ்வாறு வைகோ கூறினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top